அரசுக்கு ராமதாஸ் வலியுறுத்தல் மேட்டூர் அணையை தூர்வாரினால் மேலும் 30 டிஎம்சி நீரை தேக்கலாம்

சென்னை: ‘மேட்டூர் அணை கொள்ளளவை 30 டிஎம்சி அதிகரிக்கும் வகையில், அணையை தூர்வார வேண்டும்’ என பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கை : காவிரி ஆற்றின் குறுக்கே தமிழ்நாட்டில் கட்டப்பட்டுள்ள ஒரே நீர்த்தேக்கமான மேட்டூர் அணையின் இப்போதைய கொள்ளளவு 93 டி.எம்.சி; நீர்மட்டம் 120 அடி ஆகும். மேட்டூர் அணையை தூர் வாருவதன் மூலம் அடுத்த ஐந்தாண்டுகளில் அதன் கொள்ளளவை 30 டி.எம்.சி, அதாவது 123 டி.எம்.சியாக உயர்த்தும் திட்டத்தை தமிழக அரசின் நீர்வளத்துறை தயாரித்திருக்கிறது. ஆனால், இந்தத் திட்டத்தை செயல்படுத்த தமிழக அரசு ஒப்புதல் அளிக்கவில்லை.

காரணம் இதன் திட்ட செலவு ரூ.3,000 கோடி என மதிப்பிடப்பட்டிருக்கிறது. மேட்டூர் அணையில் கொள்ளளவு அதிகரிக்கப்படுவதால் கிடைக்கும் பயன்களுடன் ஒப்பிடும் போது இந்த செலவு மிகவும் குறைவாகும். இந்த நிதியை ஐந்தாண்டுகளில் 5 சம தவணைகளாக திட்டத்தை செயல்படுத்தும் போது ஆண்டுக்கு ரூ.600 கோடி செலவிடுவது சுமையாக இருக்காது. மேட்டூர் அணையை தூர்வாரும் போது, அதிலிருந்து கிடைக்கும் மண்ணை விற்பனை செய்ய முடியும். மண் விற்பனை மூலம் கிடைக்கும் வருவாயைக் கொண்டு சமாளிக்க முடியும். எனவே, காவிரி பாசனப் பகுதிகளின் வளத்தையும், உழவர்களின் நலனையும் கருத்தில் கொண்டு மேட்டூர் அணையை தூர்வாரி அதன் கொள்ளளவை 30 டி.எம்.சி அதிகரிக்கும் திட்டத்தை செயல்படுத்த அரசு முன்வர வேண்டும்.

The post அரசுக்கு ராமதாஸ் வலியுறுத்தல் மேட்டூர் அணையை தூர்வாரினால் மேலும் 30 டிஎம்சி நீரை தேக்கலாம் appeared first on Dinakaran.

Related Stories: