இது குறித்து தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக அதிகாரிகள் கூறியதாவது: தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக சேலம் கோட்டமானது, சேலம், நாமக்கல், தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களை உள்ளடக்கியது. இம்மாவட்டங்களில் மொத்தம் 1900 பஸ்கள் தினசரி இயக்கப்பட்டு வருகிறது. இதில் நகரம், புறநகரம், மலைப்பஸ்கள் உள்பட சேலம் மண்டலத்தில் 1047 பஸ்களும், தர்மபுரி மண்டலத்தில் 893 பஸ்களும் சேர்த்து 1900 பஸ்கள் தினசரி இயக்கப்பட்டு வருகிறது. தினசரி 9.19 லட்சம் கிலோமீட்டர் பஸ்கள் இயக்கப்படுகிறது. 14 லட்சம் பயணிகளும், சாதாரண கட்டணம் டவுன் பஸ்களில் 6 லட்சம் மகளிர்கள் பயணம் செய்கின்றனர். இந்தியாவில் டெல்லி, மும்பை, கல்கத்தா, ஹைதராபாத் போன்ற பெருநகரங்களில் தற்ேபாது டீசல் பயன்பாடு இல்லாத எலக்ட்ரானிக் பஸ்கள் எனப்படும் இ-பஸ் சேவை நடைமுறையில் உள்ளது.
இந்த இ-பஸ் திட்டத்தை தமிழகத்திற்கு கொண்டு ஒன்றிய அரசு முடிவு செய்துள்ளது. தமிழகத்தில் பிரதமரின் ‘இ-பஸ் சேவா’ திட்டத்தை ஒன்றிய அரசு கொண்டு வந்துள்ளது. இத்திட்டத்தின் கீழ் கோவை, சேலம், திருச்சி, மதுரை, திருப்பூர் உள்பட 10 நகரங்கள் சேர்க்கப்பட்டுள்ளது. இ-பஸ் சேவா திட்டத்தின் சேலம் நகரத்திற்கு 50 இ-பஸ்கள் ஒதுக்கப்படவுள்ளது. இ-பஸ் கொண்டு வருவதற்கான அடிப்படை வசதிகள் குறித்து ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. பணிமனைகளில் மின்சாரம் பயன்பாடு, சார்ஜிங் பாய்ண்ட், பராமரிப்பு இடம், பஸ்கள் நிறுத்துவதற்கான இடம் உள்பட பல்வேறு அடிப்படை வசதிகள் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த ஆய்வு அறிக்கை தமிழக அரசுக்கு அனுப்பி வைக்கப்படும். இ-பஸ் பராமரிப்பதற்கான அனைத்து அடிப்படை வசதிகள் மேற்கொண்ட பின்பு, இ-பஸ் பயன்பாட்டுக்கு வரும். இந்த இ-பஸ் சேலம் மாநகரத்தில் முக்கிய வழித்தடங்களில் இயக்கப்படும். இவ்வாறு அதிகாரிகள் கூறினர்.
The post ஒன்றிய அரசின் திட்டத்தின் கீழ் சேலம் மாநகரில் 50 இ-பஸ்கள் இயக்க திட்டம்: அடிப்படை வசதிகள் குறித்து ஆய்வு appeared first on Dinakaran.