புதுவை அரசுப்பணிக்கான தேர்வில் தாழ்த்தப்பட்ட பிரிவினரை விட உயர்ஜாதியினருக்கு குறைந்த கட்-ஆப்!

புதுச்சேரி : புதுச்சேரி அரசு துறையில் காலியாக உள்ள மேல்நிலை எழுத்தர் பணிக்கான தேர்வில் தாழ்த்தப்பட்ட பிரிவினரை விட பொருளாதாரத்தில் பின் தங்கிய உயர் சாதியினருக்கு கட் ஆப் மதிப்பெண் வெகுவாக குறைக்கப்பட்டு இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. புதுச்சேரி மாநிலத்தில் உள்ள அரசு பணியாளர் மற்றும் நிர்வாக சீர்திருத்தத் துறை மூலம் அங்கு காலியாக உள்ள 116 மேல்நிலை எழுத்தர் பணியிடங்களுக்கான எழுத்துத் தேர்வு கடந்த 23ம் தேதி நடைபெற்றது. இந்த தேர்வினை புதுச்சேரி, காரைக்கால், மாஹேவில் அமைக்கப்பட்டு இருந்த 133 தேர்தல் மையங்களில் 38,067 பேர் எழுதினர்.

தற்போது தேர்வு முடிவுகள் வெளியாகி உள்ளன. இதில் தாழ்த்தப்பட்ட பிரிவினருக்கு 18 இடங்களும் பொருளாதாரத்தில் பின் தங்கிய உயர் ஜாதியினருக்கு 11 இடங்களும் ஒதுக்கப்பட்டுள்ளன. தாழ்த்தப்பட்ட பிரிவினருக்கு கட் ஆப் மதிப்பெண்கள் 40 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஆனால் EWS எனப்படும் பொருளாதாரத்தில் பின் தங்கிய உயர் ஜாதியினருக்கு 30.75 கட் ஆப் மதிப்பெண்கள் எடுத்தாலே போதுமானது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அண்மைக் காலமாக வங்கி உள்ளிட்ட அரசு பணிகளில் உயர் ஜாதியினருக்கு குறைந்த கட் ஆப் மதிப்பெண்களை நிர்ணயிக்கும் போக்கு அதிகரித்து வருகிறது.

கடந்த 2019ம் ஆண்டு பாரத ஸ்டேட் வங்கியில் எழுத்தர் பணிக்கான தேர்வில் பட்டியல் சாதியினருக்கு 61.25 மதிப்பெண்களும் பழங்குடி இனத்தனவருக்கு 53.75 மதிப்பெண்களும் கட் ஆப் மதிப்பெண்களாக நிர்ணயம் செய்யப்பட்டது. ஆனால் பொருளாதாரத்தில் பின் தங்கிய உயர் சாதியினருக்கு கட் ஆப் மதிப்பெண் வெறும் 28.50 ஆக நிர்ணயிக்கப்பட்டது சர்ச்சையை கிளப்பியது குறிப்பிடத்தக்கது.

The post புதுவை அரசுப்பணிக்கான தேர்வில் தாழ்த்தப்பட்ட பிரிவினரை விட உயர்ஜாதியினருக்கு குறைந்த கட்-ஆப்! appeared first on Dinakaran.

Related Stories: