×

முதலமைச்சர் கோப்பை விளையாட்டு துணை முதல்வர் தொடங்கி வைத்தார்

சென்னை: மாநில அளவில் முதலமைச்சர் கோப்பைக்கான விளையாட்டு போட்டிகளை துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் நேற்று தொடங்கி வைத்தார். சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கில் நேற்று மாலை நடந்த விழாவில் பாரிஸ் பாரா ஒலிம்பிக்கில் வெள்ளிப் பதக்கம் வென்ற துளசிமதி முருகேன், ஒலம்பியன் பிரவீன் சித்ரவேல் ஆகியோர் விளையாட்டுச் சுடரை ஏந்தி வந்து துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினிடம் ஒப்படைக்க, அவர் அரங்கில் சுடரை ஏற்றி வைத்தார். பின்னர் முதலமைச்சர் கோப்பையை அறிமுகம் செய்தார்.

வண்ணமயமான கலை நிகழ்ச்சிகளும் நடத்தப்பட்டன. அமைச்சர்கள் ரகுபதி, பெரியகருப்பன், செந்தில் பாலாஜி, மா.சுப்ரமணியன், மூர்த்தி, சேகர் பாபு, சி.வி.கணேசன், மத்திய சென்னை நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதி மாறன், சென்னை மேயர் பிரியா, விளையாட்டுத் துறை செயலர் அதுல்ய மிஸ்ரா, எஸ்டிஏடி உறுப்பினர் செயலாளர் மேகநாத ரெட்டி ஆகியோர் பங்கேற்றனர். நிகழ்ச்சியில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசியதாவது:

முதலமைச்சர் கோப்பைக்கான விளையாட்டுப் போட்டிகளை தொடங்கி வைப்பதில் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன். துணை முதலமைச்சராக பொறுப்பேற்றதும் கையெழுத்திட்ட முதல் கோப்பு இந்த போட்டி தொடர்பான கோப்பு தான். இந்த ஆண்டு பள்ளி மாணவ மாணவிகள், அரசு ஊழியர்கள், மாற்றுத்திறனாளிகள் என பல தரப்பாக நடத்தப்படக்கூடிய போட்டிகளில் 11,50,000 பேருக்கு மேல் பங்கேற்கிறார்கள். இதற்காக ரூ.82 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

லைஞர் ஸ்போர்ட்ஸ் கிட் திட்டம் தொடர்பாக 29 மாவட்டங்களுக்கு நானே நேரில் சென்று வழங்கி உள்ளேன். தமிழ்நாடு சார்பில் பாரா ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்ற 6 பேருக்கும் தலா ரூ.7 லட்சம் ஊக்கத் தொகையாக வழங்கப்பட்டது. இதில் 4 பேர் பதக்கங்களுடன் திரும்பி இந்தியாவிற்கு பெருமை சேர்த்தார்கள். இரவு நேர ஃபார்முலா 4 கார் பந்தயம் மிகவும் வெற்றிகரமாக நடத்தப்பட்டு மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. முதலமைச்சர் கோப்பை விளையாட்டு போட்டியில் பங்கேற்போர், இனி வரக்கூடிய நாட்களில் சர்வதேச அளவில் பங்கேற்று வெற்றிகளைக் குவிக்க வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.

The post முதலமைச்சர் கோப்பை விளையாட்டு துணை முதல்வர் தொடங்கி வைத்தார் appeared first on Dinakaran.

Tags : Chief Minister's Cup ,Deputy Chief Minister of Sports ,CHENNAI ,Deputy Chief Minister ,Udayanidhi Stalin ,Paris Para Olympics ,Tulsimati ,Dinakaran ,
× RELATED சிக்னல் கோளாறு காரணமாக எழும்பூர் வரும் ரயில்கள் தாமதம்..!!