பூரன ஞானமருளும் நாமம்

ரத்ன கிங்கிணிகா ரம்ய
ரசனா தாம பூஷிதா

இதற்கு முந்தைய நாமத்தில் அம்பிகையானவள் தன்னுடைய இடைப் பகுதியில் அணிந்து கொண்டிருக்கக்கூடிய வஸ்திரத்தைப்பற்றிய நாமத்தையும் அதனுடைய அத்யாத்மிகமான தத்துவார்த்தத்தையும் பார்த்தோம். இதற்கு அடுத்தபடியாக அந்த சிவப்பு வஸ்திரத்தை அணிந்திருக்கக்கூடிய இடைப் பகுதியில் இன்னொரு முக்கியமான ஆபரணம் அணிந்திருக்கிறாள். இதை நாம் ஒட்டியாணம் மாதிரிகூட சொல்லலாம். ஆனால், ஒட்டியாணத்திற்கும் அதற்கும் வித்தியாசம் உண்டு. இன்னும் சரியாகச் சொன்னால், தங்கத்தில் அரைஞாண் கயிற்றை சொல்கிறோம் அல்லவா அதுபோன்றது என்றும் சொல்லலாம். இந்த தங்கத்தால் ஆன ஆபரணத்தில், அம்பாள் நடக்கும்போது ஒலி எழுப்பக் கூடிய சின்னச் சின்ன சதங்கைகள் இருக்கிறது. அதற்குப்பிறகு ரத்தினங்கள் அந்த ஆபரணத்திலிருக்கின்றன. இந்த ரத்தினங்கள் எல்லாமுமே அந்த ஆபரணத்தில் அப்படியே தொங்கிக் கொண்டிருக்கின்றன.

இதைத்தான் இங்கு வசின்யாதி வாக் தேவதைகள் ரத்ன கிங்கிணிகா ரம்ய ரசனா தாம பூஷிதா… என்கிறார்கள். ரத்தினங்களாலும், சதங்கைகளாலும் அழகாக இருக்கக்கூடிய அந்த ஆபரணத்தை, தங்கத்தால் ஆன அரைஞாண் கயிறு என்கிற ஆபரணத்தை அம்பாள் அணிந்திருக்கிறாள். கிங்கிணி என்பது ஒலியை எழுப்பக்கூடிய சதங்கையை குறிக்கின்றது. ரத்னம் என்பது அதில் பதிக்கப்பட்டிருக்கக்கூடிய ரத்னங்களை குறிக்கிறது. அதெல்லாம் சேர்ந்து ரம்ய ரசனா தாம பூஷிதா… மிகவும் அழகாக இருக்கக்கூடிய அந்த தங்கத்தால் ஆன அந்த ஆபரணத்தை அம்பிகை தன்னுடைய இடைப்பகுதியில் அணிந்திருக்கிறாள். இது இந்த நாமத்திற்காக நேரடியாக பொருள். இதனுடைய உள்ளார்த்தம் அல்லது தத்துவார்த்தத்தையும் பார்ப்போம் வாருங்கள்.

இதற்கு முந்தைய நாமத்தில் சிவப்பு வஸ்திரத்தை சமாதி அவஸ்தை என்றும், அதில் மூன்று மடங்கு சிவப்பாக சொல்லியிருப்பதனால் சவிகல்ப, நிர்விகல்ப, சகஜ சமாதிகளை குறிப்பிடுகின்றது என்று பார்த்தோம். இப்போது இந்த நாமாவானது யோக ரீதியிலான நாமமாக இருக்கின்றது. இதற்கு முன்னால் சொன்ன அந்த வஸ்திரம் சகஜ சமாதி நிலையை குறிப்பிடுகின்றது எனில், அந்த சமாதி நிலையை அடைவதற்கு அந்த சாதகன் முயற்சி செய்யும்போது, அதற்குரிய சாதனைகளைச்செய்யும்போது என்பதை நாம் கொஞ்சம் அலசிப்பார்ப்போம்.

இங்கு ஆன்மிகச்சாதனை செய்யும்போது என்று வைத்துக்கொண்டால் அதில் பக்தியோகமோ, கர்மயோகமோ, ராஜயோகமோ அல்லது ஞானயோகமோ என்று எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம். உதாரணமாக, ஒருவர் ஞானயோகத்தில் சென்று நான் யார் என்று ஆத்ம விசாரத்தில் ஈடுபடும்போது, யோக மார்க்கத்தில் ஈடுபட்டவர்களுக்குள் என்னென்ன மாற்றங்கள் நிகழுமோ அவையெல்லாம் தானாக நடக்கும், பக்தியில் தீவிரமாக இருக்கிறான் எனில், யோக மார்க்கத்தில் ஏற்படும் உள் மாற்றங்கள் எல்லாமுமே நடந்து கொண்டேயிருக்கும், ஏனெனில் உள்ளுக்குள் ஒன்றுடன் ஒன்று தொடர்பு கொண்டவையாகும். இதுதான் நாம் கடைப்பிடிக்கக்கூடிய சாதனையின் அழகு ஆகும், யோக சாதனையில் முன்னேறுபவருக்கு ஞானம், கர்மயோகம், பக்தியோகம் போன்றவற்றில் தொடர்ச்சியாக நிகழும் மாற்றங்கள் யாவும் அநாயாசமாக நடந்தபடி இருக்கும்,

ஏதோ சாதனையை எடுத்துக் கொண்டோம். மற்ற சாதனைகளை விட்டுவிட்டோம் என்று கவலைப்பட வேண்டாம். ஒன்றில் முன்னேற முன்னேற தீவிரமாக தீவிரமாக மற்ற மார்க்கத்திலும் நீங்கள் உங்களை அறியாது பயணிப்பீர்கள். மற்ற வாயில்களும் அவர் விரும்புகிறாரோ விரும்பவில்லையோ, தானாகத் திறந்து கொள்ளும். அப்போது பக்தி ஒருவருக்கு எவ்வளவுக்கு எவ்வளவு தீவிரமாக இருக்கிறதோ அவ்வளவுதூரம் ஞானம் கண்டிப்பாக சித்திக்கும். அதேபோல, யோகரீதியாக யோக சாதனைகளான பிராணாயமோ, பூரகம், ரேசகம், கும்பகம், குண்டலினியை எழுப்ப வேண்டிய அவசியம் என்று எதுவுமே செய்யாமல் இருந்தாலும்கூட, தீவிர பக்தியிலோ அல்லது ஞான மார்க்கத்திலோ பயணிக்கும்போது, யோக வழிகளும் உள்ளுக்குள் தானாகத் திறந்து கொள்ளும். இது ஆன்மிக சாதனைகளுக்குள் உள்ள ரகசியம்.

உதாரணமாக, விஷ்ணுவை தீவிரமாக உபாசிப்பவர்கள் உண்மையில் அதற்கு சிவ வழிபாட்டையும் சேர்த்தேயும், சிவ வழிபாட்டை உபாசிப்பவர்கள் அதற்குள் தீவிரமாக விஷ்ணுவையும் என்று அந்தந்த மார்க்கத்தில் பயணம் செய்பவர்கள் எல்லாவற்றையும் சேர்த்தே செய்து கொண்டு செல்கிறார்கள். வழிபாட்டின் ஆதார சுருதியும்கூட இதுதான். அதேதான் இங்கேயும் ஆன்மிக நான்கு மார்க்க சாதனைகளிலும் செயல்படுகின்றது.இங்கு கவனிக்க வேண்டிய விஷயம் என்னவெனில், மனம் அதி நுட்பமாக சூட்சுமமாகச் செல்லும்போது காட்சிகள் தென்படும். சில அமானுஷ்யமாகக்கூட நடக்கும். நம்முடைய புலன்களுக்கு அப்பால் நடப்பதைக் கூட நாம் அறிவோம். காரணம் என்னவெனில், மனம் அதி சூட்சுமமாகச் சென்று கொண்டிருக்கிறது. அப்போதுதான் ஞானிகள் நம்மை வேறு மாதிரி எச்சரிக்கிறார்கள்.

ஏனெனில், இவ்வாறு புலன்களுக்கு அப்பாற்பட்ட காட்சிகளோ ஓசைகளோ வரும்போது அதிலேயே நிற்காமல் அதையெல்லாம் பிரசாதம் என்று ஏற்றுக் கொண்டு லட்சியார்த்தமான ஞானமே அல்லது தன்னை அறிதலே, சொரூபத்தை அடைவதே முக்கியம் என்று பிரார்த்தித்தபடி முன்னேற வேண்டும். அதனால்தான், பல ஞானிகள் சித்திகளை கண்டிப்பதோடு மட்டுமல்லாமல் அவையெல்லாம் அங்கு இருந்தன நாங்கள் எதுவும் செய்யவில்லை என்று நகர்ந்து மேலே சென்று விட்டார்கள். ஏனெனில், சிலர் பக்தியை கைக்கொள்ளும்போதே சில சித்திகளும் வரலாம். இது அவருடைய யோக ரீதியிலான உள்மாற்றத்தை உணர்த்துபவையாகும். உங்களுக்கு இந்த இடத்தில்தான் குருவின் அனுக்கிரகம் செயல்படும். மிகச் சரியாக அந்தந்த நிலையைத்தாண்டி உங்களை அவர் எடுத்துக் கொண்டு போவார். நீங்களாக அந்த குருவை கண்டுப் பிடிக்கவும் முடியாது. வரவும் மாட்டார் என்றும் உங்களால் சொல்ல முடியாது. நீங்கள் தீவிர ஆன்மிகத்தில் ஆர்வம் திரும்பும்போது எல்லா சக்திகளும் உங்களுக்கு உதவ சட்டென்று வந்து உதவுவதைக்காணலாம்.

இப்போது இந்த நாமத்தைச் சொல்லும்போது, ரத்ன கிங்கிணிகா ரம்ய ரசனா தாம பூஷிதா… என்று வருகின்றது. இந்த நாமத்தில் இரண்டு விஷயங்கள் சூட்சுமமாக சொல்லப்படுகின்றது. என்னவெனில், ரம்ய ரசனா தாம பூஷிதா… அழகான அந்த ஆபரணத்தை அம்பாள் அணிந்திருக்கிறாள். அதற்கு முன்னால் ஒன்று ரத்ன… இன்னொன்று கிங்கிணிகா… இந்த இரண்டும் நமக்கு ஒரு முக்கியமான விஷயத்தை காண்பிக்கின்றது. இந்த கிங்கிணிகா என்பது அந்த அம்பாள் இடையில் அணிந்திருக்கக்கூடிய சின்னச் சின்ன சதங்கைகள். அந்த சதங்கைகள் வந்து சதாகாலமும்… அம்பிகை அசையும்போதெல்லாம் ஒலியை எழுப்பிக் கொண்டேயிருக்கும். அம்பிகை நடந்தாலும்… அசைந்தாலும்… திரும்பினாலும்… ஒசை எழுப்பிக் கொண்டேயிருக்கும். அசைந்து அசைந்து தன்னுடைய பக்தர்களை பார்க்கும்போது கிங்கிணிகா என்ற சதங்கைகள் ஒலியை எழுப்பிக் கொண்டே இருக்கும். அதற்கு முன்னால் ரத்னமும் இருக்கின்றது. வெறும் சதங்கை மட்டுமல்ல. இந்த ரத்னங்கள் ஒளி விடுகின்றன. கிங்கிணி ஓசையையும், ரத்னங்கள் ஒளியையும் தருகிறது.

இது எதைக் காண்பித்துக் கொடுக்கின்றதெனில், ஒரு சாதகன் முன்னேறும்போது தன்னுடைய ஆன்மிகம் முன்னேறும்போது அவன் அறிந்தோ அறியாமலோ அவன் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் சில அனுபவங்கள் அவனுக்குக் கிடைக்கும். அந்த அனுபவங்களில் முக்கியமான அனுபவங்களாக சொல்லப்படுவது என்பது நாதானுபவமே ஆகும். உபநிஷதமே இதை நாதானுபவம் என்றே சொல்கிறது. அதிலேயும் தச நாதானுபவம் என்றே குறிப்பிட்டுச் சொல்கிறது. பத்துவிதமான நாதங்கள் அவனுக்குக் கேட்கும் என்று சொல்கிறது. எப்போது கேட்குமெனில் அந்த சாதகனானவன் அநாகத சக்ரத்தில் அல்லது இருதய ஸ்தானத்தில் லயிக்கும்போது… அநாகதம் என்றால் தட்டாமல் ஒலி எழுப்புவது அநாகதம். ஆகதம் என்றால் தட்டி ஒலி எழுப்புதல். இரண்டு கைகளை தட்டினால் ஒலி எழுப்பும். மேளத்தையோ மிருதங்கத்தையோ தட்டினால் ஒலி எழும்பும். ஆனால், தட்டாமல் ஒலி வருமா எனில், அந்த தட்டாமல் வரக்கூடிய ஒலி என்பது பிரகிருதியில் மட்டும்தான் சாத்தியம்.

இயற்கையில் வரும் ஒலியில் மட்டும்தான் சாத்தியம். செயற்கையாக நம்மால் தட்டாமல் ஒலி எழுப்ப முடியாது. ஆனால், இயற்கையாக தட்டாமல் ஒலி எழும்பும். காற்றடித்தல், நெருப்பு மூட்டும்போது வரும் ஒலி சூட்சுமமாக ஏதோ உள்ளுக்குள் ஒரு காரணம் இருந்து அந்த ஒலி வருகின்றது. இடி இடிக்கின்றது எனில் இரண்டு மேகங்கள் மோதுகின்றன. இப்போது இரண்டு மேகங்கள் மோதுவது என்பது அந்த இடி சத்தத்திற்கு ஒரு காரணமாக இருக்கின்றது. ஆனால், காரணமே இல்லாமல் ஒரு ஒலி எழும்பும் அப்படியென்றால், அந்த ஒலிக்குத்தான் அநாகதம் என்று பெயர். எந்தக் காரணமும் ஸ்தூலம், சூட்சுமம், அதி சூட்சுமம் என்று எந்தக் காரணமும் இருக்கக் கூடாது. இரண்டு விஷயங்களில் தொடர்பு இல்லாமல், ஒரு காரணம் என்று இல்லாமல் தானாகவே ஒரு ஒலி எழும்பினால் அந்த ஒலிக்கு அநாகதம் என்று பெயர்.

இப்போது நாம் பேசுகிற பேச்சு (speech) என்பதுகூட அநாகதம் கிடையாது. இது வெறும் ஆகதம்தான். ஏனெனில், மூச்சுக்காற்றானது தொண்டைப்பகுதி என்கிற குரல்வளையை தட்டியதற்குப் பின்னால்தான் வருவதே பேச்சு ஆகும். இப்படி தட்டாமல் எழுப்பக் கூடிய ஒலிக்கு அநாகத நாதம் என்றுபெயர். இந்த அநாகத நாதத்தை உபநிஷதம் பத்து விதங்களாக காண்பித்துக் கொடுக்கின்றது. இப்படி பத்து விதங்களாக வெளிப்படும் நாதத்தில், முதல் நாதம் எப்படி கேட்குமெனில்… ஒரே சலங்கை இப்படியும் அப்படியுமா அசைத்தால் ஷிணி… ஷிணி… என்று கேட்கும். இரண்டு சதங்கைகளை அசைத்தால் ஷிணீ… ஷிணீ… ஷிணி… ஷிணீ… என்று கேட்கும்.

(இந்த நாமத்தின் தொடர்ச்சி அடுத்த பதிவில் .)

 

The post பூரன ஞானமருளும் நாமம் appeared first on Dinakaran.

Related Stories: