சென்னை வர்த்தக மையத்தில் நாளை வைக்கம் போராட்டம் நூற்றாண்டு விழா: தமிழ்நாடு, கேரள முதல்வர்கள் பங்கேற்பு

சென்னை: நந்தம்பாக்கத்தில் உள்ள வர்த்தக மையத்தில் வைக்கம் போராட்டம் நூற்றாண்டு சிறப்பு விழா நாளை நடக்கிறது. இதில், தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின், கேரள முதல்வர் பினராய் விஜயன் கலந்துகொண்டு நூல்களை வெளியிடுகின்றனர். கேரள மாநிலம் வைக்கத்தில் மகாதேவர் கோயிலைச் சுற்றியுள்ள தெருக்களில் தாழ்த்தப்பட்டவர்கள் நடந்து செல்வதற்கு தடைவிதிக்கப்பட்டிருந்தது. இதை எதிர்த்து, 1924ம் ஆண்டு அங்கு மிகப்பெரிய போராட்டம் நடைபெற்றது. தலைவர்கள் அனைவரும் கைது செய்யப்பட்ட நிலையில் போராட்டம் தொடர்ந்து நடைபெற முடியாத நிலை ஏற்பட்டது.

அப்போது, கேரள போராட்டத் தலைவர்கள் தந்தை பெரியாருக்கு கடிதம் எழுதி, இந்தப் போராட்டத்திற்கு நீங்கள் வந்துதான் உயிர்கொடுக்க வேண்டும், உடனே புறப்பட்டு வாருங்கள் என்று கோரினர். கடிதம் கிடைத்ததும், பெரியார் சென்று வைக்கம் போராட்டத்தை தலைமையேற்று நடத்தி மக்களிடையே மிகப்பெரிய எழுச்சியை ஏற்படுத்தினார். போராட்டம் தீவிரமடைந்தது. மக்கள் திரண்டு ஆதரவு அளித்தனர்.அதனால் பெரியார் 2 முறை கைது செய்யப்பட்டார். முதல் முறை ஒரு மாதமும், இரண்டாம் முறை ஆறு மாதமும் தண்டனை அளிக்கப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். சிறையில் கால்களிலும், கைகளிலும் சங்கிலியால் பிணைக்கப்பட்டு அவர் சிரமப்படுத்தப்பட்டார்.

இடையில் திருவாங்கூர் மகாராஜா இயற்கை எய்திடவே, ராணியார் அனைவரையும் விடுதலை செய்தார். தந்தை பெரியாருடன் சமாதானம் நடைபெற்று, வைக்கம் தெருவில் நடக்கக்கூடாது என்ற தடையை ராணி நீக்கினார். இதனால், தந்தை பெரியார் போராட்டம் மகத்தான வெற்றியில் முடிந்து வைக்கம் வீரர் என்று அழைக்கப்பட்டார். இந்தியாவில் சமூக அளவில் சாதி காரணமாக நிலவிய ஏற்றத் தாழ்வுகளை ஒழித்திட நடைபெற்ற முதல் போராட்டம் இந்த வைக்கம் போராட்டம்.  இந்தப் போராட்ட வெற்றியின் 100ம் ஆண்டினை குறிக்கும் வகையில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சட்டப்பேரவையில் 110 விதியின் கீழ் சில அறிவிப்புகளை வெளியிட்டார்.

அதன் தொடர்ச்சியாக தமிழ்நாடு அரசின் சார்பில் வைக்கம் போராட்டம் நூற்றாண்டு சிறப்பு விழா நாளை காலை 11.15 மணியளவில் சென்னை வர்த்தக மையத்தில் நடைபெற உள்ளது. இந்த விழாவில், தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் வைக்கம் போராட்டம் நூற்றாண்டு மலரையும், கேரள முதல்வர் பினராயி விஜயன் பெரியாரும் வைக்கம் போராட்டமும் என்ற நூலையும் வெளியிடுகின்றனர். திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி சிறப்புரையாற்றுகிறார். செய்தி மக்கள் தொடர்புத்துறை தயாரித்துள்ள வைக்கம் போராட்டம் குறித்த ஆவணப்படமும் திரையிடப்படுகிறது. பள்ளி மாணவர்கள் சார்பில் சமத்துவக் கொண்டாட்டம் நிகழ்ச்சியும் நடைபெற உள்ளது.

* தமிழ், மலையாளத்தில் அழைப்பிதழ்
வைக்கம் போராட்டம் நூற்றாண்டு சிறப்பு விழாவிற்கான அழைப்பிதழ் தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவின்படி தமிழ் மொழியில் மட்டுமல்லாமல், முதல் முறையாக மலையாள மொழியிலும் செய்தி மக்கள் தொடர்புத் துறையால் வெளியிடப்பட்டுள்ளது. இதனை அனைவரும் பாராட்டுகின்றனர்.

The post சென்னை வர்த்தக மையத்தில் நாளை வைக்கம் போராட்டம் நூற்றாண்டு விழா: தமிழ்நாடு, கேரள முதல்வர்கள் பங்கேற்பு appeared first on Dinakaran.

Related Stories: