ஓபிஎஸ் முன்மொழிந்து இபிஎஸ் வழிமொழிந்து பொதுச்செயலாளரான என்னை நீக்கம் செய்தது செல்லாது: ஐகோர்ட்டில் சசிகலா வாதம்

சென்னை: இந்த வழக்கு நீதிபதிகள் ஆர்.சுப்ரமணியன் மற்றும் என்.செந்தில்குமார் ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, சசிகலா தரப்பில் மூத்த வழக்கறிஞர் ஜி.ராஜகோபாலன் ஆஜராகி, சசிகலாவை இடைக்கால பொதுச்செயலாளர் பதிவியில் இருந்து நீக்கியது சட்டவிரோதமானது என்றார். அப்போது நீதிபதிகள், இடைக்கால பொதுச்செயலாளர் என்ற பதவி அதிமுகவில் இருக்கிறதா? அதற்கு விதிகள் இருக்கிறதா? என்று கேட்டனர்.

அதற்கு பதிலளித்த சசிகலா தரப்பு வழக்கறிஞர் பதில் அளித்தார். இதையடுத்து நீதிபதிகள், ஒருவேளை நீங்கள் இடைக்கால பொதுச்செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டதே செல்லாது என்றால் நீங்கள் எப்படி மனு தாக்கல் செய்ய முடியும்? என்று கேட்டனர். அதற்கு, சசிகலா தரப்பு வழக்கறிஞர், பொதுக்குழு மூலம் உறுப்பினர்கள் தான் மனுதாரரை இடைக்கால பொதுச்செயலாளராக தேர்ந்தெடுத்தனர். பொதுச்செயலாளர் தேர்ந்தெடுக்கும் வரை இருந்த இடைக்கால பொதுச்செயலாளரான மதுசூதனன், ஓ.பன்னீர் செல்வம், எடப்பாடி பழனிசாமி உள்ளிடோர் முன்மொழிந்து, மற்ற பொதுக்குழு உறுப்பினர்கள் வழிமொழிந்து பொதுச்செயலாளராக மனுதாரரை தேர்ந்தெடுத்த நிலையில், அவரை பதவியில் இருந்து நீக்கியுள்ளனர்.

அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள், அடிப்படை அமைப்பு மாற்றப்பட்டதாக கூறுவதற்கு இது ஒன்றும் அரசியல் சாசனம் இல்லையே?. அதிமுகவில் நீங்கள் (மனுதாரர்) அடிப்படை உறுப்பினரா? எனக் கேள்வி எழுப்பினார். அதற்கு, சசிகலா நீண்ட காலமாக அதிமுகவின் அடிப்படை உறுப்பினர் என்று வாதிட்டார்.
இதையடுத்து, அதிமுக மற்றும் அதன் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தரப்பில் மூத்த வழக்கறிஞர் விஜய் நாராயணன் ஆஜராகி, பொதுக்குழுவிற்கு மட்டுமே உச்சபட்ச அதிகாரம் உள்ளது. 2,665 பொதுக்குழு உறுப்பினர்கள் கூடி தான் பொதுச்செயலாளரை தேர்வு செய்ய முடியும்.

அதிமுகவின் நிறுவனர் எம்.ஜி.ஆரின் மறைவிற்கு பிறகு பொதுச்செயலாளராக ஜெயலலிதா இதேபோல்தான் தேர்வு செய்யப்பட்டார். கடந்தாண்டு பொதுக்குழு கூட்டத்தில் ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகள் நீக்கபட்டு, சட்ட விதியில் திருத்தங்கள் கொண்டு வரப்பட்டது. இந்த மனுவை தாக்கல் செய்த போது சசிகலா உறுப்பினராக இல்லை என்றார். அதற்கு நீதிபதிகள், அடிப்படை உறுப்பினர் என்ற முறையில் வழக்கு தொடர உரிமை இருக்கிறதா? என்று கேட்டனர்.

அதற்கு பதிலளித்த அதிமுக மற்றும் எடப்பாடி தரப்பு வழக்கறிஞர், வழக்கு தொடர உரிமை உள்ளது. ஆனால், அடிப்படை உறுப்பினராக இல்லாத சசிகலா தாக்கல் செய்த இந்த மனு விசாரணைக்கு உகந்ததல்ல என்றார். வாதங்கள் நிறைவடையாததால் விசாரணையை நீதிபதிகள் நாளைக்கு தள்ளிவைப்பதாக தெரிவித்தனர். இந்த வழக்கு இன்று தொடர்ந்து விசாரணைக்கு வரவுள்ளது.

The post ஓபிஎஸ் முன்மொழிந்து இபிஎஸ் வழிமொழிந்து பொதுச்செயலாளரான என்னை நீக்கம் செய்தது செல்லாது: ஐகோர்ட்டில் சசிகலா வாதம் appeared first on Dinakaran.

Related Stories: