×

பெரியார், அண்ணா குறித்து விமர்சித்து ‘முருக பக்தர்கள் மாநாடு’ என்ற போர்வையில் வீடியோ வெளியீடு: இந்து முன்னணிக்கு முன்னாள் முதலமைச்சர் ஓ.பி.எஸ். கண்டனம்

சென்னை: பெரியார், அண்ணா குறித்து விமர்சித்து ‘முருக பக்தர்கள் மாநாடு’ என்ற போர்வையில் வீடியோ வெளியீடு செய்த இந்து முன்னணிக்கு முன்னாள் முதலமைச்சர் ஓ.பி.எஸ். கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், பகுத்தறிவுச் சிந்தனைகளை பட்டிதொட்டியெங்கும் எடுத்துச் சென்று சமுதாயத்தில் மிகப் பெரிய சீர்திருத்தத்தை ஏற்படுத்தியவர் தந்தை பெரியார். தந்தை பெரியாரின் கொள்கைகளை, திராவிட சித்தாந்தத்தை முன்னிறுத்தி, தேர்தலில் களம் கண்டு தமிழக அரசியலில் மிகப் பெரிய ஆட்சி மாற்றத்தை உருவாக்கிய பெருமைக்குரியவர் பேரறிஞர் அண்ணா.

பேரறிஞர் அண்ணாவின் கொள்கைக்கு மாறான ஆட்சி தமிழ்நாட்டில் நடைபெற்றபோது அதனை எதிர்த்து, பேரறிஞர் அண்ணா பெயரில் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் எனும் மாபெரும் மக்கள் இயக்கத்தைத் தொடங்கி, கட்சியின் கொடியில் அவரது உருவத்தைப் பொரித்து, தொடர்ந்து மூன்று முறை தமிழ்நாட்டில் அண்ணா திராவிட முன்னேற்றக் கழக ஆட்சியினை அமைத்தவர் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆரை தொடர்ந்து, போறிஞர் அண்ணா காட்டிய வழியில் நான்கு முறை அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக ஆட்சியை அமைத்தவர் புரட்சித் தலைவி அம்மா .

சுருக்கமாகச் சொல்ல வேண்டுமென்றால், தமிழக மக்களால், மக்கள் சக்தியை தன்னகத்தே கொண்ட புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். மற்றும் புரட்சித் தலைவி அம்மா ஆகியோரால் மதிக்கப்பட்ட, போற்றப்பட்ட தலைவர்கள் தந்தை பெரியார் மற்றும் பேரறிஞர் அண்ணா ஆகியோர். நாங்களும் அந்த வழியைப் பின்பற்றி கொண்டு வருபவர்கள் தான். தமிழக அரசியல் வரலாற்றில் மிகப் பெரிய புரட்சியை உருவாக்கிய தந்தை பெரியார் மற்றும் பேரறிஞர் அண்ணா ஆகிய இருபெரும் தலைவர்களை விமர்சித்து ‘முருக பக்தர்கள் மாநாடு’ என்ற போர்வையில் இந்து முன்னணி வீடியோ வெளியிட்டது கடும் கண்டனத்திற்குரியது. இவ்வாறு கண்டனம் தெரிவித்தார்.

The post பெரியார், அண்ணா குறித்து விமர்சித்து ‘முருக பக்தர்கள் மாநாடு’ என்ற போர்வையில் வீடியோ வெளியீடு: இந்து முன்னணிக்கு முன்னாள் முதலமைச்சர் ஓ.பி.எஸ். கண்டனம் appeared first on Dinakaran.

Tags : Muruga devotees' ,Periyar ,Former Chief Minister ,OPS ,Hindu Munnani ,Chennai ,Former ,Chief Minister ,Anna ,Dinakaran ,
× RELATED 10 நாட்களுக்கு ஒருமுறை கொளத்தூருக்கு...