அரசுப் பள்ளி மாணவர்களுக்கு மனோதத்துவ புத்தாக்கப் பயிற்சி: அமைச்சர் தகவல்

சென்னை: நம்ம பள்ளி-நம்ம ஊரு, திட்டத்தின் கீழ் சென்னை ராயப்பேட்டை அரசு ஹோர்பார்ட் முஸ்லிம் மேல்நிலைப் பள்ளி, தாயார் சாகிப் தெரு அரசு முஸ்லிம் மேல்நிலைப் பள்ளி மற்றும் சைதாப்பேட்டை அரசு மாதிரி மேல்நிலைப் பள்ளி ஆகிய 3 பள்ளிகளில் தனியார் பங்களிப்புடன் கூடிய ₹1.70 கோடி மதிப்பில் கட்டப்பட்ட 5 கணினி ஆய்வகங்களை பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி நேற்று திறந்த வைத்தார்.

அப்போது அவர் பேசியதாவது:
அரசுப் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு முதல் முறையாக, மனோதத்துவ நிபுணர்களைக் கொண்டு புத்தாக்கப் பயிற்சி தொடங்கப்பட்டுள்ளது. கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு தமிழ்நாடு முதல்வர் தனது சொந்த நிதியை வழங்கி இத் திட்டத்தை தொடங்கி வைத்தார். அதன் தொடர்ச்சியாக சமூகத்துக்கு நம்மால் முடிந்த பங்களிப்பை அளிக்கும் வகையில் பல்வேறு நபர்கள் அளித்த நிதி தற்போது ரூ.380 கோடி சேர்ந்துள்ளது. நேர்மையான வகையில் இந்த நிதி செலவிடப்படும்.

கல்வி என்பது சமத்துவத்தை மலரச் செய்யும் ஆயுதம் என தலைவர் கலைஞர் கூறியுள்ளார். தற்போது கல்விக்கு செய்யும் முதலீடு எதிர்காலத்தில் மாணவர்களிடம் இருந்து நல்ல வட்டியாக திரும்பி வரும். பள்ளிகளில் படித்த முன்னாள் மாணவர்கள் தனது பங்களிப்பை நிதியாகவும், உழைப்பாகவும் வழங்க 7 லட்சத்து 50 ஆயிரம் பேர் விழுதுகள் திட்டத்தில் பதிவு செய்துள்ளனர். மாணவர்கள் நன்றாக படித்து எதிர்காலத்தில் அவர்களின் வாழ்க்கையை நல்ல படியாக அமைத்துக் கொள்ள வேண்டும் என்று விரும்பு சமூகம் ஆசிரியர் சமூகம் மட்டுமே. எனவே மாணவர்கள் நன்றாக படித்து தாங்கள் படிக்கும் பள்ளிக்கும், பெற்றோருக்கும் நாட்டுக்கும் பெருமை சேர்க்க வேண்டும். இவ்வாறு அமைச்சர் பேசினார்.

இந்த நிகழ்வில் தமிழ்நாடு மாதிரிப் பள்ளிகளின் உறுப்பினர் செயலர் சுதன், பள்ளிக் கல்வித்துறை இயக்குநர் கண்ணப்பன், சென்னை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் மார்ஸ், மாவட்ட கல்வி அலுவலர் சரஸ்வதி ஆகியோர் கலந்து கொண்டனர்.

The post அரசுப் பள்ளி மாணவர்களுக்கு மனோதத்துவ புத்தாக்கப் பயிற்சி: அமைச்சர் தகவல் appeared first on Dinakaran.

Related Stories: