சென்னை: என் மீது நம்பிக்கை வைத்துள்ளவர்களுக்கும், என்னை புரிந்து கொண்டவர்களுக்கும் நன்றி என்று நடிகர் பிரகாஷ்ராஜ் தெரிவித்துள்ளார். தமிழக முழுவதும் பல்வேறு மாவட்டங்களில் பிரணவ் ஜூவல்லரி என்ற பெயரில் நகை கடைகள் தொடங்கி மாதாந்திர நகை சேமிப்பு சீட்டு திட்டம் நடத்தப்பட்டது. இக்கடையில் நகைச்சீட்டுகள் மற்றும் முதலீட்டு திட்டம் என்ற பெயரில் பொதுமக்களை ஏமாற்றி அவர்களிடம் இருந்து சுமார் 100 கோடி வசூலித்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்த திருச்சி பொருளாதாரக் குற்றப்பிரிவு போலீசார், அந்நிறுவன உரிமையாளர்கள் மதன் செல்வராஜ், அவரது மனைவி கார்த்திகா ஆகியோர் மீது பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் வழக்குகள் பதிந்து லுக் அவுட் நோட்டீஸ் கொடுக்கப்பட்டு 2 பேரையும் தேடி வந்த
நிலையில் கடந்த 7ம் தேதி மதுரை மாவட்ட நீதிமன்ற வளாகத்தில் உள்ள மதுரை மாவட்ட முதலீட்டாளர் நலன் பாதுகாப்பு சட்ட வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் மதன் செல்வராஜ் சரணடைந்தார்.
பின்னர் அவரை போலீசார் காவலில் எடுத்து விசாரணை நடத்தினர். பின்னர் அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் நடிகர் பிரகாஷ் ராஜ் விளம்பரத்தில் மட்டுமே நடித்ததும், அவருக்கும் இந்த நிறுவனத்தின் முதலீடு, மோசடியில் எந்தவித தொடர்பும் இல்லை எனவும் தெரிய வந்திருப்பதாக போலீசார் தகவல் தெரிவித்துள்ளனர். இந்நிலையில், இந்த வழக்கு தொடர்பாக நடிகர் பிரகாஷ்ராஜ் தெரிவித்துள்ளதாவது; பிரணவ் ஜூவல்லரி மோசடியில் எனக்கு தொடர்பு இல்லை என்பதை விசாரணை அதிகாரிகள் தெளிவுபடுத்தி உள்ளனர். என் மீது நம்பிக்கை வைத்துள்ளவர்களுக்கும், என்னை புரிந்து கொண்டவர்களுக்கும் நன்றி என்று அவர் கூறியுள்ளார்.
The post பிரணவ் ஜூவல்லரி மோசடி வழக்கு: என் மீது நம்பிக்கை வைத்துள்ளவர்களுக்கும், என்னை புரிந்து கொண்டவர்களுக்கும் நன்றி: நடிகர் பிரகாஷ்ராஜ் appeared first on Dinakaran.