பொங்கல் பரிசு தொகுப்பை சிறப்பாக வழங்கிய ரேஷன் கடை ஊழியர்களுக்கு ரூ.1 கோடி ஊக்கத்தொகை: தமிழ்நாடு அரசு அரசாணை வெளியீடு; ஒரு அட்டைக்கு 50 பைசா கிடைக்கும்

சென்னை: பொங்கல் பரிசு தொகுப்பை சிறப்பாக வழங்கிய நியாய விலை கடை (ரேஷன் )பணியாளர்களுக்கு ஒரு குடும்ப அட்டைக்கு 50 பைசா வழங்கும் வகையில் தமிழ்நாடு அரசு ரூ.1 கோடிக்கு ஒப்புதல் அளித்து அரசாணை வெளியிட்டுள்ளது. இதுகுறித்து கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் சுப்பையன் நேற்று வெளியிட்டுள்ள அறிவிப்பு: தமிழ்நாடு நியாயவிலை கடை பணியாளர்களின் கூடுதல் பணிச்சுமையை கவனத்தில் கொண்டு, அவர்களை ஊக்கப்படுத்தும் விதமாக ஒரு குடும்ப அட்டைக்கு 50 காசு வீதம் அனுமதித்து ஆணை வழங்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. கூட்டுறவு சங்கங்களின் பதிவாளரின் கருத்துருவினை அரசு கவனமுடன் பரிசீலித்து பொங்கல் பரிசு தொகுப்பினை சிறப்பாக வழங்கியமைக்காக தமிழ்நாடு நியாயவிலை கடை பணியாளர்களின் கூடுதல் பணிச்சுமையை கருத்தில் கொண்டு அவர்களை ஊக்கப்படுத்தும் விதமாக ஒரு குடும்ப அட்டைக்கு ஐம்பது பைசா வீதம் 33,609 நியாயவிலை கடைகளில் பணிபுரியும் 20,712 பணியாளர்களுக்கு ரூ.1 கோடியே 7 லட்சத்து 36 ஆயிரத்து 750 மட்டும் அனுமதித்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

இந்த தொகையை வழங்க தமிழ்நாடு மாநில தலைமை கூட்டுறவு வங்கியில் வரவு வைக்க பதிவாளர் அலுவலக நிதி ஆலோசகர் மற்றும் முதன்மை கணக்கு அலுவலருக்கு அங்கீகாரம் அளிக்கப்படுகிறது. இதையடுத்து நியாயவிலை கடைகளில் பணிபுரியும் பணியாளர்களுக்கு வழங்கப்பட வேண்டிய ஊக்கத்தொகை, மண்டலம் வாரியாக பிரிக்கப்பட்டு, ஒவ்வொரு மண்டலத்திற்கும் சேரவேண்டிய தொகையினை சம்பந்தப்பட்ட மத்திய கூட்டுறவு வங்கிகளின் கணக்கில் வைக்கப்படும். பின்னர் முறைப்படி நியாய விலை கடை பணியாளர்களுக்கு இந்த ஊக்கத்தொகை வழங்கப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

The post பொங்கல் பரிசு தொகுப்பை சிறப்பாக வழங்கிய ரேஷன் கடை ஊழியர்களுக்கு ரூ.1 கோடி ஊக்கத்தொகை: தமிழ்நாடு அரசு அரசாணை வெளியீடு; ஒரு அட்டைக்கு 50 பைசா கிடைக்கும் appeared first on Dinakaran.

Related Stories: