×

அரசியல் போராட்டங்களில் நீதித்துறையை ஏன் தேவையில்லாமல் இழுக்கிறீர்கள்?: முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகத்துக்கு ஐகோர்ட் அதிருப்தி

சென்னை: அரசியல் போராட்டங்களில் நீதித்துறையை ஏன் இழுக்கிறீர்கள்? என முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகத்துக்கு உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. தமிழக அரசின் பல்வேறு நடவடிக்கைகளை கண்டித்தும், முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கைதை கண்டித்தும் போராட்டங்களில் ஈடுபட்டது, சாலை மறியலில் ஈடுபட்டது, விழுப்புரத்தில் கடல் நீரை குடிநீராக்கும் திட்டத்தை எதிர்த்து போராடியது உள்ளிட்டவை தொடர்பாக அதிமுக முன்னாள் அமைச்சரும், மாநிலங்களவை உறுப்பினருமான சி.வி.சண்முகம் மீது 12 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.

போராட்டம் நடத்தியதாக தன் மீது தொடரப்பட்ட வழக்குகளை ரத்து செய்யக் கோரி உயர்நீதிமன்றத்தில் சி.வி.சண்முகம் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கு இன்று நீதிபதி ஆனந்த வெங்கடேஷ் முன்பு விசாரணைக்கு வந்தது. அச்சமயம் சி.வி.சண்முகம் தரப்பில் வைக்கப்பட்ட வாதங்களை கேட்ட நீதிபதி, 2 வழக்குகளில் தமிழக காவல்துறை 6 வாரங்களில் பதில் அளிக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளார். 3 வழக்குகளில் குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்யப்பட்டதை சுட்டிக்காட்டி சம்பந்தப்பட்ட விசாரணை நீதிமன்றத்தை நாடி உரிய நிவாரணம் பெற்றுக்கொள்ளும்படி அறிவுறுத்தியுள்ளார்.

அதே சமயம் சி.வி.சண்முகத்துக்கு எதிராக பதிவு செய்யப்பட்ட 6 வழக்குகள் இதுவரை குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யாததை சுட்டிக்காட்டி அவற்றை ரத்து செய்தும் உத்தரவிட்டார். ஒரு வழக்கை மட்டும் திரும்ப பெறுவதற்கு அனுமதி அளித்து சி.வி.சண்முகத்துக்கு உத்தரவிட்டுள்ளார். இதனிடையே ஜெயகுமார் கைது செய்யப்பட்டபோது அவரை சிறையில் எடுத்த நீதிபதி பயமுறுத்தப்பட்டிருக்கிறார், அச்சுறுத்தப்பட்டுள்ளார், மிரட்டப்பட்டிருக்கிறார் என்று போராட்டத்தில் சி.வி.சண்முகம் பேசியுள்ளார்.

இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்யப்பட்டிருப்பதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது. அப்போது குறுக்கிட்ட நீதிபதி, அரசியல் போராட்டங்களில் நீதித்துறையை ஏன் தேவையில்லாமல் இழுக்கிறீர்கள்? என்றும் நீதிபதி மிரட்டப்பட்டிருக்கிறார் என்று எப்படி கூற முடியும்? என்றும் சி.வி.சண்முகம் தரப்புக்கு கேள்வி எழுப்பினார். உங்கள் அரசியலுக்காக நீதிமன்றத்தை இழுக்காதீர்கள் என்றும் அதிருப்தி தெரிவித்ததுடன், நீதித்துறையை பொருத்தவரை அரசியல் கட்சிகளை பார்ப்பதில்லை; ஒரேயொரு அரசு தான் என்றும் தெரிவித்து சில வழக்குகளில் விசாரணையை தள்ளி வைத்துள்ளார்.

The post அரசியல் போராட்டங்களில் நீதித்துறையை ஏன் தேவையில்லாமல் இழுக்கிறீர்கள்?: முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகத்துக்கு ஐகோர்ட் அதிருப்தி appeared first on Dinakaran.

Tags : CV ,Shanmughat ,Chennai ,High Court ,minister ,Shanmugam ,Tamil Nadu Government ,Shanmukha ,
× RELATED சூடுபிடிக்கும் விக்கிரவாண்டி...