அச்சிறுப்பாக்கத்தில் நேரடி நெல் கொள்முதல் நிலையம்: க.சுந்தர் எம்எல்ஏ திறந்து வைத்தார்

உத்திரமேரூர்: அச்சிறுப்பாக்கம் ஒன்றியத்தில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு பருவமழையின்போது அதிகளவில் மழை பெய்து ஏரி, கிணறு உள்ளிட்ட நீர்நிலைகள் நிரம்பின. இதனால் மகிழ்ச்சியடைந்த விவசாயிகள் நெற்பயிர் நடவு செய்தனர். தற்போது அறுவடை சீசன் களை கட்டியது. விவசாயிகள் அறுவடை செய்த நெல்லை அரசே நேரடியாக கொள்முதல் செய்ய வேண்டுமென மாவட்ட கலெக்டருக்கு கோரிக்கை மனுக்களை விவசாயிகள் கொடுத்தனர்.

இந்நிலையில், பெரும்பேர் கண்டிகை ஊராட்சியில் நேரடி நெல்கொள்முதல் நிலையம் திறப்பு விழா நடந்தது. ஒன்றியக்குழு பெருந்தலைவர் கண்ணன் தலைமை தாங்கினார். கவுன்சிலர்கள் பார்த்தசாரதி, பொன்மலர் சிவக்குமார், முன்னிலை வகித்தனர். ஊராட்சி தலைவர் சாவித்திரி சங்கர் வரவேற்றார். காஞ்சிபுரம் தெற்கு மாவட்ட செயலாளர் க.சுந்தர் எம்எல்ஏ, நெல் கொள்முதல் நிலையத்தை ரிப்பன் வெட்டி திறந்து வைத்து முதல் விற்பனை துவக்கி வைத்தார்.

இதுகுறித்து எம்எல்ஏ க.சுந்தர் கூறுகையில், ‘‘இந்தாண்டு அதிகளவில் அரசின் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களை திறந்து விவசாயிகளிடம் இருந்து நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. விவசாயிகளுக்கு பெரிய அளவில் லாபம் கிடைத்துள்ளதால் மகிழ்ச்சியடைந்துள்ளனர். திராவிட மாடல் ஆட்சியின் சாதனைகள் உங்களுக்கெல்லாம் தெரியும். நீங்கள் பயன்பெற்று வருகிறீர்கள். அரசு பேருந்தில் இலவசம், கல்லூரிகளுக்கு செல்லும் மாணவிகளுக்கு ஆயிரம் ரூபாய் ஊக்கத்தொகை, விரைவில் பெண்களுக்கான உரிமைத்தொகை ஆயிரம் வழங்கப்பட உள்ளது. இதுபோன்று பல்வேறு நலத்திட்ட உதவிகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கி வருகிறார். குறிப்பாக, பெண்களுக்கு அதிக திட்டங்களை செயல்படுத்தி வருகிறார்” என்றார்.

இதில், மாவட்ட துணை செயலாளர் கோகுலக்கண்ணன், பேரூர் செயலாளர் எழிலரசன், ஆதிதிராவிடர் நலக்குழு துணை அமைப்பாளர் சிவக்குமார், அவைத்தலைவர் ரத்தினவேலு, கல்விக்குழு தலைவர் லட்சுமணன், ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் ராமன் மற்றும் கிராம மக்கள், விவசாயிகள், அரசு அதிகாரிகள் கலந்துகொண்டனர்.

The post அச்சிறுப்பாக்கத்தில் நேரடி நெல் கொள்முதல் நிலையம்: க.சுந்தர் எம்எல்ஏ திறந்து வைத்தார் appeared first on Dinakaran.

Related Stories: