செப்.18 முதல் 5 நாள் நடக்கும் நாடாளுமன்ற சிறப்பு கூட்ட தொடரில் 4 மசோதா தாக்கல்: ஒன்றிய அரசு அறிவிப்பு

புதுடெல்லி: நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தொடர் அஜண்டா குறித்து ஒன்றிய அரசு தகவல் வெளியிட்டுள்ளது. இந்த அமர்வில் 4 மசோதாக்கள் தாக்கல் செய்யப்பட உள்ளன. நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தொடர் வருகிற 18ம் தேதி தொடங்கி தொடர்ந்து 5 நாள் நடைபெறும் என்று ஒன்றிய அரசு அறிவிப்பு வெளியிட்டது. ஆனால் எதற்காக இந்த கூட்டத்தொடர் என்பது பற்றி விளக்கம் அளிக்கவில்லை. நேற்று இதற்கான அறிவிப்பை ஒன்றிய அரசு வெளியிட்டுள்ளது. செப்டம்பர் 18 ஆம் தேதி தொடங்கும் நாடாளுமன்றத்தின் 5 நாள் கூட்டத் தொடரின் முதல் நாளில் 75 ஆண்டுகால நாடாளுமன்றத்தின் பயணம் குறித்த சிறப்பு விவாதம் நடைபெற உள்ளது. மேலும் இந்தக் கூட்டத்தொடரின் போது, ​​தலைமைத் தேர்தல் ஆணையர் மற்றும் பிற தேர்தல் ஆணையர்களின் நியமனம் தொடர்பான மசோதாவையும் அரசு பரிசீலனைக்கு எடுத்துச் சென்று நிறைவேற்ற பட்டியலிட்டுள்ளது. இந்த மசோதா கடந்த மழைக்கால கூட்டத்தொடரில் மாநிலங்களவையில் தாக்கல் செய்யப்பட்டது.

இதே போல் மக்களவை பணிகளில் வழக்கறிஞர்கள் (திருத்தம்) மசோதா 2023 மற்றும் பத்திரிகை மற்றும் காலப் பதிவு மசோதா 2023 ஆகியவை தாக்கல் செய்யப்பட உள்ளன. இந்த மசோதாக்கள் 2023 ஆகஸ்ட் 3 அன்று மாநிலங்களவையில் நிறைவேற்றப்பட்டுவிட்டன. இவை தவிர தபால் அலுவலக மசோதா 2023 தாக்கல் செய்யப்பட உள்ளது. இந்த மசோதா 2023 ஆகஸ்ட் 10 அன்று மாநிலங்களவையில் அறிமுகப்படுத்தப்பட்டது. மேலும் இந்த அமர்வில் நாடாளுமன்ற நடவடிக்கைகள் பழைய கட்டிடத்தில் இருந்து புதிய நாடாளுமன்ற கட்டிடத்திற்கு மாற்றப்படும் என தெரிகிறது. இதற்கிடையே நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தொடருக்காக வரும் 17ம் தேதி அனைத்து கட்சி கூட்டம் நடத்தப்படுவதாக ஒன்றிய அரசு அறிவித்துள்ளது.

The post செப்.18 முதல் 5 நாள் நடக்கும் நாடாளுமன்ற சிறப்பு கூட்ட தொடரில் 4 மசோதா தாக்கல்: ஒன்றிய அரசு அறிவிப்பு appeared first on Dinakaran.

Related Stories: