×

பெவிலியனில் வைக்கப்பட்டிருந்த வெள்ளை போர்டும், ஆப்கானிஸ்தான் அணியின் வெற்றியின் ரகசியமும்: விளக்கமளித்த பயிற்சியாளர்

புனே: உலகக்கோப்பை தொடரில் நேற்று நடைபெற்ற போட்டியில் ஆப்கானிஸ்தான் அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் இலங்கை அணியை வீழ்த்தியது. 242 ரன்களை இலக்காக கொண்டு விளையாடிய ஆப்கானிஸ்தான் அணி எவ்வித சிரமமுமின்றி சேஸ் செய்து வியப்பிற்குள்ளாக்கியது.

ஆப்கானிஸ்தான் அணி 6 போட்டிகளில் விளையாடி 3ல் வெற்றி 3ல் தோல்வி என புள்ளிகள் பட்டியலில் தற்போது 5வது இடத்தில் உள்ளது. நடப்பு உலகக் கோப்பை தொடரில் இங்கிலாந்து, பாகிஸ்தான், இலங்கை என முன்னாள் உலக சாம்பியன்களை வீழ்த்தி ஆப்கானிஸ்தான் அணி அசத்தி வருகிறது.

இது ஒருபுறம் இருக்க, நேற்று நடைபெற்ற போட்டியில் கவனிக்க வைத்த மற்றொரு விஷயம் நடைபெற்றது. ஆப்கானிஸ்தான் 242 ரன்கள் இலக்கை துரத்தி கொண்டிருக்கும்போது அவர்களின் பெவிலியனில் சில எண்கள் எழுதிவைக்கப்பட்டிருந்த ஒரு வெள்ளை போர்டு தென்பட்டது. இதன் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகிவருகின்றன.

இலங்கை அணி நிர்ணயித்த வெற்றி இலக்கை அடைய 10 ஓவர்களில் இவ்வளவு ரன்கள், 20 ஓவர்களில் இவ்வளவு ரன்கள், 40 ஓவர்களில் இவ்வளவு ரன்கள் என அந்த போர்டில் எழுதிவைக்கப்பட்டிருந்தது. இதுகுறித்து பயிற்சியாளர் ஜொனாதன் டிராட் விளக்கமளித்துள்ளார்.

அதில், “முதல் பேட்டிங்கிற்கும் சேஸிங்கிற்கும் வித்தியாசம் உள்ளது. சூழலை பொறுத்து முதலில் பேட்டிங்கில் ரன்கள் எடுக்க வேண்டி இருக்கும். ஆனால், சேஸிங்கில் அடைய வேண்டிய இலக்கில் இருந்து எந்த மாற்றமும் இருக்காது. பாகிஸ்தான் போன்ற பெரிய அணிகளுக்கு எதிராக 280 ரன்கள் அடிக்க வேண்டும் என்றால், அதனை பூஜ்ஜியத்தில் இருந்து பார்த்தால் எட்ட முடியாத இலக்காக தோன்றும்.

ஆனால் அதனையே 10 ஓவர்களில் இவ்வளவு ரன்கள் எடுத்தால் போதும், 20, 30, 40 ஓவர்களில் இவ்வளவு ரன்கள் எடுத்தால் போதும் என்று சிறிய இலக்காக மாற்றினால் பெரிய டார்கெட் என்ற எண்ணம் குறையும். சிறிய இலக்குகளை அடையும்போது பேட்ஸ்மேன்களுக்கு சரியாக முன்னேறுகிறோம் என்கிற நம்பிக்கை உண்டாகும்.

அதற்காகவே அந்த போர்டில் எழுதப்பட்டிருந்த கணக்குகள். எதிர்பார்த்தபடி அது நன்றாக ஒர்க்அவுட் ஆனது” என்றார். மேலும் “எங்கள் அணியில் இன்னும் யாரும் செஞ்சுரி அடிக்கவில்லை. அதுதான் எங்கள் பேட்ஸ்மேன்களுக்கு அடுத்த சவால்.

யாரேனும் ஒருவர் பொறுப்பேற்றுகொண்டு நீண்ட நேரம் பேட்டிங் செய்து சதம் அடிக்க வேண்டும். எங்கள் வீரர்களால் இதை செய்ய முடியும் என்பதில் எனக்கு எந்த சந்தேகமும் இல்லை. இந்த சவால் அடுத்த ஆட்டத்தில் இருந்து தொடங்கும்” என பயிற்சியாளர் ஜொனாதன் டிராட் கூறியுள்ளார்.

The post பெவிலியனில் வைக்கப்பட்டிருந்த வெள்ளை போர்டும், ஆப்கானிஸ்தான் அணியின் வெற்றியின் ரகசியமும்: விளக்கமளித்த பயிற்சியாளர் appeared first on Dinakaran.

Tags : Afghanistan ,Pune ,Sri Lanka ,World Cup ,Dinakaran ,
× RELATED மராட்டிய மாநிலம் புனேவில் ஹெலிகாப்டர் விழுந்து விபத்து!!