‘‘தாமரை கட்சிக்கு எதிராக பட்டாசு வெடித்து கொண்டாடினார்களாமே இலை கட்சியினர்…’’ என்று கேட்டார் பீட்டர் மாமா. ‘‘இலை கட்சியும், தாமரை கட்சியும் கூட்டணியில் இருந்தாலும் தாமரை கட்சியின் மவுன்டன் தலைவர் பேச்சால் இணைந்து இருக்க வேண்டிய இலையும் தாமரையும் தற்போது பிரிந்துள்ளதாம். கடந்த சில நாட்களுக்கு முன்பு தாமரையுடன் கூட்டணி என சேலம்காரர் அடித்து சொல்லிட்டாராம். அதன் பிறகு தலைவர் மவுன்டன் சில காலம் அமைதி காத்தார். ஆனால், அதன் பிறகு மக்களவை தேர்தலில் பாதி, பாதி சீட் என்ற பேச்சு வெளியான பிறகு இலைக்கும் சேலம்தரப்புக்கும் உள்ள நெருக்கத்தில் பெரிய ஓட்டை விழுந்துள்ளதாம். அது மட்டுமல்லாது தலைவர் மவுன்டன், இலை கட்சியின் மம்மியையும் விமர்சனம் செய்துள்ளாராம்.
இது ஒரு எதிரிக்கு இரண்டு எதிரிகளை தனக்கு எதிராக மவுன்டனே உருவாக்கிக் கொண்டாராம். இதனால் இலை கட்சி தலைவர் கூட்டணியில் ஓட்டை விழுந்துவிட்டது. அதை சரி செய்ய வேண்டும் என்று மவுன்டன் தன் தூதர்கள் மூலம் வேண்டுகோள் விடுத்துள்ளாராம். இந்நிலையில் தமிழ் கடவுளின் 2ம் படை வீடுக்கு சென்றார் சேலம்காரர். அப்போது கூட்டணி குறித்து அவரிடம் கேள்வி எழுப்ப தேர்தல் நேரத்தில் தான் கூட்டணி என உறுதியாக கூறி விட்டார். இதன் மூலம் தாமரை கட்சியை கூட்டணியில் இருந்து கழற்றி விடுவதை தான் சேலம்காரர் இப்படி மறைமுகமாக சொல்லி இருக்கிறாராம். இந்த கூட்டணி கழன்றால் போதும் என இலை கட்சியினர் பட்டாசு வெடிக்காத குறையாக முத்து நகர் விமான நிலையத்தில் ஜாலியாக இருந்தாங்களாம்…’’ என்றார் விக்கியானந்தா.
‘‘ டெல்டாவில் வைத்தியானவரின் டீமை உடைக்கும் பணி துவங்கி இருக்காமே, அப்படியா…’’ என்று கேட்டார் பீட்டர் மாமா. ‘‘ இலை கட்சியில் சேலம்காரர், தேனிக்காரர் என இரண்டு அணியாக உள்ளனர். கட்சியில் சேலம் அணிகாரர் கை ஓங்கியிருப்பதால் தேனிக்காரர் அணியில் உள்ள முக்கிய நிர்வாகிகளை இழுக்கும் நடவடிக்கைகள் தொடங்கி இருக்காம். டெல்டா மாவட்டத்தை குறிவைத்துள்ள சேலம்காரர், தேனிக்காரரின் நெருங்கிய ஆதரவாளரும், நெற்களஞ்சிய மாவட்ட மாஜி அமைச்சரான வைத்தியானவருக்கு செக் வைக்கும் முயற்சியில் தீவிரமாக இறங்கியுள்ளாராம். நெற்களஞ்சிய மாவட்டத்தில் உள்ள இரண்டாவது கட்ட நிர்வாகிகளை தங்கள் அணி பக்கம் சேலம்காரர் தன் பக்கம் கொண்டு வந்துள்ளார். ஆனாலும், வைத்தியானவருக்கு ‘செக்’ வைக்க முடியலையாம். தொடர்ந்து, நெற்களஞ்சியம், மனுநீதிசோழன், கடலோரம் உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் வைத்தியானவரின் ஆதரவாளர்களை உடைப்பதற்கான முயற்சியில் சேலத்துக்காரர் டீம் திரைமறைவான வேலையில் இறங்கியுள்ளதாம்…’’ என்றார் விக்கியானந்தா.
‘‘கவுன்சிலர்களின் தந்திரம் தெரிந்து எஸ்கேப் ஆனதா தாமரை தலைவரை பற்றி தகவல் வருதே…’’ என்று கேட்டார் பீட்டர் மாமா. ‘‘நாகர்கோவில் மாநகராட்சி தாமரை கவுன்சிலர்கள் சிலர், மவுண்ட் பங்கேற்ற பொதுக்கூட்டத்தில் நாங்கள் அவமானப்படுத்தப்பட்டோம். இதை மவுன்டிடம் கூறுவதற்காக அவரை நேரடியாக சந்திக்க வேண்டும் என்று சொல்லி வந்தாங்களாம். ஆனால் மவுண்ட் அவர்களை கண்டுகொள்ளவே இல்லையாம். அதனால் தாமரையை விட்டு வேறு கட்சிக்கு மாறப்போவதாக திடீரென்று ஒரு புரளியை கிளப்பி விட்டு இருக்காங்களாம். ஆனால், உண்மையில் அவர்கள் தாமரை கட்சியின் தீவிர ஆதரவாளர்களாம், அவர்கள் இந்த புறக்கணிப்பை தங்களுக்கு கிடைத்த ஒரு வாய்ப்பாக பயன்படுத்தி கட்சியில் பெரிய பதவிகளை எதிர்பார்த்து விளம்பரம் தேடிக்கொள்ள பார்க்கிறார்கள் என்கின்றனர் தாமரை கட்சியின் சீனியர்கள்…’’ என்றார் விக்கியானந்தா.
‘‘புதுச்சேரியில் இரண்டு பவர்புல் தலைவர்களை சந்திக்க விடாமல் தடுத்த ரகசியத்தை சொல்லுங்களேன்…’’ என்று கேட்டார் பீட்டர் மாமா. ‘‘புதுச்சேரியில் முத்ரா உள்ளிட்ட பல்வேறு கடனுதவிகள் வழங்கும் நிகழ்ச்சியில் ஒன்றியத்துக்கான கரன்சி அமைச்சர் கலந்து கொண்டார். முன்னதாக தலைமை செயலகத்தில் புதுச்சேரியின் நிதி நிலை தொடர்பான மறு ஆய்வு கூட்டம் நடந்தது. இதில் முதலில் பவர்புல் பெண்மணி பங்கேற்பதாக சொல்லி வந்தாங்க. ஆனால் இந்த கூட்டத்தில் ஒன்றிய கரன்சி அமைச்சர் மற்றும் மாநில முதல்வர் புல்லட்சாமி தனது பரிவாரங்களுடன் கலந்து கொண்டார். இந்த கூட்டத்தில் கலந்து கொள்ள திட்டமிட்டிருந்த இசை திடீரென ஆப்சென்ட் ஆனது பல்வேறு ஐயங்களை எழுப்பியுள்ளதாம்.
ஏற்கனவே ஒன்றிய அரசு நிதி கொடுக்க மறுக்கிறது என புல்லட்சாமி புலம்பி வருகிறார். எதிர்கட்சிகள் எல்லாம், புல்லட்சாமியின் அதிகாரத்தை மாநிலத்தின் பவர்புல் பெண்மணி பறித்து கொண்டாராம் என்று புல்லட்சாமி புலம்பி வருவதாக குற்றம்சாட்டி வந்தாங்க. இதற்கிடையே நிதி நிலை தொடர்பான ஆலோசனை கூட்டம் என்பதால் நிதியமைச்சர் பொறுப்பு வகிக்கும் புல்லட்சாமி கலந்து கொள்ளட்டும், நீங்கள் அங்கு செல்லக்கூடாது என புதுச்சேரியின் பவர்புல் பெண்மணிக்கு மேலிடத்து உத்தரவாம். நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி வரும் நேரத்தில், தேவையில்லாத சர்ச்சைக்கு இடம் கொடுக்கும் கூட்டத்தை தவிர்க்குமாறு இசைக்கு அறிவுறுத்தப்பட்டதாம். அதோடு ஒரே உறையில் இரண்டு கத்திகள் போல நிர்மா, தமிழ் கலந்து கொள்வது போல இருக்கும்னு நினைச்சாங்களாம். அதனால தான் தமிழ் கத்தியை அகற்றிவிட்டு, ஒன்றிய கத்திக்கு முக்கியத்துவம் கொடுத்து இருக்காங்களாம்.
எனவே இவர்களுக்குள்ளாகவும் மோதல் ஏற்பட்டுவிடக்கூடும் என்ற காரணங்களுக்காக புதுச்சேரி பவர்புல் பெண்மணி அந்த பக்கம் எட்டி பார்க்கவில்லையாம். மேலும் ஒன்றிய கரன்சி அமைச்சர் வருகையின் போது, புல்லட்சாமிக்கு தான் முதல் மரியாதையாம். அடுத்துதான் நிர்மலாவாம்… திடீர் முக்கியத்துவம் புல்லட்சாமியை திக்குமுக்காட வைத்துள்ளதாம்…’’ என்றார் விக்கியானந்தா. ‘‘அரசியல் செய்யலாம் என நினைத்தவர்கள் எல்லாம் வாயடைத்துப் போய் விட்டார்களாமே..’’ என்று கேட்டார் பீட்டர் மாமா. கோவையில் டிஐஜி விஜயகுமார், துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இந்த விவகாரம் வெளியானவுடன் டிஜிபி சங்கர் ஜிவால், உடனடியாக சட்டம் ஒழுங்கு ஏடிஜிபி அருணை, கோவைக்கு அனுப்பி வைத்து நிலைமையை நேரில் விசாரிக்க உத்தரவிட்டார். அவர் சென்று விசாரித்து மருத்துவமனையில் அஞ்சலி செலுத்தி விட்டு அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். பின்னர் சம்பவம் குறித்து நடந்த உண்மைகளை பேட்டியாக கொடுத்து விட்டார். அதிகாரிகள் பேச மாட்டார்கள். இதை வைத்து அரசியல் செய்யலாம் என்று எதிர்க்கட்சிகள் காத்திருந்தனர். ஆனால் உயர் அதிகாரிகள் முன் கூட்டியே உண்மையை கூறிவிட்டதால், எதிர்க்கட்சிகளால் அரசியல் செய்ய முடியவில்லை… ’’
என்றார் விக்கியானந்தா.
The post புதுச்சேரியில் பவர்புல் பெண்மணியை டம்மியாக்கிய தகவலை சொல்கிறார்: wiki யானந்தா appeared first on Dinakaran.