ஜெய்பூர்: ராஜஸ்தான் முதல்வர் கெலாட், சச்சின் பைலட் இணைந்து கைகுலுக்கியது இந்த நூற்றாண்டின் கைகுலுக்கல் என்று பிரதமர் மோடி கிண்டலடித்துள்ளார். ராஜஸ்தானின் 200 பேரவை தொகுதிகளுக்கும் வரும் 25ம் தேதி ஒரேகட்டமாக தேர்தல் நடைபெற உள்ளது. இங்கு ஆளும் காங்கிரஸ் கட்சிக்கும், பாஜவுக்கும் இடையே கடும் போட்டி நிலவுகிறது. இந்நிலையில் பரத்பூர் மாவட்டத்தில் நடைபெற்ற தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி கலந்து கொண்டு பேசினார். அப்போது, “ஒருபுறம் இந்தியா உலகின் முன்னணி நாடாக உள்ளது. மறுபுறம் கெலாட் தலைமையிலான காங்கிரஸ் ஆட்சியில் ஊழல், கலவரம், பெண்கள், தலித்துகளுக்கு எதிரான குற்றங்களில் ராஜஸ்தான் மாநிலம் முதலிடத்தில் இருக்கிறது.
தேர்தல் நேரத்தில் அசோக் கெலாட்டும், சச்சின் பைலட்டும் கைக்கோர்த்து ஒன்றாக இருப்பது போல் புகைப்படம் எடுத்து கொள்கிறார்கள். 5 ஆண்டுகளில் முதன்முறையாக நடந்த இந்த கைகுலுக்கல் இந்த நூற்றாண்டின் கைகுலுக்கல். 100 முறை அவர்கள் கைகுலுக்கினாலும் அதில் சமரசம் இல்லை. டெல்லியில் இருந்து வரும் காங்கிரசின் மூத்த தலைவர்கள் முதல்வரையும், முதல்வராக விரும்புபவரையும் காமிரா முன் கைக்குலுக்க வைக்கிறார்கள். ஆனால் உண்மையில் அவர்கள் மனதில் கசப்புணர்வு இருக்கிறது. இவ்வாறு தெரிவித்தார்.
மிக் ஜாகருக்கு மோடி அழைப்பு
இதனிடையே ராக் ஸ்டார் மிக் ஜாகருக்கு பிரதமர் மோடி இந்தியா வருமாறு அழைப்பு விடுத்துள்ளார். பிரபல ராக் ஸ்டார் மிக் ஜாகர் அண்மையில் இந்தியா வந்திருந்தார். அப்போது கொல்கத்தாவில் தீபாவளி பண்டிகை, காளி பூஜைகளில் கலந்து கொண்டார். தொடர்ந்து ஒரு உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியையும் கண்டு ரசித்தார். தனது இந்திய பயணம் குறித்து மிக் ஜாகர் தன் ட்விட்டர் பதிவில் மகிழ்ச்சியை வௌிப்படுத்தி உள்ளார். இதற்கு பிரதமர் மோடி தன் ட்விட்டர் பதிவில், “நீங்கள் விரும்புவதை எப்போதும் நீங்கள் பெற முடியாமல் போகலாம். ஆனால், ஆறுதலையும், திருப்தியையும் தேடுபவர்களால் நிரம்பி வழியும் நாடு இந்தியா. இங்கு நீங்கள் அனைத்தையும் பெற முடியும். நீங்கள் இங்கிருந்தபோது இந்திய மக்கள், கலாச்சாரத்தால் மகிழ்ச்சி அடைந்ததை கண்டு நான் மகிழ்கிறேன். தொடர்ந்து இந்தியாவுக்கு வாருங்கள்” என்று அழைப்பு விடுத்துள்ளார்.
The post அசோக் கெலாட்-சச்சின் பைலட் இணைந்தது இந்த நூற்றாண்டின் கைகுலுக்கல்: பிரதமர் மோடி கிண்டல் appeared first on Dinakaran.