தனக்கு எதிராக போராட்டங்கள் நடக்கும் சூழலில் கவர்னர் ஆர்.என்.ரவி திடீர் டெல்லி பயணம்

சென்னை: தமிழ்நாடு கவர்னர் ஆர் என் ரவி, திடீர் பயணமாக நேற்று காலை டெல்லி சென்றார். இன்று மாலை அவர் சென்னை திரும்புகிறார். தமிழ்நாடு கவர்னர் ஆர் என் ரவி, திடீர் பயணமாக நேற்று காலை 10 மணிக்கு ஏர் இந்தியா பயணிகள் விமானத்தில் சென்னையில் இருந்து டெல்லி சென்றார். கவர்னருடன் அவரின் செயலாளர், உதவியாளர், பாதுகாப்பு அதிகாரி ஆகியோரும் சென்றனர். இரண்டு நாள் பயணமாக, டெல்லி செல்லும் கவர்னர் ரவி, இன்று மாலை 4:20 மணிக்கு விஸ்தாரா ஏர்லைன்ஸ் பயணிகள் விமானத்தில், டெல்லியில் இருந்து சென்னை திரும்புகிறார்.

கவர்னர் ரவியின் திடீர் டெல்லி பயணத்திற்கான காரணம் என்ன என்பது பற்றி, அதிகாரபூர்வமான தகவல் எதுவும் வெளியிடப்படவில்லை. கவர்னரின் டெல்லி பயணம், அவரது தனிப்பட்ட சொந்தப் பயணம் என்று கூறப்படுகிறது.
ஆனாலும் தமிழ்நாட்டில் நீட் தேர்வு உட்பட பல்வேறு பிரச்னைகள் காரணமாக, கவர்னருக்கு எதிர்ப்பாக தொடர்ந்து போராட்டங்கள் நடந்து வருகின்றன. அதோடு தமிழ்நாட்டின் ஓய்வு பெற்ற டிஜிபி சைலேந்திர பாபுக்கு புதிய பதவி அளிக்கும் கோப்பில், கவர்னர் கையெழுத்திட மறுத்து, தமிழ்நாடு அரசுக்கே கோப்புகளை திருப்பி அனுப்பினார். ஆனால் தமிழ்நாடு அரசு, கவர்னர் கேட்ட விளக்கங்களுக்கு தகுந்த பதிலுடன், மீண்டும் அந்த கோப்புகளை கவர்னருக்கு அனுப்பி உள்ளது. இதைப் போன்ற பல்வேறு பிரச்னைகளுக்கு இடையே, கவர்னரின் திடீர் டெல்லி பயணம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

The post தனக்கு எதிராக போராட்டங்கள் நடக்கும் சூழலில் கவர்னர் ஆர்.என்.ரவி திடீர் டெல்லி பயணம் appeared first on Dinakaran.

Related Stories: