×

பிளாஸ்டிக் குப்பையிலிருந்து பயணிகள் நிழற்கூடம்: கோவை கிட்டாம்பாளையம் ஊராட்சி அசத்தல்

சூலூர்: மண்ணை மலடாக்கி வரும் பிளாஸ்டிக் குப்பைகளை பயன்படுத்தி பயணிகள் நிழற்கூடம் அமைத்து கோவை கிட்டாம்பாளையம் ஊராட்சி நிர்வாகம் புதிய முயற்சியை முன்னெடுத்துள்ளது. கோவை மாவட்டம் சூலூர் ஒன்றியம் கிட்டாம்பாளையம் ஊராட்சியில் பிளாஸ்டிக் குப்பைகளை மறுசுழற்சி செய்து, அழகான நிழற்குடை அமைக்கப்பட்டுள்ளது. இது, குப்பைகளை முறையாக மேலாண்மை செய்வதற்கான ஒரு முன்னோடி முயற்சியாக பாராட்டப்படுகிறது. கிட்டாம்பாளையம் ஊராட்சியில் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர். இங்கு தினமும் சராசரியாக 600 கிலோ குப்பைகள் சேகரிக்கப்படுகின்றன. கிராம மக்களே மக்கும் குப்பைகள் மற்றும் மக்காத குப்பைகள் என தரம் பிரித்து கொடுக்கின்றனர். இதில் 200 கிலோ குப்பை பிளாஸ்டிக்காக உள்ளது.

இந்த பிளாஸ்டிக் குப்பைகளை வீணாக்காமல், மறுசுழற்சி செய்து பயன்படுத்தும் வகையில், ஊராட்சி நிர்வாகம் ஒரு புதிய முயற்சியை மேற்கொண்டுள்ளது. ஊராட்சி நிர்வாகம் சேகரித்து வைத்த 2 டன் பிளாஸ்டிக் குப்பைகளை ஒரு தனியார் நிறுவனத்திற்கு அனுப்பி வைத்து அங்கு குப்பைகளை மறுசுழற்சி செய்து, கட்டிட மேல்ஷீட்கள், பக்கவாட்டு சுவர்களுக்கான கனமான ஷீட்கள், தரையில் பதிக்கும் பேவர் பிளாக் போன்ற கற்கள், இருக்கைகளுக்கான சீட்கள் என பல வகையான பொருட்கள் தயாரிக்கப்படுகின்றன.

இந்த பொருட்களை கொண்டு, கிட்டாம்பாளையம் நால்ரோட்டில் ஊராட்சி நிர்வாகம் சார்பில் ஒரு அழகான நிழற்கூடம் அமைக்கப்பட்டிருப்பது அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளதோடு, மண்னை மலடாக்கும் பிளாஸ்டிக் கழிவுகளை பயனுள்ள வகையில் மாற்றி இருப்பது வரவேற்பை பெற்றுள்ளது. இது குறித்து கிட்டாம்பாளையம் ஊராட்சி தலைவர் சந்திரசேகர் கூறியதாவது: பிளாஸ்டிக் குப்பைகள் சுற்றுச்சூழலுக்கு மிகப்பெரிய அச்சுறுத்தலை ஏற்படுத்தி வரும் நிலையில் இந்த முயற்சி மூலம், எங்களது கிராமத்தில் பிளாஸ்டிக் குப்பைகளின் அளவு குறைக்கப்பட்டு, சுற்றுச்சூழல் பாதுகாப்பை நிர்வகிக்க முடிகிறது.  இந்த முயற்சி, மக்களிடையே மறுசுழற்சியின் முக்கியத்துவத்தை பரப்பும் என்று நம்புகிறோம். மறுசுழற்சி செய்யப்பட்ட பொருட்களை கொண்டு பொது இடங்களில் வசதிகளை ஏற்படுத்துவது, பொது சொத்துக்களை மேம்படுத்துவதற்கான ஒரு முயற்சியாக இந்தத் திட்டத்தை முன்னெடுத்தோம்.

இந்த முயற்சியில் மக்களின் பங்களிப்பு மிகவும் முக்கியமானது. மக்கள், மக்கும் குப்பை மற்றும் மக்காத குப்பையை தரம் பிரித்து கொடுப்பதில் எங்களது கிராமத்தைச் சேர்ந்த பொதுமக்கள் நல்ல பங்களிப்பை கொடுத்து வருகிறார்கள். தனியார் நிறுவனங்கள், மறுசுழற்சி தொழில்நுட்பங்களை பயன்படுத்தி, பிளாஸ்டிக் குப்பைகளை மதிப்புமிக்க பொருட்களாக மாற்ற வேண்டும். கிட்டாம்பாளையம் ஊராட்சியின் இந்த முயற்சி, பிற ஊராட்சிகளுக்கும் ஒரு முன்மாதிரியாக அமையும் என்று நம்புகிறோம். இந்த முயற்சியின் வெற்றி, குப்பை மேலாண்மையில் ஒரு புதிய அத்தியாயத்தை ஏற்படுத்தி உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

The post பிளாஸ்டிக் குப்பையிலிருந்து பயணிகள் நிழற்கூடம்: கோவை கிட்டாம்பாளையம் ஊராட்சி அசத்தல் appeared first on Dinakaran.

Tags : Coimbatore Kittampalayam panchayat ,Sulur ,Coimbatore Kittambalayam panchayat ,Coimbatore District Sulur Union Kittambalayam Panchayat ,
× RELATED கோவை சூலூரில் குறைந்த வட்டிக்கு கடன்...