*ஒன்றரை மணி நேரம் ரயில்கள் நிறுத்தம்
செங்கோட்டை : புனலூர் – செங்கோட்டை இடையே ரயில் பாதையில் திடீரென மண் சரிவு ஏற்பட்டது. இதனால் ஒரு மணி நேரம் ரயில்கள் தாமதாக இயக்கப்பட்டன.
தமிழகம் – கேரளா மாநிலங்களை இணைக்கும் செங்கோட்டை – புனலூர் ரயில் வழித்தடம் முக்கியமான ஒன்றாக உள்ளது. இந்த வழித்தடத்தில் புளியரை முதல் தென்மலை வரை அடர்ந்த வனப்பகுதி மற்றும் பாறைகள், பள்ளதாக்குகள் நிறைந்த பகுதி ஆகும். இந்த வழிதடத்தில் பாலருவி எக்ஸ்பிரஸ் மற்றும் சென்னை – கொல்லம் எக்ஸ்பிரஸ், பயணிகள் ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன.
இந்நிலையில் கேரள பகுதியில் பெய்து வரும் மழை காரணமாக தென்மலை அருகே புனலூர் – செங்கோட்டை ரயில் பாதையில் நேற்று முன்தினம் மதியம் 1 மணியளவில் திடீரென மண் சரிவு ஏற்பட்டது. இதில் ரயில்வே பாதையில் மண், பாறைகள் உருண்டு விழுந்தன. இதனால் தண்டவாளத்தில் சிமென்ட் ஸ்லீப்பர் கட்டைகள் உடைந்தன. இதையடுத்து புனலூரிலிருந்து வந்த கொல்லம்-சென்னை எழும்பூர் எக்ஸ்பிரஸ் ரயில் தென்மலையில் நிறுத்தி வைக்கப்பட்டது.
குருவாயூர் – மதுரை எக்ஸ்பிரஸ் புனலூரில் நிறுத்தி வைக்கப்பட்டது. பின்னர் பாறை மற்றும் மண் பொக்லைன் இயந்திரம் மூலம் அகற்றப்பட்டு சரக்கு ரயில் மூலம் கொண்டு செல்லப்பட்டது. சுமார் ஒன்றரை மணி நேரம் இந்த பணி வேகமாக நடந்தது. பின்னர் ஸ்லீப்பர் கட்டைகள் புதிதாக மாற்றப்பட்டு ரயில் பாதை சீரமைக்கப்பட்டது. இதனை தொடர்ந்து ரயில்கள் ஒரு மணி நேரம் தாமதமாக புறப்பட்டு சென்றன. கடந்த 2018 முதல் ஐந்து முறை இதே இடத்தில் மண் மற்றும் பாறைகள் சரிந்து விழுந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
The post புனலூர் – செங்கோட்டை ரயில் பாதையில் திடீர் மண் சரிவு appeared first on Dinakaran.