நாடு முழுவதும் விண்ணை முட்டும் விலைவாசி உயர்வு: 5 ஆண்டுகளில் 65% உயர்வு; ஊதியம் 28% மட்டும் உயர்வு என மக்கள் கேள்வி

சென்னை: நாடு முழுவதும் விண்ணை முட்டிவரும் விலைவாசியானது கடந்த 5 ஆண்டுகளில் 65% அதிகரித்துள்ள நிலையில் உழைக்கும் மக்களின் ஊதியம் 28% மட்டுமே உயர்ந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. விலைவாசியை கட்டுக்குள் வைத்திருப்போம், விவசாயிகள் வருமானத்தை இரட்டிப்பாக்குவோம், ஆண்டுக்கு 2கோடி பேருக்கு வேலை கொடுப்போம் போன்ற வாக்குறுதிகளை வழங்கி பிரதமர் மோடி தலைமையிலான பாஜக அரசு ஆட்சிக்கு வந்தது. ஆனால் பருப்பு, எண்ணெய், காய்கறிகள் உள்ளிட்ட சமையலுக்கு தேவையான அனைத்து பொருட்களின் விலையும் விண்ணை முட்டி வருகிறது.

கடந்த 5 ஆண்டுகளில் உணவு பொருட்களின் விலை 65% அதிகரித்துள்ள நிலையில், மக்களின் ஊதியம் 28% மட்டுமே உயர்ந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 5 ஆண்டுக்கு முன் ரூ.105-ஆக இருந்த துவரம் பருப்பின் விலை ரூ.169-ஐ தாண்டியுள்ளது. ரூ.50-ஆக இருந்த பூண்டு மற்றும் ரூ.60-ஆக இருந்த இஞ்சி தல ரூ.180-ஐ தாண்டி விற்கப்படுகிறது. கோதுமை மாவு, அரிசி, எண்ணெய் உள்ளிட்ட பொருட்களின் விலையும் தொடர்ந்து ஏறுமுகத்தில் உள்ளது. விலை வாசியை குறைக்க ஒன்றிய அரசு முன்வரவில்லை என பொதுமக்கள் அதிருப்தி தெரிவித்துள்ளனர்.

சமையல் எரிவாயு சிலிண்டர் விலையும் வரலாறு காணாத விலை ஏற்றத்தை கண்ட நிலையில் 5 மாநில சட்டப்பேரவை தேர்தலை மனதில் வைத்து விலையை ஒன்றிய அரசு குறைந்துள்ளதாக விமர்சனம் எழுந்துள்ளது. ஆனால் அனைத்து அத்தியாவசிய பொருட்களின் விலையும் உயர்ந்திருக்கும் நிலையில், சிலிண்டர் விலையை மட்டும் சற்று குறைத்து ஒன்றிய அரசு நாடகமாடுவதாக பரவலாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

The post நாடு முழுவதும் விண்ணை முட்டும் விலைவாசி உயர்வு: 5 ஆண்டுகளில் 65% உயர்வு; ஊதியம் 28% மட்டும் உயர்வு என மக்கள் கேள்வி appeared first on Dinakaran.

Related Stories: