மரம் வெட்டும் பணியில் ஈடுபடுத்தப்பட்ட 27 கொத்தடிமைகள் மீட்பு: தனியார் நிறுவன உரிமையாளருக்கு வலை

திருப்போரூர்: மாமல்லபுரத்தில் கடந்த மாதம் மாசி மகத் திருவிழாவின்போது ஏராளமான இருளர் பழங்குடியினர் கலந்துக் கொண்டனர். அப்போது, திருவள்ளூர் மாவட்டம், திருத்தணியை அடுத்த கிருஷ்ணாபுரம், திருக்கழுக்குன்றம், காஞ்சிபுரம், திருவண்ணாமலை ஆகிய பகுதிகளை சேர்ந்த இருளர் பழங்குடி மக்கள், கேளம்பாக்கம் அருகே மரம் வெட்டும் தொழிலில் கொத்தடிமைகளாக உள்ளனர் என்று விழாவிற்கு வந்த அதிகாரிகளிடம், இருளர் பழங்குடியின மக்கள் தெரிவித்தனர். இதுகுறித்து வருவாய்த்துறையினர் விசாரணை நடத்த, திருவள்ளூர் கலெக்டர் ராகுல்நாத் உத்தரவிட்டார்.

அதன்பேரில் வருவாய்த்துறையினர் நடத்திய விசாரணையில், கேளம்பாக்கம் அருகே தையூரில் தனியார் நிறுவனம் ஒன்றில் மரங்களை வெட்டும் பணியில், பழகுடியின மக்கள் சிலர் கொத்தடிமைகாக ஈடுபடுத்தப்பட்டுள்ளது கண்டுபிடிக்கப்பட்டது. இதனால், செங்கல்பட்டு கோட்டாட்சியர் இப்ராகிம், திருப்போரூர் வட்டாட்சியர் பூங்கொடி ஆகியோர் நேற்று முன்தினம் இரவு தையூர் பகுதியில் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது, தனியார் நிறுவனம் ஒன்றில் தங்க வைக்கப்பட்டிருந்த 11 சிறுவர்கள், 6 பெண்கள், 10 ஆண்கள் உள்ளிட்ட 27 பேர் அங்கிருந்து மீட்கப்பட்டு, இவர்கள் அனைவரையும், திருப்போரூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் தங்க வைக்கப்பட்டு உணவு வழங்கப்பட்டது.

இந்நிலையில், அவர்களின் சொந்த ஊருக்கு அனுப்பி வைக்கப்படுவர் என்றும், அவர்களின் வாழ்வாதாரத்திற்கு தேவைப்படும் அரிசி, மளிகைப் பொருட்கள், துணிமணிகள், நிவாரண உதவி போன்றவை வழங்கப்படும் என்றும் திருப்போரூர் வட்டாட்சியர் பூங்கொடி தெரிவித்தார்.மேலும், இவர்களை கொத்தடிமைகளாக தனியார் நிறுவன உரிமையாளர் கழிப்பட்டூரைச் சேர்ந்த பாலு என்பவரை போலீசார் தேடி வருகின்றனர்.

* 15 குடும்பங்களுக்கு நிவாரண உதவி
கேளம்பாக்கம் அருகே தையூரில் மீட்கப்பட்ட 15 குடும்பங்களைச் சேர்ந்த 27 கொத்தடிமைகளுக்கு மாவட்ட நிர்வாகம் சார்பில் நேற்று மாலை நிவாரண உதவி வழங்கப்பட்டது. ஒரு குடும்பத்திற்கு 30 ஆயிரம் ரூபாய் வீதம் 15 குடும்பங்களுக்கு 4 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் அவர்களின் வங்கிக்கணக்கில் செலுத்தப்பட்டு அதற்கான சான்றிதழ் உரிய நபரிடம் வழங்கப்பட்டது.

The post மரம் வெட்டும் பணியில் ஈடுபடுத்தப்பட்ட 27 கொத்தடிமைகள் மீட்பு: தனியார் நிறுவன உரிமையாளருக்கு வலை appeared first on Dinakaran.

Related Stories: