விநாயகர் ஊர்வல பாதுகாப்புக்கு வந்த போலீசாரின் கார் தீப்பற்றி எரிந்தது

முத்துப்பேட்டை: திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டையில் நேற்று மாலை சுமார் 3 ஆயிரம் போலீசார் பாதுகாப்புடன் விநாயகர் சிலை ஊர்வலம் நடைபெறுகிறது. இதற்காக பல்வேறு மாவட்டங்களிலிருந்து போலீசார் பாதுகாப்பு பணிக்கு வந்துள்ளனர். இந்நிலையில் பெரம்பலூர் மாவட்டம், குன்னம் காவல் நிலையத்தில் இருந்து சிறப்பு எஸ்ஐ சத்தியநாராயணன், தலைமைக் காவலர் காதர்கான், காவலர் மணிகண்டன் ஆகியோர் நண்பர் ஒருவரின் காரில் முத்துப்பேட்டைக்கு வந்தனர்.

முத்துப்பேட்டை மங்கலூர் அருகே கிழக்கு கடற்கரை சாலையோர மர நிழலில் காரை நிறுத்தி உணவருந்திக் கொண்டிருந்தனர். அப்போது காரின் இன்ஜினில் இருந்து புகை வந்துள்ளது. இதனால் அதிர்ச்சியடைந்த போலீசார் இறங்கி பானட்டை திறந்துள்ளனர். அப்போது கார் திடீரென தீப் பற்றி எரிந்தது. அவர்கள் தீயை அணைக்க முயன்றும் முடியவில்லை. தகவலறிந்து வந்த முத்துப்பேட்டை தீயணைப்பு நிலைய வீரர்கள் நீண்ட நேரம் போராடி தீயை அணைத்தனர். ஆனாலும் கார் முழுவதும் எரிந்து எலும்புக் கூடானது. தீப் பிடித்த கார் மகாராஷ்டிரா மாநில பதிவு எண் கொண்டது என்பது தெரிய வந்தது.

The post விநாயகர் ஊர்வல பாதுகாப்புக்கு வந்த போலீசாரின் கார் தீப்பற்றி எரிந்தது appeared first on Dinakaran.

Related Stories: