ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை சொலோபேன் காகிதத்தில் பட்டாசு பேக்கிங்: ஐகோர்ட்டில் அரசு தகவல்

சென்னை: தமிழ்நாட்டில் கடந்த 2019 ஜனவரி மாதம் முதல் ஒருமுறை பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதித்து தமிழ்நாடு அரசு 2020 ஜூன் மாதம் அரசாணை பிறப்பித்தது. இந்த அரசாணையை எதிர்த்து தமிழ்நாடு மற்றும் புதுவை பிளாஸ்டிக் உற்பத்தியாளர் சங்கத்தின் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், தமிழ்நாடு அரசு விதித்த தடையை உறுதி செய்து உத்தரவிட்டு சங்கத்தின் மனுவை தள்ளுபடி செய்தது. இந்த உத்தரவை மறு ஆய்வு செய்யக் கோரி சங்கத்தின் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனு, நீதிபதிகள் எஸ்.வைத்தியநாதன் மற்றும் பி.டி.ஆஷா ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணையில் உள்ளது.

கடந்த முறை இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது, தீபாவளி நெருங்கிவரும் நிலையில், ஒரு முறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் உறைகளால் பட்டாசுகளை பேக்கிங் செய்யாமல் இருக்க தமிழ்நாடு அரசு ஏதாவது ஆக்கப்பூர்வமான நடவடிக்கை எடுத்துள்ளதா என்று கேட்டதுடன் இதுதொடர்பாக எடுத்த நடவடிக்கை குறித்து விளக்கம் பெற்று தெரிவிக்குமாறு அரசுக்கு உத்தரவிட்டிருந்தனர். வழக்கு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, தமிழ்நாடு அரசு தரப்பில் சிறப்பு அரசு வழக்கறிஞர் சீனிவாசன் அறிக்கை தாக்கல் செய்தார். அதில், பட்டாசுகளை பொதிய பிளாஸ்டிக்கை பயன்படுத்தக் கூடாது என்று அறிவுறுத்தி சிவகாசியில் உள்ள பட்டாசு ஆலைகளுக்கு விருதுநகர் மாவட்ட மாசுகட்டுப்பாடு வாரியம் உத்தரவுகளை பிறப்பித்துள்ளது.

அதற்கு பட்டாசு ஆலைகள் சங்கம் மாசுகட்டுப்பாடு வாரியத்துக்கு அனுப்பப்பட்ட கடிதத்தில் பட்டாசுகளை பொதிய சொலோபேன் காகிதம் பயன்படுத்தப்படுவதாகவும், இது மக்கும் தன்மை கொண்டது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது என்று விளக்கம் அளிக்கப்பட்டிருந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், பிளாஸ்டிக் தடை உத்தரவு பிறப்பிக்கும் முன் நிபுணர் குழு எதாவது அமைக்கப்பட்டதா என்று கேட்டதுடன் அந்த குழுவின் விவரங்களை தாக்கல் செய்ய வேண்டும் என்று அரசுக்கு உத்தரவிட்டு விசாரணையை தள்ளி வைத்தனர்.

The post ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை சொலோபேன் காகிதத்தில் பட்டாசு பேக்கிங்: ஐகோர்ட்டில் அரசு தகவல் appeared first on Dinakaran.

Related Stories: