×

சோளக்காட்டில் சுற்றுலா பயணிகளை அச்சுறுத்தும் சிறுத்தை

சேந்தமங்கலம்: நாமக்கல் மாவட்டம் கொல்லிமலை ஒன்றியம், குண்டூர்நாடு ஊராட்சி இலக்கியம்பட்டி, அரியூர் சோலை, நத்துக்குழிப்பட்டி உள்ளிட்ட பகுதியைச் சேர்ந்த விவசாயிகள், விவசாயத்துடன் ஆடுகளையும் வளர்த்து வருகின்றனர். இவர்களில் சங்கர் மற்றும் சின்னசாமி, பழனிசாமி ஆகியோரது தோட்டத்தில் கட்டி வைக்கப்பட்டிருந்த 10க்கும் மேற்பட்ட ஆடுகளை, மர்ம விலங்கு கடித்து கொன்றது. இதையடுத்து, அப்பகுதியில் சிறுத்தை நடமாட்டம் இருப்பதாக அச்சம் தெரிவித்து, வனத்துறையினரிடம் பொதுமக்கள் புகார் தெரிவித்திருந்தனர். இதன்பேரில், வனத்துறை அதிகாரிகள், ஆடுகள் இறந்து கிடந்த இடத்தில் பதிந்த கால் தடத்தை ஆய்வு செய்தனர். இதுகுறித்து வாழவந்திநாடு போலீசார், அப்பகுதியில் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில், குண்டூர்நாடு நத்துக்குழிப்பட்டி பகுதியில், நேற்று முன்தினம் அதிகாலை நேரத்தில் வினோதமான சத்தம் கேட்டு, பெட்டிக்கடை நடத்தி வரும் மூதாட்டி ஒருவர், கதவை லேசாக திறந்து பார்த்துள்ளார். அப்போது, ரோட்டில் சிறுத்தை ஒன்று உறுமியவாறு நடந்து சென்றதை கண்டு திடுக்கிட்டார். இதுகுறித்து போலீசாரிடம் தெரிவித்துள்ளார். உடனே, போலீசார் தரப்பிலிருந்து அப்பகுதியில் உள்ள தனியார் தங்கும் விடுதி உரிமையாளர்களுக்கு எச்சரிக்கை தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. கொல்லிமலை வனப்பகுதியில் கரடி, காட்டெருமை, மான், மலைப்பாம்பு இருப்பது ஏற்கனவே உறுதி செய்யப்பட்டுள்ளது. தற்போது, சிறுத்தை நடமாட்டம் உறுதி செய்யப்பட்டிருப்பதால், சுற்றுலா பயணிகளிடையே அச்சம் ஏற்பட்டுள்ளது.

இதனையடுத்து, சுற்றுலா இடங்களுக்கு யாரும் தனியாக செல்லக் கூடாது. குழுவாக செல்ல வேண்டும். காப்புக்காடு வனப்பகுதிக்குள் செல்ல அனுமதி இல்லை. எனவே, எச்சரிக்கையாக இருக்க வேண்டுமென அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு, கொல்லிமலைக்கு சுற்றுலா வந்த பயணிகள், சோளக்காட்டில் இருந்து குழிவளவு சாலையில் காரில் சென்றபோது, சாலையோர தடுப்பு சுவரில் சிறுத்தை ஒன்று படித்திருப்பதை தங்களது செல்போனில் வீடியோ எடுத்து, அதனை இணையதளத்தில் வெளியிட்டுள்ளனர். இந்த வீடியோ வைரலாகி வருவதால், மலைவாழ் மக்களிடம் பெரும் அச்சம் ஏற்பட்டுள்ளது.

The post சோளக்காட்டில் சுற்றுலா பயணிகளை அச்சுறுத்தும் சிறுத்தை appeared first on Dinakaran.

Tags : SENTHAMANGALAM ,NAMAKKAL DISTRICT ,KOLLIMALAI ,UNION ,KUNDURNADU URATCHI LITERATI ,ARIYUR ,CHOLI ,NATHUKULIPATTI ,Sankar ,Sinnasami ,Palanisami ,Solakat ,Dinakaran ,
× RELATED கொல்லிமலை வனப்பகுதியில் டிரோன் கேமராவில் படம் பிடித்த 2 பேருக்கு அபராதம்