பூந்தமல்லி ஊராட்சி ஒன்றிய குழு கூட்டம்: முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றம்

பூந்தமல்லி: பூந்தமல்லி ஊராட்சி, ஒன்றியக் குழு கூட்டத்தில் நேற்று, வீடு கட்ட அனுமதி உட்பட பல முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. பூந்தமல்லி ஒன்றிய குழு கூட்டம் ஒன்றிய குழு தலைவர் பூவை எம்.ஜெயக்குமார் தலைமையில் நேற்று நடைபெற்றது. ஒன்றிய குழு துணைத் தலைவர் பரமேஸ்வரி கந்தன், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் எம்.ராம்குமார், சீ.காந்திமதிநாதன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் ஒன்றிய குழு உறுப்பினர்கள் கோரிக்கை வைத்து பேசியதாவது,
என்.பி.மாரிமுத்து : நேமம் ஊராட்சியில் ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் அமைக்கப்பட்ட சுடுகாடு உள்ளது. தற்பொழுது அதிக குடியிருப்புகள் வந்துவிட்டதால், பிணங்களை புதைக்க இடமில்லை. எனவே சுடுகாட்டிற்கு கூடுதல் இடம் ஒதுக்கீடு செய்து மின்சார நவீன தகனம் மேடை அமைக்க வேண்டும். சத்தியபிரியா முரளி கிருஷ்ணன் : எங்கள் பகுதி மக்கள் புதியதாக வீடு கட்டுவதற்கு சிஎம்டிஏ விடம் விண்ணப்பித்து பல மாதங்களாகியும் இதுவரை அனுமதி வழங்கப்படவில்லை.

சிவகாமி சுரேஷ் : பாரிவாக்கம் ஊராட்சியில் புதியதாக கட்டப்பட்டு வரும் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு செல்லும் சாலையை அமைப்பதற்காக ஒன்றிய பொது நிதியிலிருந்து நீதி ஒதுக்கீடு செய்ய வேண்டும். வி.கன்னியப்பன் : சென்னீர்குப்பம் ஊராட்சியில் கருவூலம் அருகே குப்பையை கொட்டி எரிப்பதால், அப்பகுதி மக்களுக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டு பெரிதும் பாதிக்கப்படுகின்றனர். எனவே இதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். சென்னீர்குப்பம் ஊராட்சிக்கு நிரந்தர ஊராட்சி செயலாளரை நியமிக்க வேண்டும்.

உமா மகேஸ்வரி சங்கர் : வரதராஜபுரம், நசரத்பேட்டை, அகரமேல் ஆகிய 3 ஊராட்சிகளையும் இணைக்கும் பி.வி.பி.கோயில் தெரு, சொக்கலிங்கம் தெரு, கோவிந்தராஜ் தெரு ஆகிய 3 தெருகளும் பழுதடைந்து 10 ஆண்டுகள் ஆகிறது. உடனடியாக இந்த சாலையை சீரமைக்க வேண்டும்.

வட்டார வளர்ச்சி அலுவலர் : நேமம் ஊராட்சியில் அதிநவீன மின்சார தகன மேடை அமைக்க அரசுக்கு பரிந்துரை செய்யப்படும். புதியதாக வீடுகட்ட சிஎம்டிஏ வில் விண்ணப்பித்தவர்களுக்கு அனுமதி கிடைக்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும். சென்னீர்குப்பம் ஊராட்சியில் கொட்டப்படும் குப்பைகளை கொடுங்கையூர் குப்பை கிடங்கிற்கு அனுப்பி வைப்பதற்காக ஊராட்சிகளின் உதவி இயக்குனர் மூலம் மாவட்ட கலெக்டரிடம் அனுமதி பெற உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.
இந்தக் கூட்டத்தில், பூந்தமல்லி ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட கிராமப்புற பகுதிகளில் குடிநீர், சாலை, கால்வாய் உள்ளிட்ட அடிப்படை வசதிக்கான பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் உள்ளிட்ட பல தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இக்கூட்டத்தில் ஒன்றியக்குழு உறுப்பினர்கள் பத்மாவதி கண்ணன், ஜெயஸ்ரீ லோகநாதன், என்.பி.மாரிமுத்து, சத்யபிரியா முரளி கிருஷ்ணன், சிவகாமி சுரேஷ், பிரியா செல்வம், உமாமகேஸ்வரி சங்கர், பி.டில்லிகுமார், விகன்னியப்பன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

The post பூந்தமல்லி ஊராட்சி ஒன்றிய குழு கூட்டம்: முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றம் appeared first on Dinakaran.

Related Stories: