தேர்தல் நெருங்குவதால் அறிவிப்புகளை வெளியிடும் பாஜ அரசு: ரூ32,500 கோடியில் ரயில்வே விரிவாக்க திட்டங்கள்

* விஸ்வகர்மா திட்டத்திற்கு ரூ13,000 கோடி
* ரூ14,903 கோடியில் டிஜிட்டல் இந்தியா

புதுடெல்லி: மக்களவை தேர்தல் நெருங்குவதால் பல திட்டங்களை பாஜ அரசு திடீரென நேற்று அறிவித்தது. இதன்படி, ரயில்வே திட்டங்களுக்கு ரூ.32,500 கோடி, டிஜிட்டல் இந்தியா திட்டத்துக்கு ரூ. 14,903 கோடி, விஸ்கர்மா திட்டத்துக்கு ரூ.13000 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. பிரதமர் மோடி தலைமையில் பொருளாதார விவகாரங்களுக்கான அமைச்சரவை குழு கூட்டம் டெல்லியில் நேற்று நடந்தது. இதில், பிரதம மந்திரி விஸ்வகர்மா திட்டத்திற்கு அடுத்த 5 ஆண்டுகளுக்கு ரூ.13,000 நிதி ஒதுக்கீடு செய்ய ஒப்புதல் வழங்கப்பட்டது. இத்திட்டத்தின் கீழ், கைவினைக் கலைஞர்களுக்கு முதல் கட்டமாக 5 சதவீத வட்டியில் ரூ.1 லட்சம் வரை கடன் வழங்கப்படும். 2ம் கட்டமாக ரூ.2 லட்சம் வரை கடனுதவி வழங்கப்படும்.

மேலும், திறன் மேம்பாட்டு பயிற்சி வழங்கப்படுவதோடு, பயிற்சிக்காலத்தில் உதவித்தொகையாக தினசரி ரூ.500 வழங்கப்படும். அதோடு நவீன உபகரணங்கள் வாங்க ரூ.15,000 வரையிலும் நிதி உதவி செய்யப்படும். இது குறித்து கூட்டத்திற்கு பின் பேட்டி அளித்த ஒன்றிய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், ‘‘இத்திட்டத்தில் முதல் ஆண்டில் 5 லட்சம் குடும்பங்களும் அடுத்த 5 ஆண்டில் 30 லட்சம் குடும்பங்களும் பலன் அடைவார்கள்’’ என்றார். இந்த திட்டத்தில், நெசவாளர்கள், நகை வடிவமைப்பாளர்கள், கருவிகள் செய்பவர்கள், துணி துவைப்பவர்கள், முடி திருத்தம் செய்வோர் என 18 வகையான பாரம்பரிய கைவினைத் தொழில் சேர்க்கப்பட்டுள்ளன.

இதே போல, ரூ.32,500 கோடி மதிப்பீட்டில் ரயில்வேயின் ஏழு மல்டி-டிராக்கிங் திட்டங்களுக்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. உத்தரப்பிரதேசம், பீகார், தெலங்கானா, ஆந்திரா, மகாராஷ்டிரா, குஜராத், ஒடிசா, ஜார்க்கண்ட் மற்றும் மேற்கு வங்கம் ஆகிய 9 மாநிலங்களில் உள்ள 35 மாவட்டங்களை உள்ளடக்கிய இத்திட்டத்தின் மூலம் ரயில்வேயின் தற்போதைய நெட்வொர்க்கில் மேலும் 2,339 கிமீ அதிகரிக்கும். மேலும், ரூ. 14,903 கோடி நிதி ஒதுக்கீட்டுடன் டிஜிட்டல் இந்தியா திட்ட விரிவாக்கத்திற்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
மக்களவை தேர்தல் அறிவிப்பு வெளியாவதற்கு இன்னும் சில மாதங்கள் மட்டுமே உள்ளன. இந்த நிலையில், இதுவரை பெரிய அளவில் திட்டங்கள் எதையும் அறிவிக்காத ஒன்றிய பாஜ அரசு திடீரென நேற்று பல திட்டங்களை அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

10,000 மின்சார பஸ் சேவை
அமைச்சரவை கூட்டத்தில், பிரதமரின்-மின்சார பஸ் சேவை திட்டத்திற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்திற்கு ரூ.57,613 கோடி செலவாகும். இதில் ரூ.20,000 கோடி நிதியை ஒன்றிய அரசு வழங்கும். தனியார் ஒத்துழைப்புடன் 169 நகரங்களில் 10,000 மின்சார பஸ்கள் நகர பஸ் சேவையில் இணைக்கப்படும். இதன் மூலம் 55,000 பேருக்கு நேரடி வேலைவாய்ப்பு கிடைக்கும் என அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post தேர்தல் நெருங்குவதால் அறிவிப்புகளை வெளியிடும் பாஜ அரசு: ரூ32,500 கோடியில் ரயில்வே விரிவாக்க திட்டங்கள் appeared first on Dinakaran.

Related Stories: