கே.பாலகிருஷ்ணன் (மார்க்சிஸ்ட் மாநிலச் செயலாளர்): ஒன்றிய அரசின் துறை என்று மாறி பாஜவின் துறையாக அமலாக்கத்துறை செயல்பட்டு வருகிறது. பாஜ ஆட்சி செய்யும் இடங்களில் ஊழல் நடக்கவில்லையா. திமுகவை இரண்டாக உடைக்க வாய்ப்பு இல்லை, தமிழகத்தில் எம்எல்ஏக்களை விலைக்கு வாங்கவும் முடியவில்லை. ஆதலால் இதுபோன்ற செயல்களில் பாஜ ஈடுபடுகிறது. அனைவரும் ஒன்று சேர்ந்து பாஜவை வீழ்த்துவது தான் எதிர்கட்சிகளின் நோக்கமாக உள்ளது.
முத்தரசன் (இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர்): உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி மற்றும் அவரது குடும்பத்தினர் மீது அமலாக்கத்துறை சோதனை தாக்குதல் நடத்தி வருகிறது. முந்தைய ஆட்சியில் சொத்து குவிப்பு மற்றும் நில அபகரிப்பு என குற்றம்சாட்டப்பட்ட வழக்குகளில் இருந்து அமைச்சர் பொன்முடியும் அவரது குடும்பத்தினரும் அண்மையில் தான் நீதிமன்றத்தால் விடுதலை செய்யப்பட்டனர். அவர்கள் மீதான வழக்குகளை சட்டரீதியாக சந்திக்க அவர்கள் ஒரு போதும் தயக்கம் காட்டியதில்லை. எனவே, அமலாக்கத்துறை கூறும் குற்றச்சாட்டையும் எதிர் கொண்டு முறியடிப்பார்கள் என்பது உறுதியாகும். பெங்களூருவில் கூடும் எதிர்கட்சி தலைவர்கள் கூட்டத்தில் இருந்து மக்களின் கவனத்தை திசை திருப்ப அமலாக்கத் துறையை பாஜ ஒன்றிய அரசு பயன்படுத்தி இருக்கிறது. இந்த மலிவான செயலை வன்மையாகக் கண்டிக்கிறோம்.
எம்.எச்.ஜவாஹிருல்லா எம்எல்ஏ (மமக தலைவர்): பாஜ ஆட்சி செய்யாத மாநிலங்களில் அமலாக்க துறையின் வாயிலாக மிரட்டி ஆட்சியாளர்களைப் பணிய வைக்கலாம் என்று ஒன்றிய பாஜ அரசு முயற்சி மேற்கொண்டு வருகிறது. ஏற்கனவே அமைச்சர் செந்தில் பாலாஜியின் வீடுகளில் சோதனை நடத்தி சர்ச்சையை உண்டாக்கிய ஒன்றிய அரசு தற்போது உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடிக்கு அமலாக்க துறை மூலமாக நெருக்கடியை வழங்க முயற்சி செய்கிறது. தொடர்ச்சியாக அமலாக்கத் துறையை கைப்பாவையாக மாற்றி இருக்கும் பாஜவின் இந்த செயல் கண்டிக்கத்தக்கது.
The post எதிர்க்கட்சிகளை ஒடுக்க அமலாக்கத்துறையை பயன்படுத்தும் பாஜ: தலைவர்கள் குற்றச்சாட்டு appeared first on Dinakaran.