×

கள்ளக்குறிச்சி சம்பவம் தொடர்பாக நேற்றும் அமளி அதிமுக உறுப்பினர்கள் பேரவையில் இருந்து வெளியேற்றம்

* அவை நடவடிக்கைகளில் ஒருநாள் பங்கேற்க தடை,சட்டப்பேரவை தலைவர் அப்பாவு உத்தரவு

கள்ளக்குறிச்சி சம்பவம் தொடர்பாக சட்டசபையில் நேற்றும் அதிமுக உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டதால் அவர்களை வெளியேற்றுமாறு சபாநாயகர் அப்பாவு உத்தரவிட்டார். இதையடுத்து அதிமுக உறுப்பினர்களை அவைக்காவலர்கள் வெளியேற்றினர். ஒருநாள் (நேற்று) மட்டும் அவை நடவடிக்கைகளில் அதிமுக உறுப்பினர்கள் கலந்து கொள்ள கூடாது என்று சபாநாயகர் அறிவித்தார். தமிழக சட்டப்பேரவையில் எதிர்க்கட்சி தலைவர் பழனிசாமி மற்றும் அதிமுக உறுப்பினர்கள் நேற்றும் கருப்பு சட்டை அணிந்து வந்தனர்.

சரியாக 10 மணிக்கு அவை தொடங்கியதும் சபாநாயகர் அப்பாவு, திருக்குறள் உரை வாசித்தார். அது முடிந்ததும் அதிமுக உறுப்பினர்கள் எழுந்து நின்று கோஷமிட்டனர். அவர்களை அமருங்கள் என்று சபாநாயகர் எச்சரித்தார். தொடர்ந்து அவர்கள் எழுந்து நின்று கூச்சலிட்டனர். அப்போது சபாநாயகர், ‘நீங்கள் பேசுவது எதுவும் அவை குறிப்பில் ஏறாது. கேள்விநேரம் முடிந்தவுடன் பேச வாய்ப்பு தருகிறேன். ஏற்கனவே கூடிப் பேசி இங்கு வந்து அவையின் மாண்பை கெடுக்கிறீர்கள்’ என்றார். (தொடர்ந்து அதிமுகவினர் கூச்சல் எழுப்பினர்).

சபாநாயகர்: அவை நடவடிக்கைகளுக்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் செயல்பட்டதால் ஒருநாள் மட்டும் வெளியேற்ற உத்தரவிடுகிறேன். கவனஈர்ப்பு தீர்மானத்தின் மீது பேச முன்வராமல் ரகளையில் ஈடுபட்டு வெளியேற்றப்பட்டீர்கள். அப்போதே முதல்வர், ‘முக்கியமான பிரச்னை கவனஈர்ப்பு தீர்மானத்தில் பேசப்பட உள்ளதால் அதிமுக உறுப்பினர்களை மீண்டும் அவைக்கு அழைக்க வேண்டும்’ என்று கேட்டு கொண்டார். அதனடிப்படையில் அதிமுக உறுப்பினர்களை மீண்டும் வரச்சொல்லி உத்தரவிட்டேன்.

ஒரு கூட்டத்தொடரில் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்று முன்னாள் முதல்வராக இருந்த எடப்பாடி பழனிச்சாமிக்கும், அதிமுகவின் முன்னாள் அமைச்சர்களுக்கும் தெரியும். இருந்தும் அரசியலாக்க வேண்டும் என நினைத்து இப்படி நடக்கிறார்கள். ஒத்திவைப்பு தீர்மானம் கொண்டு வந்தால் அதன் மீது முடிவெடுத்து கேள்வி நேரத்தை ஒத்தி வைக்கலாம். ஆனால், அதை விட்டுவிட்டு அவையின் மாண்பை கெடுக்கும் வகையில் நடந்து கொண்டதால் அவர்களை வெளியேற்றுமாறு அவை காவலர்களுக்கு உத்தரவிடுகிறேன்.

(இதையடுத்து அதிமுக உறுப்பினர்களை அவை காவலர்கள் வெளியேற்றினர்). அமைச்சர் கே.என்.நேரு: அதிமுகவினர் வேண்டுமென்றே சபை நடவடிக்கைகளுக்கு குந்தகம் விளைவித்து வருகிறார்கள். பேரவை விதி 121 (2)ன் கீழ் ரகளையில் ஈடுபட்ட அதிமுக உறுப்பினர்களை கூட்டத்தொடர் முழுவதும் சஸ்பெண்ட் செய்ய வேண்டும்.

முதல்வர் மு.க.ஸ்டாலின்: கூட்டத்தொடர் முழுவதும் தேவையில்லை. இன்றைக்கு மட்டும் வெளியேற்றினால் போதும். அவர்களுக்கு மீண்டும் கூட்டத்தில் கலந்து கொள்ள வாய்ப்பு தாருங்கள். இதையடுத்து, கூட்டத் தொடரில் கலந்து கொண்ட அதிமுக உறுப்பினர்கள் அனைவரையும் (நேற்று) ஒரு நாள் மட்டும் பேரவை நடவடிக்கைகளில் இருந்து விலக்கி வைக்க உத்தரவிட்டார்.

The post கள்ளக்குறிச்சி சம்பவம் தொடர்பாக நேற்றும் அமளி அதிமுக உறுப்பினர்கள் பேரவையில் இருந்து வெளியேற்றம் appeared first on Dinakaran.

Tags : Amali ,AIADMK ,Kallakurichi incident ,Speaker ,Appavu ,Aamli AIADMK ,Kallakurichi ,Dinakaran ,
× RELATED தனிநபருக்கு எத்தனை பாட்டில்...