ஜெய்ஸ்வால் அதிரடி அரை சதம் சென்னையை வீழ்த்தியது ராஜஸ்தான்

ஜெய்பூர்: சென்னை சூப்பர் கிங்ஸ் அணியுடனான ஐபிஎல் லீக் ஆட்டத்தில், ராஜஸ்தான் ராயல்ஸ் 32 ரன் வித்தியாசத்தில் வென்றது. சவாய் மான்சிங் ஸ்டேடியத்தில் நேற்று இரவு நடந்த இப்போட்டியில், டாஸ் வென்ற ராஜஸ்தான் முதலில் பேட் செய்தது. ஜெய்ஸ்வால், பட்லர் இணைந்து ராயல்ஸ் இன்னிங்சை தொடங்கினர். பட்லர் பொறுப்புடன் கம்பெனி கொடுக்க, அதிரடியில் இறங்கிய ஜெய்ஸ்வால் 26 பந்தில் அரை சதம் அடித்தார். இருவரும் முதல் விக்கெட்டுக்கு 8.1 ஓவரில் 86 ரன் சேர்த்து வலுவான தொடக்கத்தை கொடுத்தனர்.

பட்லர் 27 ரன் (21 பந்து, 4 பவுண்டரி) எடுத்து ஜடேஜா சுழலில் துபே வசம் பிடிபட்டார். அடுத்து ஜெய்ஸ்வாலுடன் சாம்சன் ஜோடி சேர்ந்து 2வது விக்கெட்டுக்கு 39 ரன் சேர்த்தார். சாம்சன் 17 ரன், ஜெய்ஸ்வால் 77 ரன் (43 பந்து, 8 பவுண்டரி, 4 சிக்சர்) விளாசி தேஷ்பாண்டே வீசிய 14வது ஓவரில் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். ஹெட்மயர் 8 ரன் எடுத்து வெளியேற, ராஜஸ்தான் 146 ரன்னுக்கு 4 விக்கெட் இழந்து சற்றே தடுமாறியது. இந்த நிலையில், ஜுரெல் – படிக்கல் இணைந்து 5வது விக்கெட்டுக்கு பவுண்டரியும் சிக்சருமாகப் பறக்கவிட்டு ராயல்ஸ் ஸ்கோரை உயர்த்தினர். ஜுரெல் 34 ரன் (15 பந்து, 3 பவுண்டரி, 2 சிக்சர்) விளாசி ரன் அவுட்டானார்.

ராஜஸ்தான் 20 ஓவர் முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 202 ரன் குவித்தது. படிக்கல் 27 ரன் (13 பந்து, 5 பவுண்டரி), அஷ்வின் 1 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனர். சென்னை பந்துவீச்சில் தேஷ்பாண்டே 2, தீகஷனா, ஜடேஜா தலா 1 விக்கெட் வீழ்த்தினர். அடுத்து களமிறங்கிய சென்னை அணி 20 ஓவரில் 6 விக்கெட் இழப்புக்கு 170 ரன் எடுத்து, 32 ரன் வித்தியாசத்தில் தோற்றது. ஷிவம் துபே அதிகபட்சமாக 52 ரன் (33 பந்து, 2 பவுண்டரி, 4 சிக்சர்) விளாசினார். ரிதுராஜ் கெய்க்வாட் 47 ரன் எடுத்தார். ராஜஸ்தான் பந்துவீச்சில் ஆடம் சம்பா 3 விக்கெட், அஸ்வின் 2 விக்கெட், குல்தீப் யாதவ் 1 விக்கெட்டும் வீழ்த்தினர். ராஜஸ்தான் 8 போட்டியில் 5வது வெற்றியுடன் 10 புள்ளிகள் பெற்று 1வது இடத்துக்கு முன்னேறியது.

The post ஜெய்ஸ்வால் அதிரடி அரை சதம் சென்னையை வீழ்த்தியது ராஜஸ்தான் appeared first on Dinakaran.

Related Stories: