×

பாக். ராணுவ தளபதி அசீம் முனீருக்கு வெள்ளை மாளிகையில் விருந்து: போர் நிறுத்தத்துக்கு இரு நாட்டு தலைவர்களே காரணம் என டிரம்ப் பல்டி

நியூயார்க்: ஜம்மு காஷ்மீரில் பஹல்காமில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் சுற்றுலா பயணிகள் உட்பட 26 பேர் உயிரிழந்தனர். இதனையடுத்து பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் இருந்த தீவிரவாத முகாம்கள் மீது இந்தியா ஆபரேஷன் சிந்தூர் என்ற பெயரில் தாக்குதல் நடத்தியது. இதில் தீவிரவாத முகாம்கள் அழித்து தரைமட்டமாக்கப்பட்டது. இதற்கு பதிலடியாக இந்தியா மீது பாகிஸ்தான் ராணுவம் தாக்குதலை தொடங்கியது. சுமார் 4 நாட்கள் இரு நாடுகளும் ஒருவரை ஒருவர் கடுமையாக தாக்கி கொண்ட நிலையில் இரு நாடுகளுக்கும் இடையே போர் மூளும் அபாயம் ஏற்பட்டது. இந்நிலையில் இரு நாடுகளும் தாக்குதலை நிறுத்திக்கொள்வதாக அறிவித்தன. இதற்கு சற்று முன்னதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தனது மத்தியஸ்தம் செய்ததின்பேரில் இருநாடுகளும் தாக்குதலை கைவிட்டதாக கூறினார். வர்த்தக அடிப்படையில் தான் மேற்கொண்ட பேச்சுவார்த்தையின் அடிப்படையில் தாக்குதல் கைவிடப்பட்டதாகவும் டிரம்ப் தெரிவித்தார். அதிபரின் இந்த பேச்சு பேசுபொருளானது. அதிபர் டிரம்ப் தொடர்ந்து தலையீட்டின் பேரில் தான் இந்தியா-பாகிஸ்தான் போர் நிறுத்தத்துக்கு ஒப்புக்கொண்டதாக கூறி வந்தார்.

இந்நிலையில் கனடாவில் நடந்த ஜி7 மாநாட்டிற்கு இடையே பிரதமர் மோடி அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்புடன் தொலைபேசியில் பேசினார். ஆபரேஷன் சிந்தூர் குறித்து அவரிடம் விளக்கமளிக்கப்பட்டதாக தெரிகிறது.
இதனிடையே பாகிஸ்தான் ராணுவ தளபதி அசீம் முனீர் அதிபர் டிரம்ப்பை சந்தித்தித்தார். அதிபருடன் அவர் உணவருந்தினார். இது மேலும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்நிலையில் இந்தியா -பாகிஸ்தான் நாட்டை சேர்ந்த மிகவும் புத்திசாலி தலைவர்கள் போரை தொடர வேண்டாம் என்று முடிவெடுத்தனர் என்று அதிபர் டிரம்ப் முதல் முறையாக தெரிவித்துள்ளார். பாகிஸ்தான் ராணுவ தளபதி மார்ஷல் ஜெனரல் அசீம் முனிரை சந்தித்த பின் ஓவல் அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்த அமெரிக்க அதிபர் டிரம்ப், ‘‘முனீரை சந்தித்ததில் பெருமை அடைகிறேன். பாகிஸ்தானுக்கு ஈரான் பற்றி நன்கு தெரியும். அவர்கள் எதிலும் மகிழ்ச்சி அடையவில்லை. இஸ்ரேலுடன் அவர்கள் மோசமாக இருக்கிறார்கள் என்பதல்ல. அவர்கள் உண்மையில் இருவரையும் அறிவார்கள். அவர்கள் என்ன நடக்கிறது என்று பார்க்கிறார்கள்.

நான் அவரோடு இங்கு இருப்பதற்கு காரணம் போருக்கு செல்லாமல் போரை முடிவுக்கு கொண்டு வந்ததற்கு நன்றி சொல்ல விரும்புகிறேன். உங்களுக்கு தெரியும். பிரதமர் மோடி சிறிது நேரத்துக்கு முன் கிளம்பிச்சென்றார். நாங்கள் இந்தியாவுடன் வர்த்தக ஒப்பந்தத்தை மேற்கொள்வதற்காக பணியாற்றி வருகிறோம். பாகிஸ்தானுடன் ஒரு வர்த்தக ஒப்பந்தத்தை மேற்கொள்ளவும் நாங்கள் பணியாற்றி வருகிறோம். அவர்கள் இருவரும் இங்கே இருக்கிறார்கள். நான் சில வாரங்களுக்கு முன் மோடியுடன் இருந்தேன். அவர் உண்மையில் இங்கே இருந்தார். ஆனால் இப்போது நாங்கள் அவருடன் பேசுகிறோம். இரண்டு புத்திசாலி தலைவர்கள், அவர்களது ஊழியர்களும் கூட, இரண்டு மிகப்பெரிய புத்திசாலிகள் அந்த போரை தொடர வேண்டாம் என்று முடிவு செய்ததில் நான் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன். அது ஒரு அணுசக்தி போராக இருந்திருக்கலாம். இரண்டு நாடுகளும் பெரிய அணுசக்தி சக்திகள். அவர்கள் ராணுவ நடவடிக்கையை நிறுத்துவது என்று முடிவு செய்தனர்” என்று தெரிவித்தார்.
இதுவரை இந்தியா-பாகிஸ்தான் தாக்குதலை நிறுத்துவதற்கு தான் காரணம் என்று கூறிவந்த அதிபர் டிரம்ப் முதல் முறையாக தனது கருத்தில் இருந்து மாறுபட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

 

The post பாக். ராணுவ தளபதி அசீம் முனீருக்கு வெள்ளை மாளிகையில் விருந்து: போர் நிறுத்தத்துக்கு இரு நாட்டு தலைவர்களே காரணம் என டிரம்ப் பல்டி appeared first on Dinakaran.

Tags : Pak. ,Army ,Asim Munir ,White House ,Trump ,New York ,Pahalgam ,Jammu ,Kashmir ,India ,Pakistan ,Operation Sindoor.… ,Pak. Army ,Chief Asim Munir ,
× RELATED ஆஸ்திரேலிய கடற்கரையில் யூதர்கள்...