ஆவடி: ஆவடி பகுதியில் சாலையின் இரு புறமும் 2ம் கட்ட மழை நீர் கால்வாய் கட்டும் பணி ரூ.11.70 மதிப்பீட்டில் துவக்கப்பட உள்ளதாக நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஆவடி கோவில்பதாகை பிரதான சாலை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் ஒவ்வொரு ஆண்டும் மழை வெள்ளத்தால் பெரும் பாதிப்பு ஏற்பட்டது. அதேபோல், ஒவ்வொரு ஆண்டும் கோவில்பதாகை ஏரி நிரம்பி வழிந்தது. இதனால் அதன் அருகே உள்ள கணபதி அவென்யூவில் வசிக்கும் 50க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் வெள்ளத்தில் தத்தளித்து, மக்களின் இயல்பு வாழ்க்கை பாதித்தது.
அதை தவிர்க்கும் வகையில், கடந்த ஆண்டு ரூ.11.70 கோடி மதிப்பீட்டில், 3,200 மீட்டர் தூரத்திற்கு நெடுஞ்சாலைத்துறையினர் மழைநீர் வடிகால் அமைத்துள்ளனர். மீதமுள்ள இடங்களில் 2ம் கட்ட வடிகால் அமைக்காதால், இந்த ஆண்டும் கோவில்பதாகை ஏரியை சுற்றியுள்ள பகுதிகள் கடுமையான வெள்ள பாதிப்பை எதிர்கொள்ளும் என கூறப்படுகிறது. எனவே, மழைக்காலத்தில், கோவில்பதாகையில் இருந்து வெளியேறும் நீர், பிரதான சாலையில் முட்டி அளவுக்கு தேங்கி நின்று போக்குவரத்து பாதிப்பை ஏற்படுத்தி வந்தது.
இந்த வெள்ளப்பாதிப்பு பிரச்னைக்கு தீர்வு காண, கன்னடபாளையம் கிருஷ்ணா நதிநீர் கால்வாய் வரை மீதமுள்ள இடங்களில் மழைநீர் வடிகால் அமைக்க நெடுஞ்சாலைத் துறை திட்டமிட்டுள்ளது. அதன்படி, ரூ.10.05 கோடி மதிப்பில் சாலையின் இருபுறமும் 2,300 மீட்டர் தூரத்திற்கு மழைநீர் வடிகால் மற்றும் 4 இடங்களில் கல்வெட்டு அமைக்கும் பணியை விரைவில் துவங்க உள்ளதாக நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
The post சாலையின் இருபுறமும் ரூ.10.5 கோடி மதிப்பீட்டில் 2ம் கட்ட மழைநீர் கால்வாய் பணி: நெடுஞ்சாலைத்துறை தகவல் appeared first on Dinakaran.