ரசீது ஆவணத்திற்கு பதிவு கட்டணம் ரூ.20லிருந்து ரூ.200 ஆக உயர்வு: பத்திரப்பதிவு சேவை கட்டண உயர்வு ஜூலை 10 முதல் அமல்.! தமிழக அரசு அறிவிப்பு

சென்னை: அனைத்து பத்திரப்பதிவு சேவை கட்டணம் உயர்வு; ஜூலை 10 முதல் நடைமுறைக்கு வருகிறது என தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. பதிவுத்துறையில் அளிக்கப்படும் சேவைகளுக்கான கட்டணங்கள் 20 வருடங்களுக்கு மேலாக மாற்றம் செய்யப்படவில்லை. எனவே, பதிவுத்துறையால் வழங்கப்பட்டு வருகின்ற ஆவண பதிவு, பதிவு செய்யப்படும் ஆவணத்தினை பாதுகாத்தல், மின்னணு சாதனத்திலிருந்து ஆவண நகல்கள் வழங்குதல் போன்ற சேவைகளைப் பொருத்து கட்டண வீதங்களை மாற்றியமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதனடிப்படையில் பதிவுச்சட்டம், 1908-இன் பிரிவு 78-இல் கட்டண விவர அட்டவணையிலுள்ள 20 இனங்களுக்கான கட்டண வீதங்களும் சில ஆவணப் பதிவுகளுக்கான பதிவு மற்றும் முத்திரை கட்டண வீதங்களும் திருத்தியமைக்கப்பட்டுள்ளன.

எடுத்துக்காட்டாக, ரசீது ஆவணத்திற்கு பதிவு கட்டணம் ரூ.20/-லிருந்து ரூ.200/- எனவும், குடும்ப நபர்களுக்கு இடையேயான செட்டில்மெண்ட், பாகம் மற்றும் விடுதலை ஆவணங்களுக்கு அதிகபட்ச பதிவு கட்டணம் ரூ.4,000/-லிருந்து ரூ.10,000/- எனவும், அதிகபட்ச முத்திரை தீர்வை ரூ.25,000/-லிருந்து ரூ.40,000/- எனவும், தனி மனை பதிவிற்கான கட்டணம் ரூ.200/-லிருந்து ரூ.1,000/- எனவும், குடும்ப உறுப்பினர்கள் அல்லாத பொது அதிகார ஆவணங்களுக்கு பதிவுக் கட்டணம் ரூ.10,000/- என்று உள்ளதை சொத்தின் சந்தை மதிப்பிற்கு ஒரு சதவீதம் எனவும் மாற்றியமைப்பது உள்ளிட்டவை இதில் அடங்கும். இது 10.07.2023 முதல் நடைமுறைக்கு வருகிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post ரசீது ஆவணத்திற்கு பதிவு கட்டணம் ரூ.20லிருந்து ரூ.200 ஆக உயர்வு: பத்திரப்பதிவு சேவை கட்டண உயர்வு ஜூலை 10 முதல் அமல்.! தமிழக அரசு அறிவிப்பு appeared first on Dinakaran.

Related Stories: