தமிழ்மொழி இலக்கிய திறனறி தேர்வுக்கு பிளஸ் 1 மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்: மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் தகவல்

காஞ்சிபுரம்: தமிழ்மொழி இலக்கிய திறனறி தேர்வில் பங்கேற்க, அனைத்து பள்ளிகளில் பயிலும் பிளஸ் 1 மாணவர்கள் விண்ணப்பிக்கலாம் என்று காஞ்சிபுரம் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் வெற்றிச்செல்வி தெரிவித்துள்ளார். இது குறித்து காஞ்சிபுரம் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் வெற்றிச்செல்வி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: பள்ளி மாணவர்களின் அறிவியல், கணிதம் சார்ந்த ஒலிம்பியாய்டு தேர்வுகளுக்கு பெருமளவில் தயாராகி பங்கு பெறுவதை போன்று, தமிழ்மொழி இலக்கிய திறனை மாணவர்கள் மேம்படுத்தி கொள்ளும் வகையில், தமிழ்மொழி இலக்கிய திறனறி தேர்வு நடத்தப்படுகிறது. அதன்படி, 2023-2024ம் கல்வி ஆண்டிற்கான தமிழ்மொழி இலக்கிய திறனறி தேர்வு அக்.15ம் தேதி நடைபெறவுள்ளது.

இந்த தேர்வில் 1,500 மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டு, பள்ளி கல்வித்துறை வழியாக மாதம் ரூ.1,500 வீதம், 2 வருடங்களுக்கு வழங்கப்படும். தேர்வில் 50 விழுக்காடு அரசுப்பள்ளி மாணவர்களும், மீதமுள்ள 50 விழுக்காட்டிற்கு அரசுப்பள்ளி மாணவர்கள் உள்ளிட்ட பிற தனியார் பள்ளி மாணவர்களும் தேர்வு செய்யப்படுவார்கள். இதில், தமிழ்நாடு அரசின் 10ம் வகுப்பு நிலையிலான பாடத்திட்ட அடிப்படையில் கொள்குறி வகையில் தேர்வு நடத்தப்படும்.

அனைத்து மாவட்டங்களிலும் 2023-202ம் கல்வியாண்டில் தமிழகத்தில் உள்ள அங்கீகாரம் பெற்ற அனைத்து வகை பள்ளிகளில் பயிலும் 11ம் வகுப்பு மாணவர்கள், இந்த தமிழ்மொழி இலக்கிய திறனறி தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம். மாணவர்கள் விண்ணப்பங்களை www.dge.tn.gov.in என்ற இணையதளம் மூலம் 7.9.2023 முதல் 20.9.2023 வரை பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்துடன் தேர்வு கட்டண தொகை ரூ.50 சேர்த்து சம்பந்தப்பட்ட பள்ளி தலைமை ஆசிரியரிடம் ஒப்படைக்குமாறு அறிவுறுத்தப்படுகிறது. பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை சமர்ப்பிக்க வரும் 20ம் தேதி கடைசிநாள். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

The post தமிழ்மொழி இலக்கிய திறனறி தேர்வுக்கு பிளஸ் 1 மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்: மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் தகவல் appeared first on Dinakaran.

Related Stories: