காப்பீட்டு திட்டங்களை செயல்படுத்த பயிர் காப்பீடு நிறுவனத்தை அரசே தொடங்க வேண்டும்: ராமதாஸ் கோரிக்கை

 

சென்னை: பாமக நிறுவனர் ராமதாஸ் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை: தனியார் பயிர்க்காப்பீட்டு நிறுவனங்கள் உழவர்களை பாதுகாப்பதை விட அவர்களை சுரண்டுவதில் தான் கவனம் செலுத்துகின்றன. கடந்த 2021-22ம் ஆண்டில் தமிழ்நாடு முழுவதும் சம்பா நெற்பயிர்களுக்கான காப்பீட்டு பிரீமியமாக ரூ.2413 கோடி வசூலிக்கப்பட்ட நிலையில், உழவர்களுக்கான இழப்பீடாக ரூ.481 கோடி மட்டும் தான் காப்பீட்டு நிறுவனங்களால் வழங்கப்பட்டது. அந்த ஆண்டில் காப்பீட்டு நிறுவனங்களுக்கு கிடைத்த லாபத்தின் அளவு மட்டும் ரூ.1932 கோடி.

இப்படி ஒவ்வொரு ஆண்டும் காப்பீட்டு நிறுவனங்களுக்கு தான் மிகப்பெரிய அளவில் லாபம் கிடைக்கிறதே தவிர, உழவர்களுக்கு எந்த பயனும் ஏற்படுவதில்லை. கடந்த ஐந்தாண்டுகளில் பயிர்க்காப்பீட்டு திட்டங்கள் செயல்படுத்தப்பட்ட விதம் குறித்து ஆய்வு செய்தால், பயிர்க்காப்பீட்டுத் திட்டம் என்பது உழவர்களுக்கானது அல்ல. காப்பீட்டு நிறுவனங்களுக்கானது தான் என்பதை புரிந்து கொள்ள முடியும். காப்பீட்டுத் திட்டம் என்பது அதை செயல்படுத்தும் நிறுவனங்களின் நலனுக்காக இருக்கக்கூடாது; உழவர்களின் நலனுக்காகத்தான் இருக்க வேண்டும். அதை கருத்தில் கொண்டு, காப்பீட்டுத் திட்டங்களை செயல்படுத்த தமிழக அரசே பயிர்க்காப்பீட்டு நிறுவனம் ஒன்றை தொடங்க வேண்டும். அதன் மூலம் உழவர்களைக் காக்க வேண்டும். இவ்வாறு அறிக்கையில் கூறியுள்ளார்.

The post காப்பீட்டு திட்டங்களை செயல்படுத்த பயிர் காப்பீடு நிறுவனத்தை அரசே தொடங்க வேண்டும்: ராமதாஸ் கோரிக்கை appeared first on Dinakaran.

Related Stories: