×

பொது தரிசனத்திற்கு திறக்கப்பட்ட முதல் நாளில் அயோத்தி ராமர் கோயிலில் கட்டுக்கடங்காத பக்தர்கள்: 5 லட்சம் பேர் பால ராமரை வழிபட்டனர்

அயோத்தி: அயோத்தி ராமர் கோயில் பொது தரிசனத்திற்கு நேற்று திறக்கப்பட்டதும் கட்டுக்கடங்காத பக்தர்கள் குவிந்ததால் கடும் நெரிசல் ஏற்பட்டது. முதல் நாளில் கிட்டத்தட்ட 5 லட்சம் பக்தர்கள் தரிசனம் செய்திருக்கலாம் என கூறப்படுகிறது. அயோத்தியில் கட்டப்பட்டுள்ள ராமர் கோயிலில் பால ராமர் சிலை பிராண பிரதிஷ்டை விழா நேற்று முன்தினம் கோலாகலமாக நடந்தது. 5 வயது பால ராமர் சிலைக்கு பிரதமர் மோடி சிறப்பு பூஜைகள் செய்து கோயிலை முறைப்படி திறந்து வைத்தார். இதில், 7,000 சிறப்பு விருந்தினர்கள் பங்கேற்று பால ராமரை தரிசித்தனர். பொதுமக்கள் அனுமதிக்கப்படவில்லை.

இந்நிலையில், நேற்று முதல் பொதுமக்கள் தரிசிக்க அனுமதிக்கப்படுவார்கள் என அறிவிக்கப்பட்டிருந்தது. காலை 7 மணி முதல் முற்பகல் 11.30 மணி வரையிலும், மதியம் 2 மணி முதல் இரவு 7 மணி வரையிலும் பால ராமரை தரிசிக்கலாம் என ராம ஜென்ம பூமி அறக்கட்டளை நிர்வாகம் அறிவித்திருந்தது. இதனால், நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து நேற்று முன்தினமே வந்திருந்த லட்சக்கணக்கான பக்தர்கள் கடும் குளிரையும் பொருட்படுத்தாமல் இரவு முதலே கோயில் பிரதான வாயில்களுக்கு வெளியே மணிக்கணக்கில் காத்திருந்தனர்.

காலையில் கோயில் கதவும் திறக்கப்பட்டதும், ராமர் உருவம் பதித்த கொடிகளுடன் ஜெய் ஸ்ரீராம் கோஷமிட்டபடி கோயிலுக்குள் முண்டியடித்துச் சென்றனர். இதனால் கடும் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. ராமர் பாதை வழியாக நீண்ட வரிசையில் பக்தர்கள் கோயிலுக்கு சென்று மூலவர் பால ராமரை தரிசித்துச் சென்றனர். பிற்பகலுக்கு பிறகு பக்தர்கள் கூட்டம் கட்டுக்கடங்காத அளவுக்கு அதிகரித்தது. நெரிசலை கட்டுப்படுத்த முடியாமல் பாதுகாப்பு போலீசார் திணறினர். சில பக்தர்கள் கூட்டத்தில் காயமடைந்தனர். அவர்களை உடனடியாக மீட்டு மருத்துவமனைகளுக்கு கொண்டு சென்றனர்.

அயோத்தியில் தங்குவதற்கு ஓட்டல்கள் கிடைக்காததால் பலரும் பெட்டி படுக்கைகளுடன் ராமரை தரிசிக்க கூட்டத்தில் நின்றால் கடும் நெரிசல் ஏற்பட்டது. தினமும் 3 லட்சம் பக்தர்கள் தரிசனம் செய்வார்கள் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், முதல் நாளான நேற்று 5 லட்சம் பேர் வரை தரிசித்திருக்கலாம் என கோயில் நிர்வாகம் கூறி உள்ளது. கூட்டத்தை கட்டுப்படுத்த உபி போலீசார் 8,000 பேர் பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர். பீகார் மாநிலம் மாதேபுரா மாவட்டத்தைச் சேர்ந்த நிதிஷ்குமார் 600 கிமீக்கு மேல் சைக்கிளிலேயே அயோத்திக்கு வந்திருந்தார்.

அவர் கூறுகையில், ‘‘மிகுந்த கூட்டம் உள்ளது. பால ராமரை தரிசிக்கும் வாய்ப்பு இன்று எனக்கு கிடைக்கும் என நம்புகிறேன்’’ என்றார். சட்டீஸ்கரில் இருந்து பாதயாத்திரையாக வந்த சுனில் மாதோ தலைமையிலான குழுவினர், ‘‘சட்டீஸ்கரில் இருந்து வழிநெடுக நடக்க ராம் லல்லா எங்களுக்கு பலத்தை அளித்தார். அவரது ஆசீர்வாதங்களை நாங்கள் பெறுவோம்’’ என்றனர். இவர்களைப் போல ஏராளமான பக்தர்கள் கூடியிருந்தனர். கோயில் வளாகத்திலும், பிரதான கோயில் மண்டபத்திலும் ஜெய் ராம் கோஷங்கள் எதிரொலித்தன.

* பிரதிஷ்டை நினைவுகள் பல ஆண்டுகள் நீடிக்கும்
பிரதமர் மோடி தனது டிவிட்டர் தளத்தில், பால ராமர் சிலை பிரதிஷ்டை விழா வீடியோ தொகுப்பை பகிர்ந்து, ‘ஜனவரி 22ம் தேதி அயோத்தியில் நாம் பார்த்தது இன்னும் பல ஆண்டுகளுக்கு நம் நினைவுகளில் நீங்காதிருக்கும்’ என பதிவிட்டுள்ளார்.

The post பொது தரிசனத்திற்கு திறக்கப்பட்ட முதல் நாளில் அயோத்தி ராமர் கோயிலில் கட்டுக்கடங்காத பக்தர்கள்: 5 லட்சம் பேர் பால ராமரை வழிபட்டனர் appeared first on Dinakaran.

Tags : Ayodhya Ram Temple ,Bala Rama ,Ayodhya ,Ram temple ,
× RELATED அயோத்தி ராமர் கோயில் பெண் ஊழியர் பலாத்காரம்: 9 பேர் கும்பல் அட்டூழியம்