×

சூடுபிடிக்கும் விக்கிரவாண்டி இடைத்தேர்தல் சி.வி.சண்முகம் செல்வாக்கை காலி செய்ய சகலையை வேட்பாளராக்க பாமக திட்டம்

விழுப்புரம்: முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகத்தின் செல்வாக்கை காலி செய்ய விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் அவரது சகலையை வேட்பாளராக நிறுத்த பாமக வியூகம் வகுத்து வருகிறது. இது அதிமுக வட்டாரத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனிடையே பாமகவுக்கு இந்த தொகுதியை பாஜ விட்டுக்கொடுக்குமா என்ற கேள்வியும் எழுந்துள்ளது. தமிழகம் மற்றும் புதுச்சேரியில் நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் அதிமுக மற்றும் பாஜ கூட்டணி ஒரு இடத்தில் கூட வெற்றி பெறாமல் படுதோல்வியை சந்தித்தது.

8 தொகுதிகளில் டெபாசிட்டையும் இழந்தது. முன்னதாக பாமகவை கூட்டணியில் இழுக்க அதிமுக பல கட்ட பேச்சு நடத்தியும் கடைசி நேரத்தில் பாஜவில் ஐக்கியமானது. இதனால் தேர்தல் பிரசாரத்தில் பாமக நிறுவனர் ராமதாஸ் மற்றும் அன்புமணியை அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் ஆகியோர் கடுமையாக விமர்சித்தனர். குறிப்பாக சி.வி.சண்முகம் பேசும்போது, ‘அன்றே என்னை கொலை செய்ய பார்த்தார்கள்.

கூட்டணி தொடர்பாக இரவு முழுவதும் நம்முடன் பேசிவிட்டு, விடிந்ததும் ஆட்டுகுட்டியுடன் கூட்டணி வைக்கிறார்கள்’ என்று கடுமையாக விமர்சனம் செய்தார். பதிலுக்கு அன்புமணியும், ‘பாமக தயவால்தான் அதிமுக 5 ஆண்டு காலம் ஆட்சியை பூர்த்தி செய்தது’ என்று தெரிவித்தார். இதற்கு பதிலளித்த அதிமுக தலைவர்கள், ‘அன்புமணியின் எம்பி பதவி நாங்கள் போட்ட பிச்சை’ என்று கடுமையாக விமர்சித்திருந்தனர்.

இந்தநிலையில் விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதி இடைதேர்தலில் சி.வி.சண்முகத்தின் செல்வாக்கை காலி செய்வதற்கு பாமக அதிரடி வியூகம் வகுத்து வருகிறதாம். அங்கு போட்டியிடுவது குறித்து முக்கிய முடிவு எடுக்க இருப்பதாக பாமக தலைவர் அன்புமணி நேற்று முன்தினம் கூறியிருந்தார். அதன்படி இன்று தைலாபுரத்தில் நடக்கும் பாமக கூட்டத்தில் பாமக வேட்பாளராக யாரை நிறுத்துவது என்று முடிவு எடுக்கப்படும் என தெரிகிறது.

பாமக வேட்பாளர்கள் ரேசில் முன்னாள் மாவட்ட செயலாளரான புகழேந்தி, கடந்த முறை தனித்து போட்டியிட்டு 41 ஆயிரம் வாக்குகளை பெற்ற வன்னியர் சங்க நிர்வாகி அன்புமணி, மாநில நிர்வாகி பழனிவேல் உள்ளிட்டவர்களின் பெயர்கள் பட்டியலில் இடம்பெற்றுள்ளதாம். இவர்களில் அதிமுக முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகத்தின் சகலையான புகழேந்திக்குத்தான் வாய்ப்பு வழங்கப்படும் என்று கூறப்படுகிறது. இதன்மூலம் சி.வி.சண்முகத்தின் செல்வாக்கை ஒடுக்க பாமக முடிவு செய்துள்ளதாம்.

இதுகுறித்து பாமகவினர் கூறுகையில், ‘கடந்த 2019ம் ஆண்டு இடைத்தேர்தலில் பாமக நிறுவனர் ராமதாஸ் கொடுத்த ஆதரவால்தான் அதிமுக வெற்றி பெற்றது. இல்ைலயென்றால் தோல்வியைதான் சந்தித்திருப்பார்கள். அதே 2016 தேர்தலில் நாங்கள் தனித்து போட்டியிட்டபோது 41,428 வாக்குகள் வாங்கி இருந்தோம். எங்கள் பலம் என்ன என்பதை அதிமுக புரிந்திருப்பார்கள். இந்த இடைதேர்தலில் அதிமுகவுக்கும் குறிப்பாக சி.வி சண்முகத்துக்கும் நிச்சயம் பாடம் புகட்டி நாங்கள் யார் என்பதை காண்பிப்போம்’ என்றனர்.

இதனிடையே விக்கிரவாண்டி தொகுதி வன்னியர்கள் நிறைந்த பகுதி என்பதால் தங்களுக்கு விட்டுத்தர வேண்டும் என்று பாஜவிடம் பாமக பேச்சுவார்த்தை நடத்தி வருகிறதாம். ஆனால் பாஜ இந்த தொகுதியை விட்டுக்கொடுக்குமா? என்று இன்று தெரிந்துவிடும். திமுக சார்பில் அன்னியூர் சிவா வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், வேட்பு மனு நாளை தொடங்க உள்ளது. இதனால் இன்று அல்லது நாளை மற்ற கட்சிகளின் வேட்பாளர்கள் அறிவிக்கப்படுவார்கள் என்று கூறப்படுகிறது. இதனால் இடைத்தேர்தல் களம் சூடுபிடிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

The post சூடுபிடிக்கும் விக்கிரவாண்டி இடைத்தேர்தல் சி.வி.சண்முகம் செல்வாக்கை காலி செய்ய சகலையை வேட்பாளராக்க பாமக திட்டம் appeared first on Dinakaran.

Tags : Bamaka ,Sakala ,CV Shanmugam ,Vikravandi ,Villupuram ,AIADMK ,BJP ,BMC ,CV ,Shanmugam ,Dinakaran ,
× RELATED குவைத் தீ விபத்தில் ஏற்பட்ட...