7 கட்டங்களாக நடத்த திட்டம் மக்களவை தேர்தல் பிப்ரவரியில் அறிவிப்பு: அனைத்து மாநில அதிகாரிகளுடன் தேர்தல் ஆணையம் முக்கிய ஆலோசனை

புதுடெல்லி: மக்களவை தேர்தல் ஏற்பாடுகள் குறித்து அனைத்து மாநில தேர்தல் அதிகாரிகளுடன் டெல்லியில் நேற்று தேர்தல் ஆணையர்கள் ஆலோசனை நடத்தினர். தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் தலைமையில் நடந்த இந்த கூட்டம் 2வது நாளாக இன்றும் நடக்கிறது. மக்களவை தேர்தல் அட்டவணை அடுத்த மாத மத்தியில் வெளியாக வாய்ப்புள்ளதாகவும், 7 கட்டங்களாக தேர்தல் நடத்தப்படும் என்றும் கூறப்படுகிறது. மக்களவையின் பதவிக்காலம் முடிவடைய உள்ளதால், வரும் ஏப்ரல், மே மாதங்களில் பொதுத் தேர்தல் நடத்தப்பட உள்ளது. இதற்கான ஏற்பாடுகளை தேர்தல் ஆணையம் செய்து வருகிறது. அனைத்துக் கட்சிகளும் கூட்டணி பேச்சுவார்த்தை, தொகுதி பங்கீடு, வேட்பாளர் தேர்வு என்று மும்முரமாக உள்ளன.

இந்நிலையில், மக்களவை தேர்தலை எப்படி நடத்துவது என்பது தொடர்பாக தேர்தல் ஆணையத்தின் 2 நாள் ஆலோசனை கூட்டம் டெல்லியில் உள்ள துவாரகாவில் நேற்று துவங்கியது. இதில் 23 மாநிலங்களின் தலைமை தேர்தல் அதிகாரிகள் பங்கேற்றனர். தமிழ்நாட்டின் சார்பாக மாநில தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு கலந்து கொண்டார். தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ்குமார் தலைமையில் நடந்த இந்த கூட்டத்தில், தேர்தல்ஆணையர்கள் அனூப் சந்திர பாண்டே மற்றும் அருண் கோயல் ஆகியோரும் கலந்து கொண்டனர். அப்போது, தேர்தல் ஏற்பாடுகள் குறித்து மாநில தலைமை தேர்தல் அதிகாரிகள் விவரங்களை தெரிவித்தனர்.

இதில்,‘‘கடந்தாண்டு நடத்தி முடிக்கப்பட்ட ஐந்து மாநிலங்களின் சட்டப்பேரவை தேர்தல்களின் போது நடந்த அனுபவங்கள், 2024ம் ஆண்டுக்கான நாடளுமன்ற தேர்தலுக்குக்கான திட்டமிடல், செலவு கணக்குகள், வாக்காளர் பட்டியல், தகவல் தொழில்நுட்ப விண்ணப்பங்கள், தரவு மேலாண்மை, வாக்கு பதிவு இயந்திரம், விவிபேட், ஊடகங்களுக்கான நிபந்தனைகள், அவர்களுக்கான தொலைதொடர்பு ஆகியவை குறித்து விரிவாக கலந்து ஆலோசிக்கப்பட்டது.
இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் பேசிய போது, ‘‘சுதந்திரமான, நியாயமான பங்கேற்பு, அமைதியான மற்றும் தூண்டுதல் இல்லாத வகையில் வெற்றிகரமாக ஐந்து மாநில சட்டப்பேரவை தேர்தலை அம்மாநில தலைமை நிர்வாக அதிகாரிகள் சிறப்பாக நடத்தி உள்ளார்கள். வரவிருக்கும் மக்களவை பொதுத் தேர்தலில் வாக்காளர்களுக்கு சிறந்த அனுபவத்தை உறுதி செய்யும் விதமாக தேர்தல் ஆணையம் பல்வேறு சிறப்பு நடவடிக்கைகளை எடுத்துள்ளது ,’’ என கூறினார்.

இதைத்தொடர்ந்து பேசிய ஆணையர் அனுப் சந்திர பாண்டே,‘‘குறிப்பாக 2024 நாடாளுமன்ற தேர்தலுக்கான தயாரிப்புகளின் ஒரு பகுதியாக கடந்த ஆறு மாதங்களில் பல்வேறு மாநாடுகள், பட்டறைகள் பயிற்சிகள், கருத்தரங்குகள் ஆகியவை தேர்தல் ஆணையத்தால் நடத்தி முடிக்கப்பட்டுள்ளது. இது மிகவும் பயன் உள்ளதாக இருக்கும்,’’ என தெரிவித்தார். பின்னர் பேசிய ஆணையர் அருண் கோயல்,‘‘ இந்த கூட்டம் பொதுத்தேர்தலை நடத்துவதற்கான மகத்தான பணிக்கு முன்னதாக குழுவை உருவாக்குவதற்கான ஒரு முக்கிய தளமாக இருக்கிறது. குறிப்பாக கூட்டத்தில் பங்கேற்ற அனைவரும் தங்கள் கருத்துகளையும் சவால்களையும் சுதந்திரமாக பகிர்ந்து கொண்டுள்ளனர்.

இது தேர்தலை சந்திக்கும் போது மிகவும் பயன் உள்ளதாக இருக்கும். நாடு முழுவதும் உள்ள 800க்கும் மேற்பட்ட தேர்தல் மேலாண்மை தொடர்பான பல்வேறு தலைப்புகளில் பயிற்சியும், அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் இருந்து 3100 அதிகாரிகளுக்கு ஆன்லைன் பயிற்சியும் கொடுக்கப்பட்டுள்ளது என தெரிவித்தார். இந்த மாநாட்டின் போது தேர்தல் ஆணையத்தின் மூத்த அதிகாரிகளும் உடனிருந்தனர். இதைத்தொடர்ந்து மாநில வாரியாக பேசிய தேர்தல் தலைமை நிர்வாக அதிகாரிகள் பல்வேறு தலைப்புகளில் தேர்தல் நடத்துவதற்கான தங்களின் நிலைப்பாடு, மாநிலங்களில் இருக்கும் அரசியல் கட்சிகளின் நிலவரம், வாக்குப்பதிவு இயந்திரங்கள் ஆகியவை குறித்த அனைத்து விவரங்களையும் தேர்தல் ஆணையர்கள் முன்னிலையில் விரிவாக தெரிவித்தனர்.

இதைத்தொடர்ந்து இரண்டாவது நாளாக மாநாட்டு கூட்டம் இன்றும் தொடர்கிறது. இதில், மீதமுள்ள மாநிலங்கள் மற்றும் புதுவை உட்பட 13 யூனியன் பிரதேச தேர்தல் அதிகாரிகள் பங்கேற்கின்றனர். இந்த கூட்டத்தில், ஒவ்வொரு மாநிலத்தில் எத்தனை கட்டங்களாக எந்தெந்த தேதிகளில் தேர்தல் நடத்துவது என்பது குறித்து முடிவாகி விடும் என்றும், அடுத்த மாதம் தேர்தல் அட்டவணையை தேர்தல் ஆணையம் முறைப்படி வெளியிட வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது. பாஜ எம்.பி.க்கள் ஒவ்வொருவரும் தங்கள் தொகுதி மேம்பாட்டு நிதியை அடுத்த மாதம் 15ம் தேதிக்குள் முழுவதுமாக செலவிட உத்தரவிடப்பட்டுள்ளது. இதனால், அடுத்த மாத மத்தியில் தேர்தல் குறித்த அறிவிப்பு வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

* மேம்படுத்தப்பட்ட இணையதளம்
நேற்று நடந்த மாநாட்டு கூட்டத்தின் போது இந்திய தலைமை தேர்தல் ஆணையத்திற்கு என்ற மேம்படுத்தப்பட்ட ஒரு புதிய தொழில்நுட்பம் கொண்ட இணையதள பக்கத்தை இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் தொடங்கி வைத்தார். இந்த மேம்படுத்தப்பட்ட வலைதளம் சக்திவாய்ந்த மெட்டா டேட்டா அடிப்படையில் உருவாக்கப்பட்டுள்ளது. ஒரு வேட்பாளர் மனுவை தாக்கல் செய்வதில் தொடங்கி, விண்ணப்பங்களை பதிவிறக்கம் செய்வது, தேர்தல் செலவின கணக்குகளை தாக்கல் செய்வது உட்பட அனைத்து செயல்பாடுகளையும் ஒரே இணையதளத்தில் மேற்கொள்ளலாம். இதைத்தவிர வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பது உள்ளிட்டவற்றையும் இதன் மூலம் சுலபமாக மேற்கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post 7 கட்டங்களாக நடத்த திட்டம் மக்களவை தேர்தல் பிப்ரவரியில் அறிவிப்பு: அனைத்து மாநில அதிகாரிகளுடன் தேர்தல் ஆணையம் முக்கிய ஆலோசனை appeared first on Dinakaran.

Related Stories: