ரூ.2,000 நோட்டை மாற்றும் பணி தொடங்கியது பேங்க்ல சுத்தமா கூட்டமேயில்ல…: 8 ஆயிரம் கிளைகளிலும் இதே நிலைமை தான்

சென்னை: தமிழ்நாடு முழுவதும் சுமார் 8 ஆயிரம் வங்கி கிளைகளில் 2 ஆயிரம் ரூபாய் நோட்டுக்களை மாற்றும் பணி நேற்று தொடங்கியது. பெரும்பாலான இடங்களில் வழக்கம் போலவே கூட்டம் இருந்தது. ஒரு சில வாடிக்கையாளர்கள் ரூபாய் நோட்டுக்களை கொடுத்து மாற்றி சென்றனர். பிரதமர் மோடி தலைமையிலான பாஜ ஆட்சி அமைந்த பிறகு கருப்பு பணத்தை ஒழிப்பதாக கூறி 2016ம் ஆண்டு நவம்பர் 8ம் தேதி 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் மதிப்பிழப்பு செய்யப்படுவதாக அறிவித்தார். அதற்கு பதிலாக புதிதாக 500 மற்றும் 2000 ரூபாய் நோட்டுகள் அறிமுகப்படுத்தப்பட்டன. அதே நேரத்தில் 500, 1000 நோட்டுக்களை மாற்ற முடியாமல் மக்கள் சிரமத்திற்கு ஆளாகினர். வங்கிகளின் முன்பாக பல மணிநேரம் காத்து கிடக்கும் நிலை ஏற்பட்டது. இந்நிலையில் கடந்த 19ம் தேதி (வெள்ளிக்கிழமை) நாட்டில் புழக்கத்தில் உள்ள 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகளை திரும்பப் பெறுவதாக ரிசர்வ் வங்கி அறிவித்தது. மக்கள் தங்களிடம் உள்ள 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகளை வங்கிகளில் 4 மாத காலத்துக்குள், அதாவது செப்டம்பர் 30ம் தேதிக்குள் கொடுத்து மாற்றிக் கொள்ளலாம் என்றும் அறிவிக்கப்பட்டது.

2 ஆயிரம் நோட்டு திரும்ப பெறப்படும் என்ற அறிவிப்பு வெளியான மறு நிமிடமே அனைத்து மளிகை கடைகள், ஓட்டல், ஷாப்பிங் மால், பெட்ரோல் பங்க் உள்ளிட்ட அனைத்து இடங்களில் 2 ஆயிரம் ரூபாய் நோட்டுக்கள் வாங்குவது நிறுத்தப்பட்டது. இதனால் மக்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகினர். பெரும்பாலான கடைகளில் 2 ஆயிரம் ரூபாய் நோட்டுக்கள் வாங்கப்படாது என்று அறிவிப்பையும் வெளியிட்டனர். இதனால், மக்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகினர். இந்த நிலையில் நேற்று முதல் வங்கிகளில் 2 ஆயிரம் ரூபாய் நோட்டுக்களை கொடுத்து மாற்றி கொள்ளலாம் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து தமிழ்நாட்டில் உள்ள 12 பொதுத்துறை வங்கிகள், 30 தனியார் வங்கிகள் என மாநிலம் முழுவதும் சுமார் 8 ஆயிரம் கிளைகள் உள்ளன. இந்த 8 ஆயிரம் கிளைகளிலும் ரூ.2 ஆயிரம் நோட்டுக்களை பொதுமக்களிடம் இருந்து பெறும் பணி நேற்று காலை தொடங்கியது. பெரும்பாலான வங்கிகளில் மக்கள் தங்களிடம் உள்ள ஒன்றிரண்டு 2 ஆயிரம் ரூபாய் நோட்டுக்களை மாற்றி சென்றனர். அதே நேரத்தில் நேற்று எதிர்பார்த்த அளவுக்கு வங்கிகளில் கூட்டம் இல்லை. வழக்கம் போலவே வங்கிகளில் கூட்டம் காணப்பட்டது.

சென்னையை பொறுத்தவரை கொத்தவால் சாவடி உள்பட சில இடங்களில் மட்டுமே 2000 ரூபாய் நோட்டுகளை மாற்ற கூட்டம் அதிகமாக காணப்பட்டது. மற்ற வங்கிகளில் ஓரிருவர் மட்டுமே வந்து சென்றனர். அதே நேரத்தில் ஒருவர் பத்து 2 ஆயிரம் ரூபாய்களை மாற்றி கொள்ள ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அவர்களுக்கு வேறு ரூபாய் நோட்டுக்கள் உடனடியாக வழங்கப்பட்டது. வங்கிகளில் டெபாசிட் வைத்துள்ள வாடிக்கையாளர்கள் வங்கிக் கணக்கில் வரவு வைப்பதற்கு எந்தவித கட்டுப்பாடும் இல்லை. எத்தனை 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகளை வேண்டுமானாலும் வழங்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில் ரூபாய் நோட்டுகளை மாற்றுவதற்கு எந்த அடையாளச் சான்றும் தேவையில்லை. வங்கிகளில் பணத்தை கொடுத்து மாற்றி கொள்ள ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. ஆனால், ஒரு சில வங்கிகளில் விண்ணப்பத்தை பூர்த்தி செய்து வழங்குமாறு படிவத்தை வழங்கினர். அதில் பூர்த்தி செய்து பணத்தை மாற்றி சென்றனர்.

சில வங்கிகளில் முன் எச்சரிக்கை நடவடிக்கையாக போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டு இருந்தன. இது குறித்து வங்கி அதிகாரிகள் கூறுகையில், ‘2 ஆயிரம் ரூபாய் நோட்டுக்களை மாற்றுவதற்கு வங்கிகளில் போதுமான அளவுக்கு பணம் இருப்பு வைக்கப்பட்டுள்ளது. வங்கிகளில் வழக்கமான அளவுக்கு தான் கூட்டம் தான் இருந்தது. இதனால், சிறப்பு கவுன்டர்கள் எதுவும் திறக்கவில்லை. கூட்டம் அதிகமாக இருக்கும் பட்சத்தில் சிறப்பு கவுன்டர்கள் அமைக்கப்படும். டோக்கன்கள் வழங்கப்பட்டு அவர்களுக்கு பணம் வழங்கப்படும். வயதானோருக்கு எந்தக்கட்டுப்பாடும் விதிக்கப்படாது. அவர்கள் நேரடியாக கவுன்டர்களுக்கு வந்து பணத்தை மாற்றி செல்லலாம். பணத்தை மாற்றுவதற்காக விதிக்கப்பட்ட காலக்கெடு முடிவதற்கு முன்பாக வங்கிகளில் கூட்டம் இருக்கும் என்று எதிர்பார்க்கிறோம். வங்கிகளுக்கு ரூபாய் நோட்டுகளை மாற்ற செல்லும் மக்களுக்கு குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை செய்துதரப்படும்’’ என்றார்.

The post ரூ.2,000 நோட்டை மாற்றும் பணி தொடங்கியது பேங்க்ல சுத்தமா கூட்டமேயில்ல…: 8 ஆயிரம் கிளைகளிலும் இதே நிலைமை தான் appeared first on Dinakaran.

Related Stories: