×

ராதாபுரத்தில் 88.4 மி.மீ. கொட்டித் தீர்த்த மழை

 

நெல்லை, மே 1: நெல்ைல மாவட்டத்தில் கடந்த 6 நாட்களாக பெய்த கோடை மழையால் வெப்பம் தணிந்து பூமி குளிர்ந்தது. ராதாபுரத்தில் ஒரே நாளில் 88.4 மி.மீ. மழை கொட்டித் தீர்த்துள்ளது. இவ்வாறு தொடர் மழையால் நெல்லை மாவட்டம் குளுமையான சீதோஷ்ணத்திற்கு மாறி மக்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியது. நெல்லை மாவட்டத்தில் கத்திரி வெயில் எனப்படும் அக்னி நட்சத்திரம் வரும் மே 4ம் தேதி துவங்கி வரும் 29ம் தேதி வரை நீடிக்க உள்ளது. ஆனால், அதற்கு முன்னரே கோடை போல் வெயில் கொளுத்தி வந்தது. வெப்ப தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வந்ததால் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நிலத்தடி நீர்மட்டம் வெகுவாகக் குறைந்தது. மழைக்காக மக்கள் ஏங்கிய நிலையில் கடந்த 6 நாட்களாக நெல்லை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் கோடை மழை பெய்து குளிர்வித்து வருகிறது. நேற்று முன்தினம் பகலிலும் இரவிலும் பல பகுதிகளில் கன மழை பெய்தது. அதிகபட்சமாக ராதாபுரம் வட்டாரத்தில் 88.4 மி.மீ. அளவுக்கு கொட்டித் தீர்த்தது. கொடுமுடியாறு அணை பகுதியில் 28 மி.மீ., நம்பியாறு பகுதியில் 26 மி.மீ. மழை பெய்தது. சேர்வலாறு அணை பகுதியில் 22 மி.மீ., பாபாநாசம் 14, மாஞ்சோலை 13, நெல்ைல 10.6, மணிமுத்தாறு 8.4, காக்காச்சி 8, பாளை 7, சேரன்மகாதேவி 5.6, அம்பை 4.6, நாலுமுக்கு 4, ஊத்து 2 மி.மீ. மழை பெய்துள்ளது.

The post ராதாபுரத்தில் 88.4 மி.மீ. கொட்டித் தீர்த்த மழை appeared first on Dinakaran.

Tags : Radhapuram ,Nellai ,Dinakaran ,
× RELATED தமிழகத்தின் பல மாவட்டங்களை குளிர்வித்த கோடை மழை!!