ராமேஸ்வரம் கோயிலுக்குள் அருவியாக கொட்டிய மழைநீர்: பக்தர்கள் கடும் அவதி

ராமேஸ்வரம்: ராமேஸ்வரம் கோயில் பிரகாரத்தில் அருவி போல கொட்டிய மழை நீரால் பக்தர்கள் அவதியடைந்தனர். ராமேஸ்வரம் நகர் பகுதியில் நேற்று காலை 10.30 மணி முதல் இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக பலத்த மழை பெய்தது. இடைவெளியின்றி பெய்த மழையால் தெருக்களில் உள்ள கால்வாய்களில் இருந்து வெளியேறிய கழிவு நீருடன், மழைநீரும் சேர்ந்து சாலையில் கரை புரண்டு ஓடியது. பாதாள சாக்கடை திட்டப்பணிகள் முடிக்கப்படாததாலும், சமீபத்தில் தேசிய நெடுஞ்சாலை ஓரத்தில் அமைக்கப்பட்ட கால்வாயில் மழை நீர் செல்லாததாலும் சாலையில் ஆங்காங்கே மழைநீர் குளம் போல் தேங்கியது.

இதனால் வாகன ஓட்டிகள் மிகவும் சிரமத்துடன் வாகனங்களை ஓட்டிச் சென்றனர். மேலும், ராமேஸ்வரம் ராமநாத சுவாமி கோயில் பிரகாரத்திலும் மழைநீர் புகுந்தது. கோயிலின் மூன்றாம் பிரகாரம் தெற்கு பகுதியில் சமீபத்தில் சுற்றுச்சுவரின் ஒருபகுதி உடைத்து வெளிப்பகுதிக்கு செல்ல வழி ஏற்படுத்தப்பட்டது. திடீரென்று பெய்த மழையால் உடைத்து அகற்றப்பட்ட சுவர் பகுதி வழியாக மழைநீர் கோயிலுக்குள் புகுந்து அருவி போல கொட்டியது.

இதனால் மூன்றாம் பிரகார தளங்களில் ஓடிய மழைநீர், அம்பாள் சன்னதி செல்லும் வழியெங்கும் தேங்கி நின்றது. இதனால் பிரகாரத்தில் நடந்து சென்ற பக்தர்கள் அவதியடைந்தனர். கோயில் ஊழியர்கள் பிரகாரத்தில் தேங்கிய மழை நீரை மோட்டார் வைத்து அகற்றும் பணியில் ஈடுபட்டனர். நேற்று பகல் 2 மணி நேரத்தில் மட்டும் சராசரியாக ராமேஸ்வரம் நகரில் 2 செமீ அளவுக்கு மழை பெய்துள்ளது.

The post ராமேஸ்வரம் கோயிலுக்குள் அருவியாக கொட்டிய மழைநீர்: பக்தர்கள் கடும் அவதி appeared first on Dinakaran.

Related Stories: