×

21ம் நூற்றாண்டின் வரலாற்றில் இந்தியாவின் சோலார் புரட்சி பொன் எழுத்தால் எழுதப்படும்: பிரதமர் மோடி பெருமிதம்

காந்திநகர்: ‘21ம் நூற்றாண்டின் வரலாறு எழுதப்படும் போது, அதில் இந்தியாவின் சோலார் புரட்சி பொன் எழுத்துகளில் பொறிக்கப்படும்’ என பிரதமர் மோடி கூறி உள்ளார். குஜராத்தின் காந்திநகரில், உலகளாவிய புதுப்பிக்கத்தக்க எரிசக்தி முதலீட்டாளர்கள் சந்திப்பு மற்றும் கண்காட்சியை பிரதமர் மோடி தொடங்கி வைத்து பேசியதாவது: இன்றைய இந்த நிகழ்ச்சி தனிப்பட்ட ஒரு நிகழ்ச்சி அல்ல, பெரிய தொலைநோக்கு பணியின் ஒரு பகுதி. 2047ம் ஆண்டுக்குள் இந்தியாவை வளர்ந்த நாடாக மாற்றுவதற்கான எங்களின் செயல்திட்டத்தின் ஒரு பகுதி. இந்தியாவை உலகின் 3 பெரிய பொருளாதார நாடுகளில் ஒன்றாக்க வளர்ச்சி அடையச் செய்ய 140 கோடி இந்தியர்களும் அர்ப்பணிப்புடன் பணியாற்றி வருகின்றனர். இந்தியா அடுத்த 1000 ஆண்டுகளுக்கான வளர்ச்சியின் அடித்தளத்தை தயார் செய்து வருகிறது.

எங்களின் 3வது ஆட்சியின் முதல் 100 நாளில் நாட்டின் விரைவான முன்னேற்றித்திற்காக அனைத்து துறையிலும் பெரிய முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. பசுமையான எதிர்காலம், பூஜ்ய கார்பன் உமிழ்வு என்பவை வெறும் அலங்கார வார்த்தைகள் அல்ல. இவை நாட்டின் தேவைகள், அதை அடைய நாங்கள் உறுதிபூண்டுள்ளோம். இதற்காக பசுமை எரிசக்தி துறையில் அரசு பல்வேறு முக்கிய முடிவுகளை எடுத்து வருகிறது. 500 ஜிகாவாட் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி இலக்கை அடைய பிஎம் சோலார் மேற்கூரை திட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் கீழ் வீடுகளில் சோலார் மேற்கூரை அமைக்க அரசு நிதி வழங்குகிறது.

இத்திட்டத்தின் மூலம் ஒவ்வொரு குடும்பமும் மின் உற்பத்தியாளர்களாக மாறுவார்கள். இத்திட்டத்தில் 1.3 கோடி குடும்பங்கள் பதிவு செய்துள்ளன. 3.25 லட்சம் குடும்பங்கள் சோலாரை வெற்றிகரமாக நிறுவி உள்ளன. இத்திட்டத்தில் இணைந்துள்ள ஒவ்வொரு குடும்பமும் பருவநிலை மாற்றத்தை எதிர்த்துப் போராட பெரும் பங்களிப்பை செய்கிறது. எனவே, 21 ஆம் நூற்றாண்டின் வரலாறு எழுதப்படும் போது, இந்தியாவின் இந்த சோலார் புரட்சி பொன் எழுத்துக்களால் பொறிக்கப்படும். இந்தியாவில் அதிகரித்து வரும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி தேவையை பூர்த்தி செய்ய அரசு புதிய கொள்கையை வகுத்து வருகிறது. அதற்கான அனைத்து ஆதரவையும் வழங்கி வருகிறது. இவ்வாறு அவர் கூறினார்.

* அயோத்தி உட்பட 17 சோலார் நகரம்
பிரதமர் மோடி மேலும் பேசுகையில், ‘‘அயோத்தியை சோலார் நகரமாக்க முயற்சிகள் எடுக்கப்படுகின்றன. அங்கு ஒவ்வொரு வீடும், ஒவ்வொரு அலுவலகமும், ஒவ்வொரு சேவையும் சூரிய சக்தியில் இயங்க நடவடிக்கை எடுக்கப்படும். இதுபோல, 17 நகரங்கள் சோலார் நகரங்களாக உருவாக்க அடையாளம் காணப்பட்டுள்ளன. சோலார் பம்புகள், சிறிய சோலார் ஆலைகளை அமைப்பதன் மூலம் விவசாயிகளுக்கு அதிகாரம் அளிக்கவும், அவர்களை சுயசார்புடையவர்களாக மாற்றவும் சூரிய சக்தி பயன்படுத்தப்படுகிறது‘‘ என்றார்.

The post 21ம் நூற்றாண்டின் வரலாற்றில் இந்தியாவின் சோலார் புரட்சி பொன் எழுத்தால் எழுதப்படும்: பிரதமர் மோடி பெருமிதம் appeared first on Dinakaran.

Tags : India ,PM Modi ,Gandhinagar ,Modi ,Global Renewable Energy Investors Meet and Expo ,Gandhinagar, Gujarat ,
× RELATED 1000 ஆண்டுகளுக்கு பின்னும் தூய்மை...