×

ஒரத்தநாடு பேரூராட்சியில் மலைபோல் தேங்கி கிடக்கும் குப்பைகள் தீவைத்து எரிப்பதால் நோய் பரவும் அபாயம்

*நடவடிக்கை எடுக்க மாவட்ட நிர்வாகத்துக்கு கோரிக்கை

தஞ்சாவூர் : ஒரத்தநாடு பேரூராட்சி பகுதியில் குப்பைகளை மலைபோல் குவித்து போட்டு தீவைத்து எரிப்பதால் நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே குப்்பைகளை அப்புறப்படுத்த வேண்டும் என தஞ்சாவூர் மாவட்ட நிரவாகத்துக்கு பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு பேரூராட்சியில் முத்தம்மாள் இரண்டாம் தெரு, சரபோஜி, நகர், கலைஞர் நகர் உள்ளன. இந்த பகுதியில் சுமார் 450க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இந்த தெருக்களின் அருகில் அரசு கால்நடை மருத்துவக்கல்லூரி ஆராய்ச்சி நிலையம், அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, கல்வியியல் கல்லூரி, தொழிற்பயிற்சி நிலையம், மாணவ, மாணவியர் விடுதி, போன்ற முக்கியமான அரசு கல்வி நிறுவனங்கள் உள்ளன.

கால்நடை மருத்துவக்கல்லூரி பக்கவாட்டு சுவர் அருகில் பேரூராட்சிக்குட்பட்ட 15 வார்டுகளில் சேரும் குப்பை, மற்றும் இறைச்சிகளின் கழிவுகளை வாகனம் மூலம் தினம்தோறும் கொட்டி வருகின்றனர். இதனால் குப்பை மலை போல் தேங்கி கிடக்கிறது. இதன் காரணமாக தொற்றுநோய் அபாயம் ஏற்பட்டுள்ளது.

அது மட்டுமின்றி இரவு நேரங்களில் குப்பைகளை மர்ம நபர்கள் சிலர் தீயிட்டு கொளுத்துவதால் குப்பையில் கிடக்கும் பிளாஸ்டிக், பாலிதீன் பை போன்ற பொருட்கள் எரியாமல் புகையாக மட்டுமே காற்றில் பரவுகிறது. அந்த புகையை சுவாசிப்பதால் நோய்களால் பொதுமக்கள் பாதிக்கப்படுகின்றனர். இப்போது ஆடி மாதம் என்பதால் குப்பை கொட்டப்படும் இடத்தின் அருகில் துர்நாற்றம் வீசுகிறது. அங்குள்ள காளியம்மன் கோயில், புற்று கோயிலுக்கு வரும் பெண்கள் மிகுந்த சிரமத்திற்குள்ளாகின்றனர்.

ஆடி மாத காற்றில் குப்பைகள் காற்றில் பறந்து அருகில் உள்ள அரசு ஆண்கள் பள்ளி மைதானத்தை ஆக்கிரமித்து விடுகிறது. அங்கு மாணவர்கள் விளையாடுவதிலும் பெரும் சிரமம் ஏற்படுகிறது. குப்பை கிடக்கும் இடம் கக்கன் கிராமத்திற்கு செல்லும் முக்கிய சாலை. சாலையோரத்தில் பேருராட்சியால் கட்டப்பட்ட கழிவறைகள் பூட்டியே கிடக்கிறது. எனவே மாவட்ட நிரவாகம் நடவடிக்கை எடுத்து குடியிருப்பு பகுதிகளின் அருகில் கொட்டப்பட்ட குப்பைகளை அப்புறப்படுத்த வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

The post ஒரத்தநாடு பேரூராட்சியில் மலைபோல் தேங்கி கிடக்கும் குப்பைகள் தீவைத்து எரிப்பதால் நோய் பரவும் அபாயம் appeared first on Dinakaran.

Tags : Oratha Nadu Municipal Corporation ,Thanjavur ,Orathanadu ,
× RELATED தஞ்சாவூர் மருத்துவமனை வளாகத்தில்...