×

மாவட்டத்தில் சீசன் முடியும் தருவாயில் கொள்முதல் பாதிக்கப்பட்ட மா விவசாயிகளுக்கு நிவாரணம்

தர்மபுரி : தர்மபுரி மாவட்டத்தில் சீசன் முடியும் தருவாயில் அரசு கொள்முதலுக்கு நடவடிக்கை எடுத்துள்ளதால், பாதிக்கப்பட்ட மா விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்க வேண்டுமென குறைதீர் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.தர்மபுரி மாவட்ட விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நேற்று கலெக்டர் சதீஸ் தலைமையில் நடந்தது. கூட்டத்தில் விவசாயிகள் சங்க பிரதிநிதிகள் சின்னசாமி, சுப்பிரமணி, பிரதாபன், முரளி மற்றும் விவசாயிகள், அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

இக்கூட்டத்தில் விவசாயிகள் பேசியதாவது: மாம்பழச்சாறு போதிய அளவில் ஏற்றுமதி இல்லை எனக்கூறி மாம்பழக்கூழ் தயாரிக்கும் நிறுவனங்கள், மாம்பழங்களை வாங்குவதை குறைத்தன. இதனால் மாம்பழம் விலை சரிந்தது.

ஒரு கிலோ ரூ.5க்கு கொள்முதல் செய்யப்பட்டதால், பல விவசாயிகள் மாம்பழம் அறுவடை செய்யாமல் மரத்தில் விட்டனர். அறுவடை சீசன் முடிந்த நிலையில், அரசு கொள்முதல் செய்ய முன்வந்துள்ளது. இந்த சீசனில் மா விவசாயிகளுக்கு நஷ்டம் ஏற்பட்டுள்ளது. எனவே, நிவாரணம் வழங்க வேண்டும்.

தர்மபுரி, கிருஷ்ணகிரி ஒருங்கிணைந்த மாவட்டத்தில் 1.15 லட்சம் ஏக்கரில் மா சாகுபடி செய்யப்பட்டுள்ளது. மாம்பழத்திற்கு பெயர் பெற்ற, தர்மபுரி சிப்ஹாட்டில் அரசே மாம்பழக்கூழ் தயாரிக்கும் ஆலை ஆரம்பித்து, மாம்பழக்கூழை சிறிய ரக பாக்கெட்டில் அடைத்து, பள்ளி மாணவர்களுக்கு வாரம் ஒருமுறை வழங்கும் நீண்ட கால திட்டத்தை கொண்டுவர வேண்டும்.

தர்மபுரி மாவட்டத்தில் பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டில் 74 ஏரிகளும், ஊரகத்துறை கட்டுப்பாட்டில் 650 ஏரிகளும் உள்ளன. இந்த ஏரிகள் முறையாக பராமரிப்பு இல்லாமல், முட்செடிகள் வளர்ந்து காடுகள் போல் உள்ளன. இந்த முள்செடிகளை அகற்றி, ஏரிகளை தூர்வார வேண்டும். தர்மபுரி மாவட்டத்தில் 10 ஆயிரம் ஏக்கருக்கு மேல் மலர்கள் சாகுபடி செய்யப்பட்டுள்ளது.

இதில் பெரும்பாலான விவசாயிகள், இரவு நேரங்களில் பூச்சிகள் பூக்களை தாக்காமல் இருக்க மின்விளக்கு பொருத்தி இருப்பார்கள். அதற்கான மின் செலவு மாதம் ரூ.10ஆயிரம் வரை ஆகிறது. ஒரு விவசாயி ரூ.16ஆயிரம் அதிகபட்ச மின் கட்டணமாக செலுத்தி உள்ளார்.

நெசவுக்கு எப்படி மின்கட்டணம் சலுகை வழங்கப்படுகிறதோ, அதுபோன்று பூந்தோட்டங்களில் உள்ள மின் இணைப்புகளுக்கு 500 யூனிட் வரை மின்சாரம் சலுகை வழங்க வேண்டும். கோயில் நிலங்களை விவசாயிகளுக்கு குறைந்த குத்தகையில் பயிர் சாகுபடி செய்ய வழங்க வேண்டும்.

தர்மபுரி மாவட்டத்தில் 2 கூட்டுறவு சர்க்கரை ஆலைகள் உள்ளன. இந்த ஆலைகள் மூலம் கரும்பு சாகுபடி பரப்பை அதிகரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று, சமீபத்தில் சர்க்கரை ஆலைகளை ஆய்வு செய்த அமைச்சர் ராஜேந்திரன் அதிகாரிகளிடம் தெரிவித்தார். ஆனால் அதிகாரிகள் கரும்பு சாகுபடி பரபரப்பை அதிகரிக்க அதற்கான நடவடிக்கை எடுத்தமாதிரி தெரியவில்லை. தற்போது தர்மபுரி மாவட்டத்தில் கரும்பு விதை தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

கோபாலபுரம், பாலக்கோடு கூட்டுறவு சர்க்கரை ஆலைகள் தங்கள் ஆலையின் வளாகத்தில் கரும்பு பயிர்களை வளர்த்து, விதை பயிராக விவசாயிகளுக்கு வழங்க வேண்டும். ஈரோட்டில் இருந்து வாங்கி தருவதை அதிகாரிகள் தவிர்க்க வேண்டும்.

பாலக்கோடு வட்டம் பாளையம் கிராமம் அருகே கல்குவாரி அமைக்க முயற்சி செய்து வருகின்றனர். அதற்கான நடந்த கருத்துகேட்பு கூட்டத்தில், விவசாய நிலங்கள் பாதிக்கப்படும் என்று 5ஆயிரம் குடும்பத்தினர் ஆட்சேபனை தெரிவித்துள்ளனர். இவ்வாறு விவசாயிகள் கூறினர்.

விவசாயிகளின் கேள்விக்கு மாவட்ட கலெக்டர் பதில் அளித்து பேசியதாவது: மாம்பழங்களை அரசே கொள்முதல் செய்வதாக கூறியுள்ளது. பாம்பழ கூழ் பள்ளி மாணவர்களுக்கு வழங்க அரசு பார்வைக்கு கொண்டுசெல்லப்படும். நீர்பாசன திட்டப்பணிகள் விரைவுப்படுத்தப்படும். தர்மபுரி மாவட்டத்தில் தன்னார்வலர்கள் மூலம் 98 ஏரிகள் முட்செடிகள் அகற்றிவிட்டு, தூர்வாரப்பட்டுள்ளது. மேலும் ஊரகத்துறை மூலம் புதியதாக 67 ஏரிகள் தூர்வார நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

கரும்பு சாகுபடி பரப்பை அதிகரிக்க துரித நடவடிக்கை மேற்கொள்ளப்படும். தர்மபுரி மாவட்டத்தில் ஜனவரி முதல் டிசம்பர்-2025 திங்கள் வரையிலான காலத்திற்கு இயல்பான மழையளவு 942 மில்லி மீட்டர் பெய்ய வேண்டும்.

ஆனால் இதுவரை 272.71 மில்லி மீட்டர் மழை பெய்துள்ளது. தர்மபுரி மாவட்டத்தில் வேளாண்மை உழவர் நலத்துறையில் 2025-2026ம் ஆண்டிற்கு 1,72,280 ஹெக்டர் பரப்பளவில் நெல், சிறுதானியங்கள், பயிறுவகைகள் உள்ளிட்ட உணவு தானிய பயிர்கள் மற்றும் எண்ணெய்வித்துக்கள், பருத்தி, கரும்பு சாகுபடி பரப்பாக இலக்கு நிர்ணயிக்கப்பட்டதில், கடந்த 25ம் தேதி வரை 4180 ஹெக்டர் பரப்பு சாகுபடி செய்யப்பட்டு உள்ளது. இவ்வாறு கலெக்டர் பேசினார்.

The post மாவட்டத்தில் சீசன் முடியும் தருவாயில் கொள்முதல் பாதிக்கப்பட்ட மா விவசாயிகளுக்கு நிவாரணம் appeared first on Dinakaran.

Tags : Dharmapuri ,Dharmapuri district ,Collector Sathees.… ,Dinakaran ,
× RELATED 10 நாட்களுக்கு ஒருமுறை கொளத்தூருக்கு...