×

ஓரசோலை கிராமத்தில் சுற்றுச்சூழல் விழிப்புணர்வு கருத்தரங்கு

ஊட்டி : கோத்தகிரி அருகே உள்ள ஓரசோலை கிராமத்தில் தூய்மை கிராமம் என்ற சுற்றுச்சூழல் விழிப்புணர்வு கருத்தரங்கு மற்றும் பேரணி நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு பொரங்காடு சீமை தலைவர் ராமாகவுடர் தலைமை தாங்கினார். ஊர் தலைவர் பாபு முன்னிலை வகித்தார்.

நிகழ்ச்சியில், திடக்கழிவு மேலாண்மை, பிளாஸ்டிக் ஒழிப்பு, மரம் நடுதல் ஆகிய தலைப்புகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. ஓரசோலை கிராமத்திலிருந்து ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி வரை விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றது. கிராம சாலையின் இரு புறமும் மண்டி கிடந்த காட்டுச் செடிகள் அகற்றப்பட்டன. மேலும், சாலையில் இருந்த குப்பைகளும் அகற்றப்பட்டன.

நடுநிலைப்பள்ளி வளாகத்தில் தூய்மை பணிகள் மேற்கொள்ளப்பட்டு சுமார் 100 மரக்கன்றுகள் நடப்பட்டன. பின்னர் நடைபெற்ற கருத்தரங்கில் ராமகிருஷ்ணன் சிறப்பு அழைப்பாராக கலந்துக் கொண்டு, சுற்றுச்சூழலை தூய்மையாக வைத்துக் கொள்வதின் முக்கியத்துவம் குறித்து மருத்துவ ரீதியில் விளக்கினார். தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் மாநில கருத்தாளர் கே.ஜே.ராஜு சிறப்பு கருத்தாளராக கலந்து கொண்டு பேசுகையில்:

புவி வெப்பத்திற்கு காரணமான கார்பன் டை ஆக்சைடு என்ற பசுமைக்குடில் வாயு ஏற்கனவே 46.5 கோடி மெட்ரிக் டன் அளவிற்கு காற்று மண்டலத்தில் கலந்து விட்டது. அண்மையில் நடந்த ஆய்வில் லட்சக்கணக்கான வருடங்களாக அண்டார்டிகா போன்ற பனிப் பகுதிகளில் அடைப்பட்டு கிடந்த கார்பன் டை ஆக்சைடு புவி வெப்பம் காரணமாக பனி மலைகள் உருகுவதால் அதன் வழியாக வெளிப்படுகிறது என கண்டறியப்பட்டுள்ளது.

அதேபோல் பூமியின் ஆழத்தில் அடைப்பட்டு கிடந்த கார்பன் டை ஆக்சைடுகளும் உலகில் ஓடும் அனைத்து ஆறுகளின் வழியாக தற்போது வெளியேறுகிறது என கண்டறியப்பட்டுள்ளது.

ஒரு கார்பன் டை ஆக்சைடு அணு 200 வருடம் உயிர் வாழும். உலக அளவில் மின்சார உற்பத்தியின் போது பூமியில் உள்ள கார்பன் டை ஆக்சைடில் 40 சதவீதம் வெளியிடப்படுகிறது.

போக்குவரத்து வாகனங்கள் மூலம் 18 சதவீதம் கார்பன் டையாக்சைடு வெளிப்படுகிறது. நமது நாட்டில் கடந்த ஆண்டு 100 கோடி டன் நிலக்கரி உற்பத்தி செய்யப்பட்டதாக நமது பிரதமர் பெருமையுடன் கூறினார். அதனால், ஏற்பட்ட வளர்ச்சியோடு கூட 80 கோடி டன் கார்பன் டை ஆக்சைடும் வெளிப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது சுற்றுச்சூழல் விழிப்புணர்வு என்பது நாட்டின் வளர்ச்சிக்கு எதிரான கருத்து இல்லை.

பூமியின் தாங்கும் திறனுக்கு ஏற்ப வளர்ச்சி திட்டங்கள் அமைய வேண்டும். இதை தாக்குப் பிடிக்கும் திறன் என்று கூறுவார்கள். உலக அளவில் அதிக கார்பன் டை ஆக்சைடு வெளிப்படுத்தும் நாடுகளில் இந்தியா மூன்றாவது இடத்தில் உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

பூமி இருந்தால்தான் நாம் வாழ்வு இருக்கும். தற்போது உலக மக்கள் 1.8 பூமி கொடுக்கும் வளங்களை நுகர்ந்து வருகின்றனர். நமது தேசத் தந்தை மகாத்மா காந்தி கூறியது போல இயற்கை நம் அனைவருக்கும் தேவையான அளவிற்கு வளங்களை கொண்டு உள்ளது.

ஆனால், ஒரு தனி மனிதனின் பேராசைக்கு இந்த ஒரு பூமி போதாது என்று கூறியதை மக்கள் கவனத்தில் கொள்ள வேண்டும், என்றார். முன்னதாக ஒரசோலை சிங்கங்கள் கிராம நற்பணி மன்றத்தின் செயலர் சுரேஷ் நஞ்சன் வரவேற்றார்.

பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்கள் ஆண்டிகவுடர் மற்றும் கவிதா ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். நிகழ்ச்சி ஏற்பாடுகளை பள்ளி தலைமை ஆசிரியர் நஞ்சுண்டன் செய்திருந்தார்.

The post ஓரசோலை கிராமத்தில் சுற்றுச்சூழல் விழிப்புணர்வு கருத்தரங்கு appeared first on Dinakaran.

Tags : awareness ,Oracholai village ,Ooty ,Clean Village ,Kotagiri ,Porangadu ,Seemai ,Ramakoudhar ,Village ,Babu ,Oracholai ,Dinakaran ,
× RELATED இந்தியப் பொருட்கள் மீதான அமெரிக்க வரி:...