×

உலகின் மிகவும் சக்திவாய்ந்த பாஸ்போர்ட் தரவரிசைப் பட்டியலில் சிங்கப்பூர் முதலிடம்: இந்தியா, இந்த தரவரிசையில் 82-வது இடம் பிடித்துள்ளது

புதுடெல்லி: உலகின் மிகவும் சக்திவாய்ந்த பாஸ்போர்ட் தரவரிசைப் பட்டியலில் சிங்கப்பூர் முதலிடம் பிடித்துள்ளது. 58 நாடுகளுக்கு விசா இல்லாமல் பயணம் செய்யக்கூடிய தகுதியை பெற்றுள்ள இந்தியா, இந்த தரவரிசையில் 82-வது இடம் பிடித்துள்ளது. சர்வதேச விமான போக்குவரத்து சங்கத்தின் (IATA) தரவுகளின் அடிப்படையில் உலகின் சக்திவாய்ந்த 199 நாடுகளின் பாஸ்போர்ட்டுகளின் தரவரிசையை ஹென்லி பாஸ்போர்ட் இன்டெக்ஸ் தற்போது வெளியிட்டுள்ளது. அந்த வகையில் உலகின் மிகவும் சக்திவாய்ந்த பாஸ்போர்ட் தரவரிசையில் சிங்கப்பூர் முதலிடம் பிடித்துள்ளது.

அந்நாட்டின் பாஸ்போர்டை பயன்படுத்தி 195 நாடுகளுக்கு விசா இல்லாமல் பயணிக்க முடியும் என கூறப்படுகிறது. மேலும், பிரான்ஸ், இத்தாலி, ஜெர்மனி, ஜப்பான் மற்றும் ஸ்பெயின் ஆகிய நாடுகள் இந்த தரவரிசையில் இரண்டாவது இடத்தைப் பிடித்துள்ளன. இந்த நாடுகளின் பாஸ்போர்டை பயன்படுத்தி 192 நாடுகளுக்கு விசா இல்லாமல் பயணிக்க முடியும். ஆஸ்திரியா, பின்லாந்து, அயர்லாந்து, லக்சம்பர்க், நெதர்லாந்து, தென் கொரியா மற்றும் ஸ்வீடன் ஆகிய நாடுகளின் பாஸ்போர்ட்கள் இந்த தரவரிசையில் 3-ஆம் இடத்தில் உள்ளன. இந்த நாடுகளின் பாஸ்போர்டை பயன்படுத்தி 191 நாடுகளுக்கு விசா இல்லாமல் பயணிக்க முடியும். 190 நாடுகளுக்கு விசா இல்லாமல் செல்லக்கூடிய பிரிட்டன், நியூசிலாந்து, நார்வே. பெல்ஜியம், டென்மார்க் மற்றும் சுவிட்சர்லாந்து ஆகியவை 4-வது இடத்தில் உள்ளன.

189 நாடுகளுக்கு விசா இல்லாமல் செல்லக்கூடிய ஆஸ்திரேலியா மற்றும் போர்ச்சுகல் நாடுகள் 5-ஆம் இடத்தில் உள்ளன. 188 நாடுகளுக்கு விசா இல்லாமல் செல்லக்கூடிய கிரீஸ், போலாந்து ஆகியவை 6-ஆம் இடத்தில் உள்ளன. 187 நாடுகளுக்கு விசா இல்லாமல் செல்லக்கூடிய கனடா, செக்கியா, ஹங்கேரி மற்றும் மால்டா போன்றவை 7-ஆம் இடத்தில் உள்ளன. 186 நாடுகளுக்கு விசா இல்லாமல் செல்லக்கூடிய அமெரிக்காவின் பாஸ்போர்ட் 8-ஆம் இடத்தில் உள்ளது. 185 நாடுகளுக்கு செல்லக்கூடிய எஸ்டோனியா, லிதுவேனியா மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் ஆகிய நாடுகளின் பாஸ்போர்ட் 9-ஆம் இடத்தில் உள்ளது. இந்நிலையில், 58 நாடுகளுக்கு விசா இல்லாமல் பயணம் செய்யக்கூடிய தகுதியை பெற்றுள்ள இந்தியா, இந்த தரவரிசையில் 82-வது இடம் பிடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

The post உலகின் மிகவும் சக்திவாய்ந்த பாஸ்போர்ட் தரவரிசைப் பட்டியலில் சிங்கப்பூர் முதலிடம்: இந்தியா, இந்த தரவரிசையில் 82-வது இடம் பிடித்துள்ளது appeared first on Dinakaran.

Tags : Singapore ,India ,New Delhi ,International Air Transport Association ,IATA ,Dinakaran ,
× RELATED சிங்கப்பூர் சிநேகிதி