இதனிடையே நூஹ் மாவட்டத்தில் நேற்று மூன்றாவது நாளாக ஆக்கிரமிப்பு அகற்றும் பணி நடந்தது. நேற்று சுமார் 25 மருத்துவக் கடைகள் மற்றும் பிற கடைகள் தரைமட்டமாக்கப்பட்டன. புலம்பெயர்ந்தோரின் குடிசைகளையும் அவர்கள் இடித்துத் தள்ளினார்கள். நல்ஹர் மருத்துவக் கல்லூரியை சுற்றி ஆக்கிரமிக்கப்பட்ட 2.6 ஏக்கர் நிலத்தில் உள்ள கட்டிடங்கள் புல்டோசர் மூலம் இடித்து தரைமட்டாக்கப்பட்டன. மேலும் 50 முதல் 60 கட்டடங்கள் இதுவரை இடிக்கப்பட்டுள்ளன. அந்த பகுதியை சேர்ந்தவர்கள் கைது நடவடிக்கைக்கு பயந்து ஓடிவிட்டனர்.
அரியானா மாநிலம் ரோஹ்தக்கில் உள்ள ஒரு மசூதியின் வாயிலில் சிலர் கற்களை வீசியதாகக் கூறப்படும் அடையாளம் தெரியாத நபர்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்தனர். ரோஹ்தக் ஆன்வால் கிராமத்தில் உள்ள மசூதியில் இரவு 11 மணி அளவில் ஒரு கும்பல் கற்களை வீசி தாக்கியது. இதுபற்றி மசூதி மதகுரு இக்பால் போலீசில் புகார் அளித்தார். அதன் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். மேலும் மசூதியைச் சுற்றி பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
சர்ச்சை வீடியோ பகிர்ந்தவர் கைது
உத்தரபிரதேசத்தைச் சேர்ந்த சஜித். இவர் அரியானா மாநிலம் பரிதாபாத் மாவட்டத்தில் உள்ள என்ஐடி-பரிதாபாத் பகுதியில் கடந்த 3 ஆண்டுகளாக சலூன் வைத்துள்ளார். அவர் மத உணர்வுகளைத் தூண்டுதல், சமூக நல்லிணக்கத்தை சீர்குலைத்தல் மற்றும் வெறுப்பு பேச்சு தொடர்பாக பேஸ்புக்கில் வீடியோ பதிவிட்டதாக போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். உபி பிஜ்னூரில் இருந்த சஜித்தை போலீசார் கைது செய்தனர்.
கலவரம் குறித்து உளவுத்துறை தகவல் இல்லை
யாத்திரை நடப்பதற்கு முன்பாக உளவுத்துறை எச்சரித்தும், மாநில அரசு கண்டுகொள்ளாமல் இருந்ததால் பயங்கர விளைவு ஏற்பட்டதாக பேசப்படுகிறது. இதுதொடர்பாக டிவி சேனல் எடுத்த ரகசிய வீடியோவில் சிஐடி போலீஸ் ஒருவரும் உளவு தகவல் குறித்த தகவல்களை பேசி உள்ளார். இந்த வீடியோ வைரலானதைத் தொடர்ந்து, இது குறித்து பேட்டி அளித்த அரியானா மாநில உள்துறை அமைச்சர் அனில் விஜ், ‘‘நூஹ் யாத்திரையில் வன்முறைக்கான சாத்தியம் குறித்த எந்த உளவுத்தகவலும் வரவில்லை. உள்துறை கூடுதல் தலைமை செயலாளர், டிஜிபிக்கும் எந்த உளவு தகவலும் வரவில்லை’’ என்றார்.
The post கலவரம் நடந்த பகுதியில் நடவடிக்கை; அரியானாவில் 3வது நாளாக ஆக்கிரமிப்பு கடைகள் இடிப்பு: மசூதியில் மர்ம கும்பல் கல்வீசி தாக்குதல் appeared first on Dinakaran.