×

தனிநபர் மற்றும் குழு போட்டிகளுக்கு ரூ.37 கோடியாக பரிசுத்தொகை உயர்வு

*ஊட்டியில் அமைச்சர் ராமசந்திரன் பேச்சு

ஊட்டி : இளைஞர் நலன் மற்றும் விளைாட்டு துறை அமைச்சரின் சீரிய முயற்சியால் இந்த ஆண்டிற்கான தனிநபர் மற்றும் குழு போட்டிகளுக்கான மொத்த பரிசுத்தொகை ரூ.37 கோடியாக உயர்த்தி வழங்கப்பட உள்ளது. முதல்வர் கோப்பைக்கான விளையாட்டு போட்டிகள் நேற்று தமிழ்நாடு முழுவதும் துவங்கியது. நீலகிரி மாவட்டத்தில் ஊட்டியில் உள்ள மலைப்பகுதி மேம்பாட்டு திட்ட மைதானத்தில் மாவட்ட அளவிலான விளையாட்டு போட்டிகள் துவங்கியது. பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள், அரசு ஊழியர்கள், மாற்றுத் திறனாளிகள் மற்றும் பொதுப்பிரிவினர் என 5 பிரிவுகளின் கீழ் இப்போட்டிகள் நடக்கிறது.

இதன் துவக்க விழா நேற்று ஊட்டியில் உள்ள மலைப்பகுதி மேம்பாட்டு திட்ட மைதானத்தில் நடந்தது. நீலகிரி மாவட்ட கலெக்டர் லட்சுமி பவ்யா தண்ணீரு முன்னிலை வகித்தார்.
தமிழ்நாடு சுற்றுலாத்துறை அமைச்சர் ராமசந்திரன் கலந்து கொண்டு விளையாட்டு போட்டிகளை துவக்கி வைத்தார். பின்னர் அமைச்சர் பேசியதாவது: தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் நீலகிரி மாவட்டத்தில் தமிழ்நாடு முதல்வர் கோப்பைக்கான விளையாட்டு போட்டிகளை நடத்துகிறது. கடந்த ஆண்டு முதல் நடத்தப்படும் இப்போட்டிகள் தேசிய அளவில் நடத்தப்படும் போட்டிகளுக்கு இணையாக நடத்தப்படுகிறது.

இப்போட்டிகளுக்காக மொத்த பரிசுத்தொகை ரூ.25 கோடி உள்பட ரூ.59.89 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு இந்த விளையாட்டு போட்டிகள் சிறப்பாக நடத்தப்பட்டு வருகிறது.
இந்த ஆண்டு நடத்தப்பட்டுள்ள போட்டிகளுக்கு பல்வேறு புதிய விளையாட்டுக்களும் சேர்க்கப்பட்டள்ளன. பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிர், மாற்றுத் திறனாளிகள், பொதுமக்கள், அரசு ஊழியர்கள் என 5 பிரிவுகளில் 27 விளையாட்டுக்கள், 53 வகைகளில் மாவட்ட, மண்டல மற்றும் மாநில அளவிலான தமிழ்நாடு முதலமைச்சர் கோப்பைக்கான விளையாட்டு போட்டிகள் நடத்தப்படடுள்ளது. இப்போட்டிகளில் மாநில அளவில தனி நபர் போட்டியில் வெற்றி பெறுபவர்களுக்கு முதல் பரிசாக ரூ.1 லட்சம், 2ம் பரிசாக ரூ.75 ஆயிரமும், 3ம் பரிசாக ரூ.50 ஆயிரமும் வழங்கப்படும்.

குழு போட்டிகளில் பங்கு பெற்று வெற்றி பெருபவர்களுக்கு முதல் பரிசு தலா ரூ.75 ஆயிரம், 2ம் பரிசு ரூ.50 ஆயிரம், 3ம் பரிசு ரூ.25 ஆயிரம் வழங்கப்படவுள்ளது. இந்த ஆண்டு தனிநபர் மற்றும் குழு போட்டிகளில் வெற்றி பெறுபவர்களுக்கு முதன் முறையாக 4ம் இடம் பிடிப்பவர்களுக்கு 3ம் பரிசிற்கு இணையான பரிசு வழங்கப்படவுள்ளது.

இளைஞர் நலன் மற்றும் விளைாட்டு துறை அமைச்சரின் சீரிய முயற்சியால் இந்த ஆண்டிற்கான தனிநபர் மற்றும் குழு போட்டிகளுக்கான மொத்த பரிசுத் தொகை ரூ.37 கோடியாக உயர்த்தி வழங்கப்படவுள்ளது. இவ்வாறு அவர் பேசினார். இந்நிகழ்ச்சியில், மாவட்ட விளையாட்டு அலுவலர் இந்திரா, நகராட்சி தலைவர் வாணீஸ்வரி, துணைத் தலைவர் ரவிக்குமார், குன்னூர் நகராட்சி துணைத் தலைவர் உடப்ட பலர் கலந்து கொண்டனர்.

The post தனிநபர் மற்றும் குழு போட்டிகளுக்கு ரூ.37 கோடியாக பரிசுத்தொகை உயர்வு appeared first on Dinakaran.

Tags : Minister ,Ramachandran ,Ooty ,Welfare ,Sports ,Department ,Minister's Cup… ,Dinakaran ,
× RELATED தேர் கவிழ்ந்ததில் படுகாயமடைந்தவர் உயிரிழப்பு..!!