பூந்தமல்லி அருகே ஆக்கிரமிப்பில் இருந்த ரூ.100 கோடி மதிப்பு கோயில் நிலம் மீட்பு: அறநிலையத்துறை நடவடிக்கை

பூந்தமல்லி: பூந்தமல்லி அருகே, ஆக்கிரமிப்பில் இருந்த ரூ.100 கோடி மதிப்பிலான கோயில் நிலத்தை அறநிலையத்துறை அதிகாரிகள் அதிரடியாக மீட்டனர். பூந்தமல்லி அருகே வரதராஜபுரம் ஊராட்சியில் புகழ்பெற்ற சித்திபுத்தி விநாயகர் கோயில் உள்ளது. இக்கோயிலுக்கு சொந்தமான 1.01 ஏக்கர் நிலம், பூந்தமல்லி அருகே பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் உள்ளது. இந்த கோயில் நிலத்தை பல ஆண்டுகளுக்கு முன், தனிநபர்கள் சிலர் ஆக்கிரமித்து, அங்கு வணிக வளாக கட்டிடங்கள் கட்டியுள்ளனர்.

தகவலறிந்த இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் சம்பவ இடத்தில் ஆய்வு செய்து, கோயில் நில ஆக்கிரமிப்பில் இருந்தவர்களை காலி செய்யும்படி நோட்டீஸ் வழங்கினர். ஆனால், அவர்கள் காலி செய்யவில்லை. இதுதொடர்பாக, உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இதை விசாரித்த நீதிமன்றம், கோயில் நில ஆக்கிரமிப்பில் உள்ள கட்டிடங்களை இடித்து அகற்ற வேண்டும் என அறநிலையத்துறை அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டது.

அதன்பேரில், அறநிலையத்துறை மாவட்ட உதவி ஆணையர் ஜெயா தலைமையில், சித்திபுத்தி விநாயகர் கோயில் செயல் அலுவலர் மாதவன், பூந்தமல்லி தாசில்தார் மாலினி மேற்பார்வையில், நேற்று காலை சித்திபுத்தி விநாயகர் கோயிலுக்கு சொந்தமான 1.01 ஏக்கர் நில ஆக்கிரமிப்புகளை பொக்லைன் இயந்திரம் மூலமாக அகற்றினர். பின்னர், கோயில் நில ஆக்கிரமிப்பில் இருந்த கட்டிடங்களை அறநிலையத்துறை அதிகாரிகள் பூட்டி சீல் வைத்தனர்.

தொடர்ந்து, அப்பகுதியில், ‘‘இது கோயிலுக்கு சொந்தமான நிலம். இங்கு அத்துமீறி ஆக்கிரமிப்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்,’’ என அறநிலையத்துறை அதிகாரிகள் எச்சரிக்கை பலகை வைத்துள்ளனர். முன்னதாக, கோயில் நில ஆக்கிரமிப்பில் இருந்த கட்டிடங்களுக்கு மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது. மேலும், அங்கு அசம்பாவிதம் நிகழ்வதை தடுக்க நசரத்பேட்டை போலீசார் பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டனர். மீட்கப்பட்ட நிலத்தின் மதிப்பு ரூ.100 கோடி என அதிகாரிகள் தெரிவித்தனர். இதனால் அங்கு பரபரப்பு நிலவியது.

The post பூந்தமல்லி அருகே ஆக்கிரமிப்பில் இருந்த ரூ.100 கோடி மதிப்பு கோயில் நிலம் மீட்பு: அறநிலையத்துறை நடவடிக்கை appeared first on Dinakaran.

Related Stories: