மாநகரில் அதிகரிக்கும் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த நெல்லை வடக்கு, தெற்கு பைபாஸ் சாலை நான்கு வழிச்சாலையாக விரிவாக்கம்

*புதிதாக பாலமும் அமைக்கப்படுகிறது

நெல்லை : மாநகரில் அதிகரிக்கும் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த நெல்லை வடக்கு, தெற்கு பைபாஸ் சாலையை நான்கு வழிச்சாலையாக மாற்றும் நடவடிக்கைகள் தொடங்கப்பட்டுள்ளன. வடக்கு பைபாஸ் சாலையில் புதிதாக பாலமும் அமைக்கப்படுகிறது.நெல்லை மாவட்டத்தில் நாளுக்கு நாள் போக்குவரத்து நெரிசல் அதிகரித்து வருகிறது. இதை தவிர்க்க பல மாற்று ஏற்பாடுகளை மாவட்ட, மாநகர நிர்வாகம் செய்து வருகிறது. குறிப்பாக மாநகரில் அதிகரிக்கும் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த ஒருவழிச்சாலை முறை, சாலைகள் விரிவாக்கம் போன்ற திட்டங்கள் அமல்படுத்தப்படுகின்றன.

இத்திட்டத்தில் ஏற்கனவே பாளை மத்தியசிறை அருகே தொடங்கி டக்கரம்மாள்புரம் வரையும், தச்சநல்லூரில் தொடங்கி தாழையூத்து வரையிலான சாலையும், டவுன் ஸ்ரீபுரம் தொடங்கி ஆர்ச் வரையிலான சாலையும் விரிவாக்கம் செய்யப்பட்டது. இதை தொடர்ந்து பாளை பஸ்நிலையம் அருகே தொடங்கி கிருஷ்ணா மருத்துவமனை வரையுள்ள சாலை நான்கு வழிச்சாலையாக மாற்றப்பட உள்ளது.

மாநகரில் வடக்கு, தெற்கு பைபாஸ் சாலைகள் முக்கிய சாலைகளாக உள்ளன. புதிய பஸ் நிலையத்தில் இருந்து மதுரை, சென்னை மார்க்கமாக வடபகுதிகளுக்கு செல்லும் பஸ்களும், சங்கரன்கோவில், ராஜபாளையம், தென்காசி செல்லும் பஸ்களும் இந்த சாலைகளை பயன்படுத்துகின்றன. மாநகரில் இந்த சாலையின் இருபுறமும் பல்வேறு வர்த்தக நிறுவனங்கள் தோன்றி வருவதால் நாளுக்கு நாள் போக்குவரத்து நெரிசல் அதிகரித்து வருகிறது.

எனவே இந்த சாலையையும் விரிவாக்கம் செய்யவேண்டும் என்ற கோரிக்கை நீண்டநாளாக உள்ளது. தற்போது விடிவு ஏற்பட்டுள்ளது. தச்சநல்லூரில் தொடங்கி வண்ணார்பேட்டை வழியாக புதிய பஸ்நிலையம் வரை சுமார் 7.5 கிமீ தூரம் உள்ள வடக்கு, தெற்கு பைபாஸ் சாலையில் வண்ணார்பேட்டையில் மட்டும் அகலமான மேம்பாலம் உள்ளது. இந்த சாலையில் 2 இடங்களில் ரயில்வே கிராசிங், கால்வாய் கடக்கும் பகுதியாக உள்ளது.

இப்பகுதிகளை விரிவாக்கம் செய்து நான்கு வழிச்சாலையாக மாற்ற நெடுஞ்சாலைத்துறை நடவடிக்கை எடுத்துள்ளது. வடக்கு பைபாஸ் சாலையில் ஒரு புதிய பாலமும் அமைக்கப்பட உள்ளது. இதற்காக பலகட்டமாக சர்வே பணி நடந்தது. இப்பணிகள் முடிக்கப்பட்டு தற்போது அரசு அனுமதித்துள்ளதால் சாலை விரிவாக்கப்பணிகளை நெடுஞ்சாலைத்துறையினர் துரிதமாக தொடங்கி உள்ளனர். விரிவாக்கத்திற்கு வசதியாக சாலையோரங்களில் குறியீடுகள் செய்யப்பட்டுள்ளன. அடுத்த கட்டமாக ஆக்கிரமிப்புகளை அகற்ற உள்ளனர்.

தெற்கு பைபாஸில் அம்பை சாலையில் சிக்னல் அருகே பாலம் அமைக்கும் திட்டம் இருந்தாலும் தற்போது நான்கு வழிச்சாலை மட்டுமே அமைக்கப்பட உள்ளதால் சிக்னல் பகுதி கூடுதலாக விரிவாக்கம் செய்யப்படும். அடுத்தக்கட்ட திட்டத்தில் இங்கு பாலம் அமைய வாய்ப்புள்ளது.நெல்லை வடக்கு, தெற்கு பைபாஸ் சாலைகள் நான்கு வழிச்சாலையாக மாறும்போது இப்பகுதியில் போக்குவரத்து மேலும் சீராகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

21மீ அகலத்தில் சாலை

வடக்கு, தெற்கு பை பாஸ் சாலையில் மொத்தம் உள்ள 7.5 கிமீ தூரத்தில் முதற்கட்டமாக 5.8 கிமீ அளவிற்கு பாலம் பணி முடிக்கப்படும். தொடர்ந்து 2ம் கட்டமாக மீதி பணிகள் நடைபெறும். தெற்கு பைபாஸ் சாலையில் உள்ள பாளையங்கால்வாய் குறுகிய பாலமும் விரிவாக்கம் செய்யப்படுகிறது. இதற்கான பணிகள் ெதாடங்கிவிட்டன. வடக்கு பைபாஸ் சாலையில் தற்போதுள்ள தாமிரபரணி ஆற்றுப்பாலத்தின் அருகே மற்றொரு பாலம் அமைக்கும் பணியும் தொடங்கப்பட்டுள்ளது.

19 சிறிய கல்வெட்டு பாலமும் குழாய்கள் அகற்றப்பட்டு பெட்டி பாக்ஸ் பாலமாக மாற்றப்படும். சாலையின் மையப்பகுதியில் 1.20 மீட்டர் அகலத்திற்கு சென்டர் மீடியன் அமைக்கப்படும். 2 ஆண்டுகளுக்கு பணிகளை முழுமையாக முடிக்கவும் தோராயமாக ரூ.51 கோடியில் இப்பணியை மேற்கொள்ளவும் திட்டமிடப்பட்டுள்ளது.

The post மாநகரில் அதிகரிக்கும் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த நெல்லை வடக்கு, தெற்கு பைபாஸ் சாலை நான்கு வழிச்சாலையாக விரிவாக்கம் appeared first on Dinakaran.

Related Stories: